Thursday, February 22, 2018

 எஞ்சிய,வாழ்க்கை,இனி,உங்களுக்காகத்தான்,மதுரை,பொதுக் கூட்டத்தில்,கமல்,உருக்கம்

எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காகத்தான்மதுரை பொதுக் கூட்டத்தில் கமல் உருக்கம்

மதுரை:"என்னுடைய எஞ்சிய வாழ்க்கை இனி உங்களுக்காக (மக்கள்) தான் இருக்கும். இறுதி மூச்சு உள்ள வரை மக்கள் பக்கம் இருப்பேன்," என மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை துவக்கி உருக்கமாக கமல் பேசினார்.

இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் 37 ஆண்டுகளாக அமைதியாக நற்பணிகளை செய்து வந்தோம். இதற்கு பின்னணியில் லட்சக்கணக்கான தோழர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாக அமைதியாக நற்பணி செய்தபோதும், பல இடையூறுகள் கொடுத்தனர். இடையூறுகள் ஏற்படுத்திய அந்த கட்சிகள் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். அது கடந்தவையாக இருக்கட்டும். ஆனால் மறந்தவையாக இருக்காது. எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு தான் இருப்போம்.

எங்கள் தண்டவாளமும், உங்கள் வண்டவாளமும் வெளியே வரும் நாள் இது. பேசாமல் இருந்தோம். பிரச்னையை துவங்கி விட்டனர். கட்சி துவங்கி படிப்படியாக பிரசாரம் செய்யலாம் என நினைத்தேன். ஆனால் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசி இன்றே பிரசாரத்தை துவக்கி விட்டார். இன்னும் எத்தனை காலம் காத்திருக்க முடியும். ஊமைகளாக கனவு கண்டு கொண்டிருக்க முடியாது. இன்று பேசும் நாள். நாளை செயல்படும் நாள்.

என்ன கட்சி என கேட்கிறார்கள். நான் மதிக்கும் அரசியல் நாயகர்களில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ஒருவர். அவர் செயலை துவக்குங்கள் என்றார். மக்கள் நலன் தான் அவரது கொள்கை, கோட்பாடாக உள்ளது. அதை செயல்படுத்துங்கள் என்றார்.இங்கே பணத்திற்கு பஞ்சமில்லை. மனத்திற்கு தான் பஞ்சம் உண்டு. அதற்கான பெருங் கூட்டம் இங்கு உள்ளது. நீங்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும்.

கொள்கை என்ன

கட்சி கட்சியின் கொள்கை என்ன என்று கேட்கிறார்கள். எல்லா நல்ல முதல்வர்களும் கொண்டுள்ள கொள்கைதான். தரமான கல்வி, அனைவருக்கும் போய் சேர வேண்டும். ஜாதி, மதம் சொல்லிய விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும். இதை நாம் செய்து காட்டுவோம். மின்சாரம் இல்லை; சமாளித்து கொள்ளுங்கள் என்கின்றனர். ஊழலை குறைத்திருந்தால் மின்சாரம் கிடைத்திருக்கும். ஊழலை ஒழித்தால் மின்சாரம் வரும். பற்றாக்குறை என்பது பேராசயைால் வந்தவை. இதில் மக்களுக்கும் பங்குண்டு.

நேர்மை, நியாயம் பேசும் நான் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டேன். உங்களுக்காக செலவிடுவேன். உங்கள் ஓட்டின் விலை தெரியாமல் அடிமாட்டிற்கு விற்று விடாதீர்கள். 6 ஆயிரம் ரூபாய் வாங்கினால் ஐந்தாண்டுகளில் வகுத்து பார்த்தால் 99 காசு தான் வரும். நல்ல கட்சிக்கு ஓட்டு போட்டிருந்தால் 6 ஆயிரம் ரூபாய் இல்லை. ஆண்டுக்கு 6 லட்சம் ரூபாய் கூட

கிடைத்திருக்கும். அதை கோட்டை விட்டீர்கள். இனிமேல் இதுபோல் நடக்க விடக்கூடாது.

படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். வேலையின்மையை இல்லாமல் செய்ய முடியும். அதற்கு திறமைகளை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் கிராமங்களை தத்தெடுத்ததை கேலி செய்கின்றனர். சமூக சேவர்களாக உங்களிடம் வந்துள்ளோம். நாங்கள் செய்ய வேண்டியதை தத்தெடுத்த 8 கிராமங்களில் செய்து முடிப்போம்.

தவறு என்று சுட்டிக்காட்டினால் அதை திருத்திக் கொள்வோம். பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என அடம் பிடிக்க மாட்டோம். அந்த காலம் முடிந்து விட்டது. இது அடுத்தகட்டம்.

காவிரி பிரச்னை

காவிரி பிரச்னைக்கு என்ன பதில்... இது ஒருவருக்கு ஒருவர் துாண்டிவிடும் அரசியல் செய்கின்றனர். முறையாக உரையாடல் நடந்தது என்றால் எந்த மாநிலமும் எந்த மாநிலத்தில் இருந்தும் எதையும் பேசி பெற முடியும். என்னால் ரத்தத்தையும் வாங்கி கொடுக்க முடியும். ரத்தம் - தானம். சுனாமி வந்தபோது பெங்களூரு சகோதரர்கள் வந்து தானம் அளித்தார்களே.எங்கள் மய்யத்தில் புதிய தென்னிந்தியாவின் 'மேப்' தெரியும். மக்களின் நீதியை மையமாக வைத்து துவங்கப்பட்ட கட்சி இது.

தமிழகத்தில் இருந்த நீதி கட்சி போன்ற கட்சிகளில் சொல்லப்பட்ட அறிவுரையெல்லாம் எடுத்து நாங்கள் கையாண்டுள்ளோம். நாங்கள் வலதும், இடதும் இல்லை.எங்கிருந்து நன்மை கிடைத்தாலும் அவற்றை பெற்றுக்கொள்வோம். தராசின் நடு முள்ளாக எங்கள் செயல்பாடு இருக்கும். உங்களுக்கு நன்மை எங்கிருந்து வருகிறது என்பதை நீங்கள் (மக்கள்) தான் உணர வேண்டும்.

வயதை கிண்டல்

என் வயதை கிண்டல் அடிக்கின்றனர். என் வயது 63. அவர்கள் ஆயுள் குறைவாக உள்ளவர்கள். நான் பணம் பெற்றுக் கொண்டு தான் நடித்தேன். அது உங்களிடம் இருந்து பெற்றது. நிதானமாக யோசித்து பார்த்தபோது இதற்கெல்லாம் உங்களுக்கு, பதிலாக என்ன செய்ய போகிறேன் என யோசித்து பார்த்தால் ஒன்றும் இல்லை. குற்ற உணர்வும் ஏற்பட்டது. இதனால் இனி எஞ்சிய வாழ்க்கை உங்களுக்காக கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்.

எங்கள் கட்சியின் கட்டமைப்பு சிறப்பாக உள்ளது. கட்சி பெயர் தேர்தல் கமிஷனில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 30 நாட்களில் தெரியும். இது என்னுடன் மட்டும் முடியும் கட்சி அல்ல. குறைந்தது மூன்று தலைமுறைகளாவது இருக்கும் கட்சி. எனக்கே எனக்கு என்றால் நாளை நமது ஆகாது. ஒருவனுக்கு பேராசை இருந்தால் இந்த உலகம் கூட பத்தாது. எனவே நல்லது நடக்க அதற்கான உழைப்பை தர வேண்டும்.

