நான் நடத்துவது ஜனநாயகப் போராட்டம்: அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி
By DIN |
Published on : 03rd January 2018 01:37 AM |
ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, சென்னையில் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார் நடிகர் ரஜினிகாந்த். அப்போது அவர் பேசியது:-
ஆரம்ப கால கட்டத்தில் இரண்டு மாதங்கள் பத்திரிகையில் வேலை பார்த்த அனுபவம் எனக்கு உண்டு. பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத நிலையில், ஏதாவது வேலைக்குப் போக வேண்டும் என்று தோன்றியது. அப்போது என் நண்பர் சந்திரசேகர் ராவ், பத்திரிகையில் பிழை திருத்துநராக வேலை பார்த்து வந்தார். 'சம்யுக்த கர்நாடக' என்ற தினசரி பத்திரிகையில் என்னையும் வேலைக்குச் சேர்த்து விட்டார். 2 மாதங்கள் அங்கே பிழை திருத்துநராக வேலை பார்த்தேன்.
முதல் பேட்டி: சென்னைக்கு வந்த பின்னர் 1976-ஆம் ஆண்டு எனது முதல் பேட்டி 'பொம்மை' இதழில் வந்தது. நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை விட்டு விலகியே இருப்பேன். ஏனென்றால் அரசியல் குறித்து கேள்வி எழுப்பும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியாது. ஆனால், அரசியலுக்கு வந்து விட்டேன். இத்தனை நாள்களாக நடந்த 'ரசிகர்கள் சந்திப்பை' உலகம் முழுவதும் கொண்டு போய்ச் சேர்த்தீர்கள். நேர்மையான வழியில் அந்த செய்திகள் வெளிவந்தன.
சுதந்திரப் போராட்டம் மாதிரி இது ஜனநாயகப் போராட்டம் என்று நினைக்கிறேன். சுதந்திரத்துக்கான எல்லா போராட்டங்களும் தமிழகத்தில் இருந்துதான் தொடங்கியிருக்கின்றன. இதுவும் அப்படித்தான். ஊடகங்கள் இந்தப் போராட்டத்துக்கு துணையாக இருக்க வேண்டும் என்றார் ரஜினிகாந்த்.
No comments:
Post a Comment