பலி கேட்கும் பணிச்சுமை!
“நமது இளைஞர்கள் நீண்ட நேரம் உழைக்கத் தயங்காதவர்கள். என் மகனும் அப்படித்தான். அதற்காக, அவர்கள் தங்கள் உயிரையே இழக்கும் அளவுக்குக் கடுமையாக, நீண்ட நேரம் வேலை பார்க்கும் அவலத்தை இனியும் தொடர விடாதீர்கள்” என்று ஜப்பான் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஒரு தாய். மிஷியோ நிஷிகாகி எனும் அந்தப் பெண்மணியின் மகன் நவோயாவுக்கு 27 வயது. இளம் வயதிலிருந்தே கணினி மீது காதலுடன் வளர்ந்தவன். கடும் போட்டிகள் நிறைந்த ஜப்பான் தொழில்நுட்பத் துறையில் தனக்கான இடத்தை உருவாக்கிக்கொள்ளக் கடுமையாக உழைத்தான். தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. தனது முழு உழைப்பையும் அர்ப்பணிப்பையும் காட்டிய நவோயா இன்று உயிருடன் இல்லை. அவனது வேலையே அவனைக் கொன்றுவிட்டது.‘கரோஷி’ மரணங்கள்
“எப்போது அழைத்தாலும் ‘வேலைப் பளு’, ‘வேலைப் பளு’ என்றே சொல்வான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், என் தந்தையின் இறுதிச் சடங்குக்காக வீட்டுக்கு வந்தவன், தொடர்ந்து தூங்கிக்கொண்டே இருந்தான். தொடர்ந்து 37 மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழலில் அவனும் அவனது சக ஊழியர்களும் இருப்பது தெரியவந்தது” என்கிறார் மிஷியோ நிஷிகாகி.
தொடர்ந்து உடல் நலக்குறைவு ஏற்பட, அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டதால் இரண்டு ஆண்டுகளில் மரணமடைந்தான் நவோயா. ஜப்பான் ஊழியர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் கடும் பணிச்சுமை காரணமாக இறக்கும் சூழல் இருப்பதாக அந்நாட்டு அரசே தெரிவித்திருக்கிறது. வலிப்பு, மாரடைப்பு, மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை என்று ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானோர் இறக்கிறார்கள் என்கிறது, கடும் பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மரணமடைவது தொடர்பாக ஜப்பான் அரசு கடந்த ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கை. இப்படியான மரணங்களுக்கு ஜப்பானில் ‘கரோஷி’ என்று பெயர்.
1969-ல் ஜப்பான் நாளிதழ் ஒன்றின் சிப்பம் கட்டும் பிரிவில் வேலை செய்த 29 வயதான ஒரு ஊழியர் அதிகப்படியான வேலை காரணமாக உயிரிழந்தது தான் அதிகாரபூர்வமாக ‘கரோஷி’யின் முதல் கணக்கு. 1970-களில் இதுபோன்ற மரணங்கள் அதிகரிக்கத் தொடங்கியதும், இந்த வார்த்தை ஜப்பானியர்கள் மத்தியில் பரவலாகப் புழங்கத் தொடங்கியது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பானின் பிரபல விளம்பர நிறுவனமான ‘டென்ஷு’வில் 100 மணி நேரத்துக்கும் அதிகமாகத் தொடர்ந்து வேலை செய்த இளம் பெண் மஸ்துரி தகாஹஷி மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்ட பிறகு ‘கரோஷி’ தொடர்பாக சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்தன. அந்நிறுவனத்தின் இணையதளப் பிரிவில் வேலை செய்த மஸ்தூரி, தொடர்ந்து பல மணி நேரம் வேலை பார்க்க வேண்டிய சூழல் குறித்து, அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவுசெய்தார்.
உழைப்பின் வரலாறு
ஜப்பானியர்கள் உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள். அங்குள்ள பணிச் சூழல் மிகவும் கண்டிப்பானது. அவர்களே வகுத்துக்கொண்ட நியதி அது. கூடுதல் நேரம் ஒதுக்கி, கடுமையாக உழைத்தால்தான் முதலாளிகளின் அபிமானத்தைப் பெற முடியும். அதை வைத்துதான் பணி நிரந்தரம், சம்பள உயர்வு எல்லாம். முதலாளிகள், மேலதிகாரிகள் மீது பெரும் மரியாதை யும் நன்றியும் கொண்டவர்களாகவே ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். ‘எனக்கு வேலை கொடுத்ததற்குக் காலம் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்’ என்பதுதான் ஜப்பானியர்களின் இயல்பான மனநிலை. முதலாளியோ மேலதிகாரியோ அலுவலகத்திலிருந்து கிளம்புவதற்கு முன்னர் ஊழியர்கள் கிளம்புவது என்பது அவர்களைப் பொறுத்தவரை அவமதிப்புக்குரிய விஷயம்.
