Sunday, December 10, 2017

நல்லா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்சத செய்வோம்'

Published : 09 Dec 2017 09:32 IST

ஒய்.ஆண்டனி செல்வராஜ்



சிலையை சுத்தம் செய்தபோது..



நாகமுத்து


பெரும்பாலும் நம்மவர்கள் நல்ல உத்தியோகம் பார்த்து பணம் சம்பாதிக்க கடவுளை வேண்டுவார்கள். பிறகு, சேர்த்த பணம் பத்திரமாக இருக்க வேண்டும் என்று வரம் கேட்பார்கள். ஆனால், “சம்பாதிச்சது போதும்; நம்மள நல்லா வெச்சிருக்கிற சாமிக்காக நம்மால முடிஞ்ச சேவையை செய்வோமே” என்கிறார் எஸ்.நாகமுத்து.

10 ஆண்டுகளுக்கும் மேலாக..

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வழக்கமாக போகிறவர்கள் நாகமுத்துவை நிச்சயம் பார்த்தி ருக்கலாம். அம்மன் சந்நிதியில் உள்ள சிலை களை தனி ஆளாக சுத்தம் செய்து கொண்டிருப்பார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சேவையை எவ்வித ஊதியமும் பெறாமல் செய்து கொண்டிருக்கிறார் நாகமுத்து.

மதுரை சம்மட்டிபுரத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கு இப்போது வயது 71. டி.வி.எஸ் கம்பெனியில் மெக்கானிக்காக பணியில் இருந்தவர். 2003-ல் ஓய்வுபெற்றதும் மீனாட்சியம்மனுக்கு சேவை செய்ய வந்துவிட்டார். இங்குள்ள அம்மன் சந்நிதியில் அமைந்துள்ள உலோகச் சிலைகள் நித்தமும் தங்கம் போல் ஜொலிக்கிறது என்றால் அதற்குக் காரணம் நாகமுத்து. ஸ்டூலில் அமர்ந்து கொண்டு தினமும் அந்த சிலைகளை ஆயில் போட்டு பாலீஷ் செய்கிறார். இதேபோல் சண்டிகேஷ்வரர் சந்நிதியைச் சுற்றி பக்தர்கள் கொட்டி வைக்கும் திருநீற்றையும் அவ்வப்போது சுத்தம் செய்கிறார். இந்தப் பணிகளைச் செய்வதற்காக தினமும் காலை 10 மணிக்கெல்லாம் கோயிலில் ஆஜராகிவிடும் நாகமுத்து, மாலை 5 மணிக்குத்தான் கோயிலை விட்டு வருகிறார்.

“பகலெல்லாம் மீனாட்சியம்மன் கோயிலே சரணம் என கிடக்கும் நான், பணியில் இருந்த காலத்தில் இந்தக் கோயிலுக்குள் ஒருமுறைகூட வந்ததில்லை தெரியுமா?” என்று சொல்லும் நாகமுத்து, “அந்தக் காலத்துல சித்திரைத் திருவிழாவுக்கு மீனாட்சி யம்மன் கோயிலில் அலங்கார வேலைகள் செய்யுறதுக்காக எங்க ஊருப்பக்கம் இருந்து ஆட்கள் வரு வாங்க. அப்ப, எங்கப்பாவோட நானும் வருவேன். அப்பக்கூட நான் கோயிலுக்குள்ள வரமாட்டேன்.

பிடித்தமான வேலை

என்னமோ தெரியல, ரிட்டையர் ஆனதும் மீனாட்சி மீது என்னையும் அறியாத ஒரு பக்தி. கோயிலுக்கு சுவாமி சிலைகளை சுத்தம் செய்யப் போறேன்னு பொண்டாட்டி, புள்ளை கிட்ட சொன்னேன். அவங்களும், ‘உங்களுக்குப் பிரியமானத செய்யுங்க’ன்னு என்.ஓ.சி. குடுத்துட்டாங்க. நானும் இந்த வேலையை நிம்மதியா செஞ்சுட்டு இருக்கேன்” என்கிறார் நாகமுத்து.

இன்னும் பேசிய அவர், “மீனாட்சியம்மன் கோயிலை இந்தியாவின் முதன்மையான தூய்மை கொண்ட வழிபாட்டுத்தலமாக அறிவிச்சாங்க. அதுக்காக கோயில் ஊழியர்களைப் பாராட்டுனப்ப, என்னையும் அழைத் துப் பொன்னாடை போர்த்தினாங்க. அது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய கவுரவம். மேலமாசி வீதியில் இருக்குற டாக்டர் ஒருத்தர் இந்த சிலைகளைத் துடைக்க பனியன் வேஸ்ட் துணிகளை வாங்கிக் குடுக்கிறார். பாலீஷ் ஆயிலை நானே வீட்டுல தயார் செஞ்சு எடுத்துட்டு வந்துருவேன். கோயிலுக்குள்ள நான் வந்து போறதுக்கு தனியா எனக்கு பாஸ் குடுத்துருக்காங்க.

இன்னும் எதுக்கு சம்பாதிக்கணும்?

சொந்த வீடு இருக்கு. என்னோட மகன் கைநிறைய சம்பாதிக்கிறதால சாப்பாட்டுக்குப் பிரச்சினை இல்லை. அப்புறம் இன்னும் எதுக்காக சம்பாதிக்கணும்? அதுக்குப் பதிலா, நம்மள இந்தளவுக்கு சந்தோஷமா வெச்சிருக்கிற சாமிக்கு நம்மால முடிஞ்ச வரைக்கும் சேவை செய்வோமே” என்று சொன் னார்.


வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழத் தெரிந்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அவர்களில் ஒருவர்தான் இந்த நாகமுத்து.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment

ED misused power: HC; grants relief to edu society dir’s son

ED misused power: HC; grants relief to edu society dir’s son Swati.Deshpande@timesofindia.com 26.10.2024  Mumbai : Non-cooperation cannot be...