Tuesday, February 13, 2018

பிரிட்டன் உயர் நீதிமன்ற உத்தரவினால் மல்லையாவுக்கு நெருக்கடி: சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

Published : 12 Feb 2018 21:27 IST

பிடிஐ லண்டன்


விமானங்களை குத்தகைக்கு விடும் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.580 கோடி இழப்பீடு வழங்குமாறு விஜய் மல்லையாவுக்கு பிரிட்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே நிதி மோசடி வழக்கில் சிக்கி தவிக்கும் விஜய் மல்லையாவுக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா தலைமையிலான கிங்பிஷர் நிறுவனம், 2014-ம் ஆண்டு விமானங்களை குத்தகைக்கு விடும் பிஓசி ஏவியேஷன் நிறுவனத்துடன் 4 விமானங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருந்தது. இதில் 3 விமானங்கள் வழங்கப்பட்டன. இதற்கான தொகையை செலுத்தாததால் ஒப்பந்தப்படி, 4-வது விமானத்தை வழங்கவில்லை.

இதுதொடர்பாக லண்டனில் உள்ள வர்த்தகம் மற்றும் சொத்து பிரச்சினை தொடர்பான நீதிமன்றங்களுக்கான உயர் நீதிமன்றத்தில் சிங்கப்பூர் நிறுவனம் வழக்கு தொடுத்தது. அதில் ஒப்பந்தப்படி தங்களுக்கு நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்க உத்தரவிடுமாறு கோரி இருந்தது. இதை விசாரித்த நீதிபதி பிக்கன், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு ரூ.578 கோடி வழங்குமாறு கடந்த ஐந்தாம் தேதி உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் (கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் பிரூவரிஸ்) இழப்பீடு வழங்க முடியாது என்று கூறுவதற்கு முகாந்திரம் இல்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

பிஓசி ஏவியேஷனுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, வட்டி மற்றும் சட்டப் போராட்டத்துக்கு ஆகும் செலவு ஆகியவை சேர்ந்து ரூ.578 கோடி செலுத்த வேண்டும். இதில் 2-ம் பிரதிவாதியான யுனைடெட் புரூவரிஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய தொகையில் பாதியை செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இது தொடர்பாக கிங்பிஷர் நிறுவனம் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என பிஓசி ஏவியேஷன் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார். அதே சமயம் இது தொடர்பாக மேலும் கருத்துகளை கூறவிரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

விமானங்களுக்காக செலுத்தப்பட்ட டெபாசிட் தொகை போதுமானதாக இல்லை. அத்துடன் டெபாசிட் தொகையைவிட எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை அதிகமாக இருந்தது. இதனால் சட்ட உதவியை நாடும் நிலை ஏற்பட்டதாக பிஒசி ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன் மற்றும் வட்டி உட்பட ரூ.9 ஆயிரம் கோடி நிலுவையை விஜய் மல்லையை செலுத்தவில்லை. இதையடுத்து அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில் மல்லையா லண்டன் தப்பிச் சென்றார். அவரை இந்தியாவுக்கு கொண்டுவருவது தொடர்பாக அங்கு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மல்லையா கைது செய்யப்பட்டார். பின்னர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி வரை விஜய் மல்லையாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 16-ம் தேதி நடைபெற உள்ளது. மே மாதம் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதனிடையே, சர்வதேச நிதி நெருக்கடி மற்றும் தொழிலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்திய வங்கிகளில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. மோசடி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இல்லை என நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்காக மல்லையாவின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024