Sunday, January 14, 2018

வீடு விலை குறைகிறதா?

Published : 13 Jan 2018 09:34 IST

விபின்
 
உலக அளவிலான நெருக்கடி நிலையில் இந்திய ரியல் எஸ்டேட் பெரும் தேக்கத்தைச் சந்தித்தது. ஆனால், சென்னை ரியல் எஸ்டேட்டைப் பொறுத்தவரை மற்ற இந்திய நகரங்களுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய தேக்கத்தை அடையாமல் தாக்குப் பிடித்தது. ஆனால், சில ஆண்டுகளாக சென்னை ரியல் எஸ்டேட்டும் தேக்கமடைந்து வருவதாக இத்துறை தொடர்பான ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் வெளியான நைட்பிராங்க் ரியல் எஸ்டேட் ஆய்வு அறிக்கை 2011 ரியல் எஸ்டேட் வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது சென்னையில் வீட்டு விற்பனை 56 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இந்திய ரியல் எஸ்டேட் தொடர்பாக ஆண்டுதோறும் ஆய்வுகள் மேற்கொண்டு வரும் இந்நிறுவனத்தின் அறிக்கை கடந்த வாரம் வெளியானது. முடிவடைந்த 2017 அரையாண்டில் இந்திய அளவில் ரியல் எஸ்டேட் எப்படி இருந்தது என்பதை இந்த அறிக்கை ஆய்வுசெய்கிறது. இந்திய அளவிலும் வீட்டு விற்பனை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சரிவடைந்துள்ளது. 2,44,686 ஆக இருந்த வீட்டு விற்பனை 2017-ல் 2,28,072 ஆகச் சரிவடைந்துள்ளது. அதுபோல புதிய வீட்டுத் திட்டங்கள் 1,75,822லிருந்து 1,03,570 ஆகச் சரிவடைந்துள்ளது.

இந்திய அளவில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கான மோசமாக 38 சதவீதம் சரிவடைந்துள்ளது. புதிய வீடுகள் கட்டப்படுவதும் 78 சதவீதம் சரிவடைந்துள்ளது. இந்திய நகரங்களில் ஹைதராபாத்தில் 2017-ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் வெறும் 940 வீடுகளே விற்பனையாகியுள்ளன. இந்திய அளவில் இது மோசமான வீழ்ச்சி. அதற்கடுத்த இடத்தில் அகமதாபாத் இருக்கிறது. அங்கு 2,916 வீடுகள் விற்பனையாகியுள்ளன. 3,200 வீடுகள் விற்பனையுடன் சென்னை அடுத்த நிலையில் இருக்கிறது. கடந்த அரையாண்டில் வீட்டு விற்பனையில் பெங்களூரு 8,384 வீடுகளுடன் முதலிடத்தில் உள்ளது, இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பை 7,490 வீடுகளுடன் இரண்டாம் இடத்திலுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த 2017-ன் முதல் அரையாண்டைவிடவும் இரண்டாம் அரையாண்டு தேக்கமடைந்துள்ளது. இந்த ஆண்டில் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது, மணல் தட்டுப்பாடு, அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி., 2016-ன் இறுதியில் மத்திய அரசு மேற்கொண்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கை இவை எல்லாம் 2017-ன் ரியல் எஸ்டேட்டைப் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கின.

2017-ல் முதல் அரையாண்டின் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம் 6,035. இது 2016-ன் முதல் அரையாண்டைவிட 220 எண்ணிக்கை கூடுதல். ஆனால், 2017-ன் இரண்டாம் அரையாண்டின் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம், 2016-ன் இரண்டாம் அரையாண்டைவிட 1,600 எண்ணிக்கை குறைவு. இதிலிருந்து 2017-ன் தேக்க நிலையைப் புரிந்துகொள்ள முடியும். அதுபோல சென்னையின் ரியல் எஸ்டேட் வளம் மிக்கப் பகுதியான தென்சென்னைப் பகுதியில் புதிய வீட்டுப் பணிகள் தொடக்கம் 19 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதுவே மேற்குச் சென்னையில் 47 சதவீதமாகச் சரிவடைந்துள்ளது.

2017-ன் வீட்டு விற்பனை 2016-ம் ஆண்டின் வீட்டு விற்பனையைவிட 14 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஆனால், 2017-ன் முதல் அரையாண்டு வீட்டு விற்பனை 2016-ன் இரண்டாம் அரையாண்டைவிடக் கூடுதலாகத்தான் இருந்தது. அதே நேரம், 2017-ன் இரண்டாம் அரையாண்டின் விற்பனை இதுவரையில்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதுபோல ஒவ்வொரு பகுதிக்கென நிலவும் சந்தை விலையிலும் 3 சதவீதம் அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த விலை வீழ்ச்சி வரும் ஆண்டில் வீடு வாங்குபவர்களுக்குச் சாதகமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024