Wednesday, January 17, 2018


எம்.ஜி.ஆர் என்னும் சகாப்தம்! - பிறந்தநாள் பகிர்வுகள்

பாலஜோதி.ரா



இன்று, எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாள். மக்கள் திலகம் என்று சினிமாவிலும் புரட்சித்தலைவர் என்று அரசியலிலும் சிறப்புப் பெயர்கள் அவருக்கு வழங்கப்பட்டாலும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களால் உண்மையான உள்ளன்புடன் சூட்டப்பட்ட 'வாத்தியார்' என்ற பெயர்தான் இன்றுவரை அழியாப் புகழுடன் நிலைத்தும் நீடித்துமிருக்கிறது.இந்தப் பகிர்வு, அவருடைய சினிமா, அரசியல் சாதனைகளைப் புள்ளிவிவரங்களுடன் சொல்வதில்லை. இது ஒவ்வொரு எம்.ஜி.ஆர் தொண்டனின் இதயத்தோடும் நெருக்கமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது.

தமிழர்களின் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள், எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுபெறுகின்றன. இது, பல வருடங்களாகவே தொடர்ந்துவரும் நிகழ்வாக இருக்கிறது. கிராமப் புறங்களில், அதிலும் தென்மாவட்டங்களில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில், மார்கழி மாதத்தில் தெருவுக்குத் தெரு உள்ள சிறு கோயில்களில் ஸ்பீக்கர் கட்டி அதிகாலையிலும் மாலையிலும் பக்திப் பாடல்கள் போடுவது வழக்கம். மார்கழி மாதம் முடிந்ததும் அதைக் கழற்றிவிடுவார்கள். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சொல்லிவைத்தது போல் ஒரு மாறுதல் நடந்தது. அதாவது, மார்கழி மாதம் முதல் தேதி அன்று கட்டப்படும் அந்த ஸ்பீக்கர்கள், ஜனவரி 17-ம் தேதி முடிந்ததும்தான் கழற்றப்படும்.

  'திருடாதே பாப்பா திருடாதே' என்று குழந்தைகளுக்குப் பாடம் எடுப்பார். 'நான் ஆணையிட்டால்..அது நடந்துவிட்டால்' என்று ஏழை மக்களுக்கு நம்பிக்கை டானிக் ஊற்றிக்கொண்டிருப்பார். 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று இளைஞர்களுக்கு உற்சாக உரம் போடுவார். கிராமம் முழுக்க அன்றைக்கு எம்.ஜி.ஆரின் குரலாக டி.எம்.சௌந்தர்ராஜன் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். விவரம் அறிந்தவர்களுக்குத்தான் அது டி.எம்.எஸ். குரல். ஆனால்,கோடிக்கணக்கான மக்களுக்கு இன்றைக்கும் அது எம்.ஜி.ஆரின் குரல்தான். சினிமா பாடல்கள்மூலம் வாழ்வியலை சாமானியர்களுக்குக் கற்றுத்தந்தவர் எம்ஜிஆர். அதனால்தான், அவரை தங்களது மூச்சுக்காற்றாகக் கருதிய பாமர மக்கள் அவருக்கு, 'வாத்தியார்' என்று செல்லப் பெயர் சூட்டினார்கள்.

எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத மற்றொரு 'சிறப்பு' எம்.ஜி.ஆருக்கு மட்டுமே இருக்கிறது. பொதுவாக, அரசியல் தலைவர்களின் பிறந்தநாள், நினைவுநாளின்போது, அந்தக் கட்சியினர் ஊரின் முக்கிய இடத்தில் போட்டோ வைத்து மலர்தூவி, புகழ்பாடுவார்கள். எம்.ஜி.ஆருக்கு மட்டும்தான் ஒவ்வொரு தொண்டரின் வீட்டுக்கு முன்பாகப் புகைப்படம் வைத்து , ஸ்பீக்கர் கட்டி அவரது புகழ் பாடுவார்கள். தவிர, அவரவர் வசதிக்கேற்ப பானகமோ,அன்னதானமோ வழங்குவார்கள். சினிமா, அரசியல் என்ற இரட்டைக் குதிரையில் சவாரிசெய்து உச்சம் தொட்டவர் எம்.ஜி.ஆர். இங்கு குறிப்பிட்ட விஷயங்கள் எல்லாம் இன்றைக்கும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. சென்னையில் அப்படி எல்லாம் நடப்பதில்லை என்பவர்கள், ஒரு ரவுண்டு வடசென்னை பக்கம் போய் பார்த்துவிட்டு வாருங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024