1920-களில் சர்வதேச நிறுவனங்களுடன் போட்டியிடுவதற்காக ஜப்பானிய நிறுவனங்கள் கடும் முயற்சியில் ஈடுபட்ட சமயத்தில், அந்நாட்டில் வேலைவாய்ப்புகள் கணிசமாக அதிகரித்தன. இரண்டாம் உலகப் போருக் குப் பின்னர் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த ஜப்பான் பொருளாதாரம் அரசு மற்றும் பெருநிறுவனங்களின் கடும் முயற்சியால் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டது. 1950-களில் அப்போதைய பிரதமர் ஷிகேரு யோஷிடா ஜப்பான் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே தனது லட்சியம் என்று அறிவித்தவர்.
பெருநிறுவனங்களை அழைத்துப் பேசிய அவர், இரண்டு விஷயங்களை முன்வைத்தார். அதன்படி நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்க வேண்டும். பதிலுக்குத் தொழிலாளர்கள் தங்கள் நிறுவனங்களுக்கு முழு விசுவாசம் காட்ட வேண்டும். ஜப்பானில் தொழிற்சங்கங்கள் வீரியத்துடன் இயங்கிவந்த காலகட்டம் அது. தொழிலாளர்களின் உரிமை தொடர்பாக சற்று உறுதியாகவே நின்றன தொழிற்சங்கங்கள்.
அரசும் பெருநிறுவனங்களும் சற்று இறங்கிவந்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தின. அதன்படி, தொழிலாளர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும்; ஆனால், குறைந்த சம்பளம்தான் வழங்க முடியும் என்று இரு தரப்பும் பேசி முடித்துக்கொண்டன. சிறிய நிறுவனங்களில் பணிப் பாதுகாப்புச் சூழலும் இல்லை. போதிய சம்பளமும் இல்லை.
இந்தச் சூழலே 1970 வரை நீடித்தது. 1980-களில் ஜப்பான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சிக் குப் பின்னர், சம்பளம் கணிசமாக உயர்ந்தது. ஆனால், வேலை நேரம் சராசரி யாக ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் எனும் நிலையில் பெரிய மாற்றம் வரவில்லை. தனியார் நிறுவனங்களில் மட்டுமல்ல, அரசு அலுவலகங்களிலும் இந்தப் பிரச்சினை உண்டு.
கண்டுகொள்ளாத உலகம்
உண்மையில், கடும் பணிச்சுமையால் உயிரிழப்பு கள் ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சிகள் அரசுத் தரப்பிலிருந்தும் எடுக்கப்படுகின்றன. ஒரு வாரத்துக்கு 40 மணி நேரத்துக்கு மேல் ஊழியர்களிடம் வேலை வாங்குவதை ஜப்பான் சட்டங்கள் அனுமதிக்கவில்லை. அதேசமயம், வேலை நேரம் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கும் வாய்ப்பையும் ஜப்பான் சட்டங்கள் வழங்குகின்றன. அதன்படி, ஊழியர்களின் பணி நேரத்தை நீட்டிக்க விரும்பினால், ஒரு நிறுவனம் அதற்கான அனுமதியை அரசிடம் பெற வேண்டும். நிறுவன முதலாளிகள், ஊழியர்கள், தொழிற்சங்கங்கப் பிரதிநிதிகள் தங்களுக்குள் பேசி சிறப்பு ஒப்பந்தங்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.
ஊழியர்களிடம் அதிகம் வேலை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும், வேலை நேரம் போக யாரும் அலுவலகத்தில் இருக்கக் கூடாது என்று வேண்டா வெறுப்பாகப் பல நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அலுவலக நேரம் முடிந்தும் கிளம்பாமல் இருப்பவர்களை அன்புடன் பேசி வெளியேற்றும்படி மேலதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றன. சில அலுவலகங்களில் வேலை நேரம் முடிந்ததும் மின்விளக்குகள் அணைக்கப்பட்டுவிடுகின்றன.
சில நிறுவனங்களில், காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதாவது, முந்தைய நாள் மாலையே நேரத்தோடு வீட்டுக்குச் சென்றுவிடுங்கள் என்று மறைமுகமாக உணர்த்தும் விதமாக! ஆனால், இதெல்லாம் உண்மையில் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்பதுதான் துயரம்.
இதற்கெல்லாம் முக்கியக் காரணம், பல நிறுவனங்களில் ஊழியர்களுக்குப் பணிப் பாதுகாப்பு இல்லை என்பதுதான். ஒரு காலத்தில் சொற்ப சம்பளத்துக்காக நீண்ட நேரம் உழைத்தாலும் நிரந்தர வேலை எனும் நம்பிக்கை இருந்தது. இன்றைக்கு அந்தச் சூழலும் இல்லை. குறிப்பாக, புதிதாக வேலைக்குச் சேருகின்றவர்கள் தங்களை நிரூபிக்கவும், வேலையைத் தக்கவைத்துக்கொள்ளவும் தங்கள் உயிரையே பணயம் வைக்க நேர்கிறது என்பதுதான் இன்றைய நிலை.
ஜப்பான் அளவுக்கு மோசம் இல்லையென்றாலும், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தப் பிரச்சினை உண்டு. தன் மகனைப் பறிகொடுத்த மிஷியோ நிஷிகாகியைப் போல் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். காது கொடுக்க நேரமோ மனமோ இன்றி வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது உலகம்!
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
No comments:
Post a Comment