Thursday, February 15, 2018


டெல்லியிலிருந்து திருச்சிக்கு விமான சேவை...! மகிழ்ச்சியில் பயணிகள் 

சி.ய.ஆனந்தகுமார்
 
டெல்லியிலிருந்து திருச்சிக்கு விரைவில் விமான சேவையை தொடங்குவதற்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது.



திருச்சியிலிருந்து விமானத்தில் டெல்லிக்குச் செல்லவேண்டுமானால் சென்னைக்கு சென்று, அங்கிருந்துதான் டெல்லிக்குச் செல்ல முடியும் என்கிற நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் புதுடெல்லியிலிருந்து திருச்சி வழியாக மும்பைக்குச் செல்லும் புதிய விமான சேவையை வரும் மார்ச் 25 முதல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்க முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது, புதுடெல்லியிலிருந்து மும்பைக்கு தினசரி விமானப் போக்குவரத்து சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கிவருகிறது. இதை திருச்சி வழியாக மாற்றியமைக்கும் புதிய திட்டத்தை அந்நிறுவனம் செயல்படுத்த உள்ளது. புதுடெல்லியிலிருந்து வரும் விமானம் திருச்சிக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும். பிறகு, திருச்சியிலிருந்து 2.30-மணிக்கு புறப்பட்டு, மும்பைக்கு மாலை 4.40-மணிக்குச் சென்று சேரும். இந்தச் சேவையை வரும் மார்ச் 25 முதல் செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவுசெய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.

இதேபோல, சவுதியிலிருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி நேரடி விமான சேவை இல்லை என்ற குறை இருந்துவந்தது. இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதி முதல் சவூதி தமாம்மிலிருந்து திருச்சி, கோவை மற்றும் மதுரைக்கு தினசரி விமான சேவையை, ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. இதேபோல, சென்னையிலிருந்து திருச்சி, கோவை, மதுரைக்கு ஏர் இந்தியா நிறுவனம் புதிய விமான சேவையை கடந்த ஆகஸ்ட் 30-ந்தேதி தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சியிலிருந்து மலேசியா செல்லும் விமான சேவை மார்ச் 24-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் ஏசியா நிறுவனமும், திருச்சி - பாங்காங் இடையேயான விமான போக்குவரத்து சேவையை தாய் ஏர் ஏசியா நிறுவனமும், இந்த மாத இறுதியுடன் வணிகக் காரணங்களுக்காக ரத்துசெய்வதாக அறிவித்துள்ளது. சில விமான நிறுவனங்கள், தங்கள் சேவையை ரத்துசெய்தாலும் திருச்சி விமான நிலையத்துக்கான சேவை விரிவடைந்துவருவது பயணிகளை மகிழ்ச்சியடையவைத்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024