Friday, February 2, 2018

ரூ.1,000 மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ்.. கிடைக்குமா? விரக்தியின் விளிம்பில் பயணியர்

Added : பிப் 02, 2018 01:55



தமிழக அரசு, தாறுமாறாக பஸ் டிக்கெட் கட்டணத்தை ஏற்றிய நிலையில், மாநகர போக்குவரத்து கழகத்தில் வழங்கப்பட்டு வந்த, விருப்பம் போல பயணம் செய்யும், 1,000 ரூபாய், மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ், தொடர்ந்து வழங்கப்படும் என, அமைச்சர் அறிவித்திருந்தார். இதை ஏற்க அதிகாரிகள் மறுப்பதால், இந்த மாதம், 1,000 ரூபாய் பஸ் பாஸ் கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக அரசு பேருந்துகளில், ஜன., 20ம் தேதி முதல், 65 சதவீதம் வரை, டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால், அரசு, ஜன., 29ல், 8 சதவீதம், கட்டண குறைப்பு செய்தது.

கூடுதல் செலவு:

அதே நேரம், நீண்ட துாரம் இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளின் சேவைகளை நிறுத்திவிட்டு, 'லிங்க் சர்வீஸ்' எனப்படும், இணைப்பு பேருந்துகளை இயக்கும், புதிய யுக்தியையும், மாநகர போக்குவரத்து கழக நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.இதனால், நெடுந்துாரத்திற்கு, ஒரே பேருந்தில் பயணித்தோர், இனி, இரண்டு, மூன்று பேருந்து களில் பயணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இதனால், வருமானத்தின் பெரும்பகுதியை, பேருந்து கட்டணமாக செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

இதுபோன்ற பயணியருக்கு, ஒருநாள் மட்டும் விருப்பம் போல் பயணம் செய்யும், 50 ரூபாய் பயணச்சீட்டு, 1,000 ரூபாய்க்கான, மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ், ஆகியவை, பெரிதும் கைகொடுக்கும். கட்டண உயர்வுக்கு பிறகு, இந்த சலுகை கட்டண பஸ் பாஸ்களை, மாநகர போக்குவரத்து கழகம் நிறுத்தி உள்ளது. ஏற்கனவே, மாதாந்திர பாஸ் பெற்றுள்ளோர், வரும், 15ம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டது.

அரசு அறிவிப்பு:
இந்நிலையில், பல்வேறு போராட்டங்களின் எதிரொலியாக, கட்டண குறைப்பு செய்த, மாநகர போக்குவரத்து கழகம், விருப்பம் போல பயணிக்கும், 1,000 ரூபாய், மாதாந்திர சலுகை கட்டண பஸ் பாஸ்களை, தொடர்ந்து வழங்க இருப்பதாக, தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டது.

போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்ப்பை சமாளிக்கும் வகையில், 1,000 ரூபாய் பஸ் பாஸ் திட்டத்தை, தொடர்ந்து செயல்படுத்த, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.ஆனால், அதிகாரிகள், அமைச்சரின் உத்தரவை ஏற்க மறுப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது, தாறுமாறாக உயர்ந்துள்ள கட்டணத்தில், 1,000 ரூபாய் பாஸ் வழங்கினால், பெரும்பாலான பயணியர், அந்த பாஸ் பெற முயற்சிப்பர்.இதனால், மாநகர போக்குவரத்து கழகத்திற்கு, கணிசமாக வருவாய் குறையும் என, அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும், சலுகை கட்டண பாஸ் விலையை உயர்த்த, பரிந்துரைகளை வழங்கி இருப்பதாகவும் தெரிகிறது.

இது சம்பந்தமான ஆலோசனைகள் நடந்து வருவதால், இம்மாதம், சலுகை கட்டண பஸ் பாஸ் கிடைக்குமா என, சந்தேகம் எழுந்துள்ளது.ஒவ்வொரு மாதமும், 10 முதல், 21ம் தேதி வரை, பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ணப்பம் வழங்கப்படும் நிலையில், புதிய பாஸ் வழங்குவது குறித்து, இதுவரை எந்த அறிவிப்பையும், மாநகர போக்குவரத்து கழகம் வெளியிடவில்லை.
போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து துறை அமைச்சரோ, செயலரோ எங்களுக்கு எந்தவித அறிவிப்பையும் வழங்கவில்லை. ஏற்கனவே, 1,000 ரூபாய் பஸ் பாஸ் சேவையை, அதே கட்டணத்தில் தொடர வேண்டும் என, போக்குவரத்து துறை அமைச்சர் வலியுறுத்தியதாகவும், அதை, உயர் அதிகாரிகள் ஏற்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதனால், கூடுதல் கட்டணத்திற்கு, மாதாந்திர பஸ் பாஸ் வழங்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.ஆலோசனைஒரு நாள் பஸ் பாசை, பலரும் முறைகேடாக பயன்படுத்துவதால், 'ரீசார்ஜ்' செய்யும் வகையிலும், மெட்ரோ ரயிலிலும் பயன்படுத்தும் வகையிலும், 'ப்ரீ பெய்டு' பாஸாக வழங்க திட்டமிட்டு உள்ளோம்.அதை, உரிமையாளர் மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்காக விண்ணப்பிக்க, செயலிகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும். அனைத்து திட்டங்களும், ஆலோசனையில் தான் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...