இரு விமானங்கள் மோதலைத் தவிர்த்து 261 பயணிகளின் உயிரைக் காத்த சாதுர்ய பெண் பைலட்
Published : 12 Feb 2018 21:48 IST
பிடிஐ புதுடெல்லி
கோப்புப்படம்
ஏர் இந்தியா, விஸ்தாரா விமானங்கள் அந்தரத்தில் நேருக்கு நேர் மோத வந்தபோது, பெண் விமானி ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு, 261 பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 7-ம் தேதி நடந்துள்ளது இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மும்பையில் இருந்து மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் நகருக்கு ஏர் இந்தியா விமானத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் கடந்த 7-ம் தேதி புறப்பட்டது. அதோபோல டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்தாரா விமான நிறுவனத்தின் யுகே997 என்ற விமானமும் சென்றது. இரு விமானத்திலும் 261 பயணிகள் பயணித்தனர்.
விஸ்தாரா நிறுவன விமானத்தை வானில் 27ஆயிரம் அடி முதல் 29 ஆயிரம் அடி வரை உயரத்தில் பறக்க விமானக் கட்டுப்பாட்டு அறை உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், திடீரென விஸ்தாரா விமானம் உயரத்தை குறைத்துப் பறந்தது. அப்போது அதே உயரத்தில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விமானக் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டார்.
பொதுவாக வானில் நேருக்கு நேர் விமானங்கள் வருவதைத் தவிர்க்கவே விமானத்தை அதிக உயரத்தில் பறக்க கட்டுப்பாட்டு அறை உத்தரவிடும். அதற்கு ஏற்றார்போல் விமானிகளும் தங்கள் உயரத்தை அதிகரித்துக்கொள்வாரக்ள்.
ஏர் இந்தியா விமானம் நேரில் வருவதைப் பார்த்த விஸ்தாரா விமானத்தின் விமானி கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு விவரத்தை கூறினார். அவர்கள் நீங்கள் ஏன் உயரத்தை குறைத்தீர்கள் என்று கேட்டுள்ளனர். நீங்கள் உயரத்தைக் குறைக்கச் சொல்லியதால் குறைத்தோம் என்று விஸ்தாரா விமானத்தின் விமானியும் தெரிவித்தார். இதனால், பெரிய குழப்பம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ஏர் இந்தியா விமானத்தின் தலைமை விமானி கழிவறைக்குச் சென்று இருந்தார். இரு விமானங்களும் அருகே வந்தன. இதைப் பார்த்த துணை விமானி அனுபமா கோலி, மிகவும் சாதுர்யமாக செயல்பட்டார்.
விமானத்தின் உயரத்தை அதிகரித்தால் நேருக்கு நேர் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று தன்னுடைய பயிற்சிக் காலத்தில் கூறப்பட்ட அறிவுரையின்படி செயல்பட்டு உடனடியாக விமானத்தை மிக அதிகமான உயரத்தில் செலுத்தினார். இதனால், இரு விமானங்கலும் நேர் நேர் மோதாமல் தப்பித்தன. 261 பயணிகளின் உயிரும் காப்பாற்றப்பட்டது.
பெண் விமானி அனுபமா கோலியின் சாதுர்யமான நடவடிக்கைக்கு ஏர் இந்தியா நிறுவனம் பாராட்டுத் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சம்பவம் குறித்து விஸ்தாரா நிறுவனம் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், தங்களின் விமானி கட்டுப்பாட்டு அறையின் உத்தரவுப்படியே செயல்பட்டார் விதிமுறை மீறல் ஏதும் இல்லை என்று மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைநடத்தி வருகிறது.
No comments:
Post a Comment