Sunday, February 18, 2018

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்

Added : பிப் 18, 2018 01:58 |





புதுடில்லி:தனியார் நிகழ்ச்சிகள், நண்பர்கள், உறவினர்களுடன் சுற்றுலா செல்வோர், தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை, ஐ.ஆர்.சி.டி.சி., உதவியுடன், இனி, 'ஆன் லைனில்' முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவுரயில் பயண முன்பதிவு, ரயில்களில் உணவுப் பொருள் விற்பனை உள்ளிட்டவற்றை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் மேற்கொண்டு உள்ளது.

ஆன் லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர், ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், தங்கள் விபரங்களை பதிவு செய்து, கணக்கு துவக்க வேண்டும். அதன்பின், அவர்கள், தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்நிலையில், திருமண நிகழ்ச்சிகள், ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா, நண்பர்கள், உறவினர்களுடனான இன்ப சுற்றுலா ஆகியவற்றை மேற்கொள்வோர், தனி ரயில் அல்லது ரயிலின் ஒரு பெட்டியை மட்டும் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.எனினும், இந்த சேவையை பெற, சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியை சந்தித்து, அதற்காக விண்ணப்பிக்க வேண்டும். சரியான காரணத்தை தெரிவித்து, அதற்கான முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும்.

ரயில்வே வாரியம்இந்நிலையில், 'தனி ரயில் அல்லது தனி பெட்டியை முன்பதிவு செய்ய இனி, ரயில்வே அதிகாரிகளை நேரடியாக அணுக தேவையில்லை. இந்த சேவையை, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் மூலம் பெறலாம். அந்நிறுவனம் மூலம், தேவையான தகவல்களை வழங்கி, ரயில், பெட்டியை, ஆன் லைனில் முன்பதிவு செய்யலாம்' என, ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024