Sunday, January 14, 2018


பள்ளி, கல்லூரிகள் அருகே பெட்டி கடைகளுக்கு தடை


சென்னை : பெட்டி கடைகளுக்கு உரிமம் பெற அணுக வேண்டிய அதிகாரிகள் விபரங்களை, அறிவிப்பு பலகையில், மாநகராட்சி வெளியிடும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சென்னையில் அண்ணா நகர், அம்பத்துார், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில், பெட்டி கடைகளுக்கான உரிமம் கேட்டு, மாநகராட்சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையத்தில், சிலர் விண்ணப்பித்துள்ளனர். எந்த பதிலும் இல்லாததால், விண்ணப்பங்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்கள், நீதிபதி, வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தன.

அலைக்கழிப்பு

மனுதாரர்கள் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், மெர்சி ஞானம்மாள், ''தங்கள் அதிகார வரம்புக்குள் வரவில்லை என, அதிகாரிகள் ஒவ்வொருவரும், மனுதாரர்களை அலைய விடுகின்றனர்,'' என்றார்.

மாநகராட்சி சார்பில் ஆஜரான, வழக்கறிஞர், கோபாலகிருஷ்ணன், ''இருக்கிற, 622 கடைகளில், 287 கடைகளின் உரிமையாளர்கள், உத்தரவுகளை பெற்றுள்ளனர். இன்னும் பல விண்ணப்பங்கள் மீது, உத்தரவு பிறப்பிக்க வேண்டியதுள்ளது,'' என்றார்.


இதையடுத்து, நீதிபதி, வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திலும், இதற்கென தனி அதிகாரி உள்ளதாகவும், மனுதாரர் களின் கோரிக்கையை அவர் பரிசீலிப்பதாகவும், மாநகராட்சி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். கடைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான குழுவில், மனுதாரர்கள் மனு அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

எனவே, கடைகளுக்கான உரிமம் வழங்குவதற்கான, மாநகராட்சி அதிகாரிகள் குழுவின் விபரங்களை, அந்தந்த பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அந்த விபரங்களை, புகைப்படமாகவோ அல்லது குறிப்பு எடுத்துக் கொள்ளவோ, ஏதுவாக இருக்கும். அவர்களிடம், உரிமம் கோருபவர்கள், மனுக்களை அளிக்கவும் முடியும். அதனால், அலைக்கழிக்கப்படுவதுதடுக்கப்படும்.

மாநகராட்சி குழு உறுப்பினர்களில் மாற்றம் ஏற்படும்போது, உடனடியாக, அந்த விபரங்களையும், அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் அருகில், பெட்டி கடைகள் இல்லாத வகையில், குழு உறுதி செய்ய வேண்டும். சிகரெட், பான்பராக் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை, விற்பனை செய்யக் கூடாது.

'ஆதார்' அட்டை

பிழைப்புக்காக, பெட்டி கடைகளை மனுதாரர்கள் நடத்துகின்றனர். அனைவருக்கும், அரசால் வேலை வழங்க முடியாததால், சுய வேலைவாய்ப்பை, அரசு ஊக்குவிக்க வேண்டும். எனவே, ஒரு மாதத்துக்குள் புதிதாக, மாநகராட்சி குழுவிடம், மனுதாரர்கள் மனு அளிக்க வேண்டும். அதை, ஒரு மாதத்துக்குள், குழு பரிசீலிக்க வேண்டும்.

பெட்டி கடைகள் நடத்த விரும்புவோர், மாநகராட்சி குழுவை அணுகும்போது, 'ஆதார்' அட்டையையும் அளிக்க வேண்டும். அளிக்க தவறுபவர்களிடம், கருணை காட்ட வேண்டியதில்லை. ஆதார் அட்டை அளிப்பதால், ஒருவரே இரண்டு கடைகளை நடத்துவது தடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024