அரசு என்பது பள்ளியை சிறப்பாக நடத்த வேண்டும். அதைதனியாரிடமும், சாராய கடைகளை அரசும் ஏற்று நடத்துவது வேடிக்கையான விஷயம். வீதிக்கு ஒரு சாராயக் கடை தேவையில்லை. கொஞ்சம் துாரம் நடந்து சென்று தான் குடியுங்களேன். கைக்கு எட்டிய இடத்தில் சாராயக் கடை இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். பள்ளி பருவத்திலேயே சாரயம் குடிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளனர். இது மாற வேண்டும்.

கல்வியில் மாற்றம் வேண்டும். இனிவரும் நமது மேடைகளில் மக்கள் மத்தியில் இருந்து கேள்வி கேட்டு அதற்கு நான் பதில் அளிப்பதாக தான் இருக்கும். தெரிந்த கேள்விகளுக்கு உடன் பதில் கிடைக்கும். தெரியாத கேள்விகளுக்கு கேட்டு சொல்வேன். அதை கடிதம் மூலமாக கூட அனுப்பி வைப்பேன்.இவ்வாறு பேசினார்.

கட்சிக்கு தலைவர் யார்

கட்சி பெயரை அறிவித்த கமல் அதற்கு அகில இந்திய பொறுப்பாளர், மாவட்ட பொறுப்பாளர் கள், உயர்மட்டக்குழுவையும் அறிவித்தார். ஆனால், கட்சிக்கு தலைவர் செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகள் அறிவிக்கப்பட வில்லை. கமலுக்கு என்ன பதவி என்றும் அறிவிக்கவில்லை.

கொடியின் தத்துவம்

கமல் கட்சி கொடியில் ஆறு இணைந்த கைகளுடன், நடுவில் நட்சத்திர சின்னம் இடம் பெற்றுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து கமல் பேசுகையில், ''கொடியில் இடம் பெற்றுள்ள 6 கைகள், தென்னிந்தியாவில் உள்ள ஆறு மாநிலங்களை குறிக்கிறது. நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களை குறிக்கிறது.மக்களின் நீதியை மையமாக கொண்டு அது இருக்கும்,'' என்றார்.

தொண்டர்களின் கட்டுப்பாடு

* கூட்டத்தை முடித்த பின் கமல் பேசியது: ரசிகர்கள் கவனமாக பார்த்து செல்லுங்கள்.
நான் வரும் வழியில், வாகனங்களில் பலர் வேகமாக வந்ததை பார்த்து பயந்தேன். எனவே கவனமாக வீட்டிற்கு செல்லுங்கள்.

* டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இரவு மதுரை சர்க்யூட் ஹவுசில் தங்கி, இன்று காலை 8:00 மணிக்கு டில்லி செல்கிறார்.

* கமல், காளவாசலில் உள்ள ஓட்டலில் இரவு தங்கி, இன்று காலை திண்டுக்கல் செல்கிறார்.

* 42 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை கமல் ஏற்றினார்.

* கட்சி மாநாடு இரவு 7:00 மணிக்கு துவங்கி 9:30 மணிக்கு முடிந்தது. கமல் அப்போது, பொதுக் கூட்டம் நடந்த இடத்தில் இருந்த குப்பைகளை அகற்றிவிட்டு செல்லுமாறு தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார். உடனே தொண்டர்கள், அந்தந்த இடத்தில் குப்பைகளை சேகரித்து வைத்து சென்றனர்.

* பெரும்பாலான தொண்டர்கள் விழா மேடைக்கு முன் இருந்த சேர்களை அடுக்கிவைத்து விட்டு சென்றனர்.நிகழ்ச்சி முடிந்ததும் ராமநாதபுரம் ரசிகர்கள் உட்பட இருவரின் அலைபேசி காணாமல் போனது.

* மாவட்ட செயலாளர்களாக மதுரை மணி, ராமநாதபுரம் மதி, சிவகங்கை வைத்தி, தேனி பாலஹாசன், திண்டுக்கல் சிவா உட்பட அனைத்து மாவட்டத்திற்கும் செயலாளர்களை நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...