Tuesday, January 16, 2018


புத்தரிசியில் கொண்டாடுகிறோமா?

By ஆர். தங்கராஜு | Published on : 16th January 2018 01:06 AM |

உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல் உள்ளிட்ட தானியங்களை மார்கழியில் வீட்டுக்கு கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப் பொங்கல். 


உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்முடன் சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாகப் புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என, பொங்கல் வைக்க எல்லாமே புதிதாக வைத்து பொங்கல் விழாவைக் கொண்டாடி, பாரம்பரியத்தைப் பின்பற்றி வருகிறோம்.
நவீன விஞ்ஞான மற்றும் தொழில் வளர்ச்சியால் நமது பண்பாட்டுத் தளத்திலிருந்து விலகிச் செல்லும் வகையில் பாரம்பரிய விழாக்களில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன.
வழக்கமாக ஜூன் மாதம் குறுவை தொடங்கி அதை முடித்து, பிறகு சம்பாவை தொடங்கி, ஜனவரி தொடக்கத்திலிருந்து அறுவடை செய்து, பொங்கலுக்குப் புது அரிசி, புதுப் பானை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு பண்டிகைக்குத் தயாராவோம்.


காலச் சூழலில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களால் தொன்மையைப் பின்பற்றுவதிலிருந்து விலகுகிறோமா என்ற கேள்வி எழுகிறது.


காவிரிப் பிரச்னையால் தமிழக விவசாயிகள் வழக்கத்தைவிட கடந்த ஏழு ஆண்டுகளாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஏழு ஆண்டுகளாக குறுவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாத நிலையில், முப்போகம் சாகுபடி இரு போகமாகி, பிறகு ஒரு போக சம்பா சாகுபடி என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலை கடந்த இரு ஆண்டுகள் மட்டுமே தொடர்ந்த நிலையில், நிகழாண்டு வழக்கமான குறுவை பொய்த்துப் போனது. ஒரு போக சம்பாவாவது நடைபெறும் என்ற நிலையில், அதுவும் கேள்விக்குறியானது.


பிறகு, கால தாமதமாக கிடைத்த குறைந்த அளவு காவிரி நீரைக் கொண்டு சம்பா பணியைத் தொடங்கினர் விவசாயிகள். பயிர் சற்றே வளரத் தொடங்கிய நிலையில், செப்டம்பர், அக்டோபரில் பெய்த மழையைத் தொடர்ந்து, முளைப்பு கண்ட பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியது. எஞ்சிய பயிர்களை விவசாயிகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வளர்த்தனர்.
தற்போது, அந்தப் பயிரையும் பாதுகாக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே, நிகழாண்டு சம்பாவும் பொய்த்துப் போனது என்றே கூறலாம்.
லட்சக்கணக்கான ஹெக்டேரில் குறுவை, சம்பா சாகுடி செய்த தமிழகத்தில் மிகமிக குறைந்த அளவில் ஆழ்குழாய் பாசனம் உள்ள பகுதிகளில் மட்டும் சாகுபடிக்கு சாத்தியப்பட்டுள்ளது.
ஆகவே, பாரம்பரியம், பண்பாட்டைச் சார்ந்திருக்கும் விவசாயத் தொழிலை மையமாகக் கொண்டு நடைபெற்று வரும் பொங்கல் விழாவில், பழைய பாரம்பரியத்தை தொடர்கிறோமா என்ற சந்தேகம் எழுகிறது. 


புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என எல்லாம் புதிதாக வைத்து பொங்கல் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம் பொய்த்து, கொஞ்சம் செய்திருந்த விவசாயமும் இன்னும் அறுவடைக்குத் தயாராகவில்லை என்பதே ஊரறிந்த உண்மை.
பொங்கல் விழாவை எப்படியேனும் கொண்டாடி விடுவோம், ஐயமில்லை! ஆனால், புத்தரிசியில் பொங்கல் கொண்டாடுகிறோமா என்றால் இல்லை என்று கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.


மண் பானைக்குப் பதில் குக்கர், புது அரிசிக்குப் பதில் பழைய அரிசியில் பொங்கல், கால்நடைகளுக்கு அணிவிக்கும் பிளாஸ்டிக் நெட்டி மாலைகள் என பாரம்பரியம், தொன்மை, வழக்கத்தின் தன்மைகள் மாறி வருகின்றன. 


தமிழர்களின் பண்பாடு, நாகரிகம் மேலும் செழித்து உயிரோட்டமாக இருக்க மரபு விழாக்களில் தொன்மையைப் பின்பற்ற வேண்டும், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு நம்முடைய வாழ்வியல் அமைந்திருப்பதால், விவசாயத்துக்குத் தேவையான நீர்வளத்தைப் பாதுகாக்க வேண்டும். 


முன்னோடித் தமிழர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி, கடைசி சொட்டு நீரையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தனர். ஏரி, குளங்களில் தண்ணீர் வரத்துக்கும், வெளியேற்றத்துக்கும் தனித்தனித் வழி ஏற்படுத்தப்பட்டிருந்தன. 


ஏரி, குளங்களில் தேங்கும் அதிமான நீர் தானாக தாழ்வான பகுதிக்கு ஊடுருவி, அடுத்தடுத்து ஏரி, குளங்களில் தண்ணீர் போய்ச் சேரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
தற்போது, ஏரி, குளம், தண்ணீர் வரத்து வழித்தடங்கள் எல்லாம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளன. இயற்கை வழிபாட்டு விழாவாகப் பொங்கலைக் கொண்டாடும் நிலையில், இயற்கையை அழித்து அதற்கு எதிர்மறையாக நடக்கும் நிகழ்வுகளைத் தவிர்க்க வேண்டும்.
சடங்குக்காக, சந்தோஷத்துக்காக பொங்கலை கொண்டாடாமல், பாரம்பரியத்தைப் பின்பற்றவும், நீர்வளத்தைப் பெருக்க மரம் வளர்ப்பது, மாசுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

No comments:

Post a Comment

RTI documents cannot be marked ‘not evidence’: GIC

RTI documents cannot be marked ‘not evidence’: GIC  TIMES NEWS NETWORK 28.10.2024 Ahmedabad : The Gujarat Information Commission (GIC) has r...