Sunday, February 11, 2018

சிவ கடாட்சம் நிச்சயம் ... மகா சிவராத்திரி விரதம்!

Published : 10 Feb 2018 16:45 IST

வி.ராம்ஜி



மகா சிவராத்திரி மகிமைகளை சிவபெருமான், நந்திதேவரிடம் சொல்ல, அவர் தேவர்களிடமும் முனிவர்களிடமும் தெரிவிக்க, அதையடுத்து சிவராத்திரியன்று எல்லா தெய்வங்களும் விரதம் மேற்கொண்டார்கள் எனச் சொல்கிறது சிவ புராணம்!

ஊழிக்காலத்தில் பிரளயம் ஏற்பட, உலகமே அழிந்தது. மீண்டும் இந்த உலகம் இயங்கவேண்டும் என உமையவள் விரதம் இருந்து, சிவனாரின் இடபாகத்தைப் பெற்றாள். அந்த நன்னாளே மகா சிவராத்திரித் திருநாள் என்கிறது புராணம்.

மாதந்தோறும் வருகிற சிவராத்திரி விசேஷம். மாசி மாதத்தில், தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற மகா சிவராத்திரி கூடுதல் புண்ணியங்களையும் பலன்களையும் தரக்கூடியது என்று போற்றுகின்றனர். இந்த முறை, மாசி மாதப் பிறப்பன்று, அதாவது 13.2.18 செவ்வாய்க்கிழமை அன்று, திரயோதசியும் அன்றைய தினமே சதுர்த்தசியும் வருகிறது. அதாவது, பிரதோஷமும் அன்றைக்குத்தான். மகா சிவராத்திரியும் அந்த நாளில்தான்!

அம்பிகைக்கு நவராத்திரி... ஈசனுக்கு ஒரு ராத்திரி... அது சிவராத்திரி என்கிற சொலவடை உண்டு என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனாரின் அடிமுடி தேடிய கதை தெரியும்தானே. அடியையும் தொடமுடியாமல், முடியையும் தொடமுடியாமல் நொந்து போனார்கள் இரண்டுபேரும். அவ்வளவு பிரமாண்டமாக, நெருப்புப் பிழம்பாக, அக்னி மலையாக விஸ்வரூப தரிசனம் தந்தார் சிவபெருமான். அதுவே மகாசிவராத்திரி என்றும் சொல்வார்கள்.

முருகக்கடவுள், எம தருமன், இந்திரன், சூரிய பகவான், சந்திரன், அக்னி, குபேரன் முதலானோர் சிவராத்திரி விரதம் மேற்கொண்டு, தவமிருந்து பூஜைகள் செய்து, சிவனருளைப் பெற்றதாகச் சொல்கிறது புராணம்!

மகா சிவராத்திரி நன்னாளில்தான், மகாவிஷ்ணு சிவபெருமானை நோக்கி கடும் தவமிருந்தார். பிறகு அந்த தவத்தின் பலனாக, சக்ராயுதத்தை வரமாகப் பெற்றார். மகாலட்சுமியை மனைவியாக அடைந்தார்.

படைப்புக் கடவுளான பிரம்மா சிவனருளை வேண்டி தவமிருந்தார். சிவனாரின் அருளைப் பெற்றதுடன் கல்வியையும் ஞானத்தையும் தந்தருளும் சரஸ்வதிதேவியைக் கரம் பற்றினார்!

மரத்தின் மீது அமர்ந்திருந்த குரங்கு, தூக்கம் வராமல் அந்த மரத்தின் இலைகளைப் பறித்து கீழே போட்டபடியே இருந்தது. அப்படி கீழே போடப்படும் இலைகள் வெறும் இலைகள் அல்ல. அது வில்வமரம். அந்தக் குரங்கு வில்வ இலைகளைத்தான் பறித்துப் பறித்துப் போட்டது.

அந்த வில்வ இலைகளும் தரையில் விழவில்லை. மரத்தடியில் இருந்த சிவலிங்கத் திருமேனியில் விழுந்தபடியே இருந்தது. விடிய விடிய... தெரிந்தோ தெரியாமலோ சிவலிங்கத்துக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்திருந்தது குரங்கு.

அதுமட்டுமா? அன்றைய நாள் சிவராத்திரி. இதில் குளிர்ந்து போன சிவனார், அந்த குரங்குக்கு மோட்சம் அளித்தார். சிவராத்திரி விரத பலன் கிடைக்கப் பெற்ற அந்தக் குரங்கு, முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள்புரிந்தார் ஈசன். குரங்கு முகமும் மனித உடலும் கொண்டு, சோழச் சக்கரவர்த்தியாக வாழ்ந்து, சிறந்த பக்திக்கு உதாரணமாகத் திகழ்ந்தார் முசுகுந்தச் சக்கரவர்த்தி என்கிறது புராணம்!

ஆகவே, மகா சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவபெருமானைத் தரிசித்தால் சகல வளங்களும் அடையலாம். முக்தி பெறலாம். திரயோதசி அன்று ஒருபொழுது மட்டும் சாப்பிட்டு விட்டு, விரதம் மேற்கொள்ளவேண்டும். முடியாதவர்கள், வயதானவர்கள், எளிமையான உணவை எடுத்துக் கொள்ளலாம். திரவ உணவாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அடுத்து, சதுர்த்தசியில் விரதம் இருந்து, அன்றிரவு ஆலயங்களில் நான்கு ஜாமங்களில் நான்கு கால பூஜைகள் சிவன் கோயில்களில் விமரிசையாக நடைபெறும். அவற்றைக் கண் குளிரத் தரிசிக்கலாம். அல்லது வீட்டிலேயே இருந்து கொண்டு சிவபாராயணம் செய்யலாம். ருத்ரம் ஜபிக்கலாம்.

முக்கியமாக, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மகா புண்ணியம் என்கின்றன சாஸ்திரங்கள்!

மகா சிவராத்திரி விரதம் இருந்து, சிவ தரிசனம் செய்து, தானங்கள் செய்பவர்களுக்கு சிவ கடாட்சம் நிச்சயம்.

நமசிவாயம்... நமசிவாயம்... நமசிவாயம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 09.01.2025