Monday, February 12, 2018

மழை வந்தால் லீவு... போலிக் கண்கள்... ஆந்தைகள் பற்றிய அதிகம் அறியப்படாத தகவல்கள்!

துரை.நாகராஜன்


உலகில் இரவில் விழித்திருக்கும் பறவை எது என்று கேட்டால், அதற்குப் பெரும்பாலானோரின் பதில் 'ஆந்தை' என்பதாகத்தான் இருக்கும். ஆனால் இவ்வுலகில் 174 வகையான பறவைகள் இரவில் விழித்திருக்கின்றன. ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன. அவற்றில் ஆந்தைகள் கண்கள் பெரியதாகவும், பார்க்கும் திசையை மாற்றுவதற்கு முழுத் தலையையும் திருப்பிப் பார்க்கும் தன்மையும்கொண்டவை. ஆந்தை தூரப்பார்வை கொண்டது. பல ஆந்தைகள் முழு இருட்டிலும்கூட ஒலியைத் தொடர்ந்து வேட்டையாடும் தன்மை கொண்டவை. இதுபோல பல பொதுவான தகவல்கள் தெரிந்திருக்கலாம். ஆனால் ஆந்தையைப் பற்றி சில தகவல்கள் இன்னும் தெரியாமல் இருக்கத்தான் செய்கின்றன. அதில் சில சுவாரஸ்யமான தகவல்களை காணலாம்.



- மிகப் பெரிய கொம்புகளுடைய ஆந்தை தனது இறக்கைகளைப் பயன்படுத்தி தண்ணீரில் கடினமாக நீந்தக் கூடிய தன்மை கொண்டது. நீரில் நீந்திக் கரையேறும்போது கொம்பு ஆந்தைகள் தனது இறகினை உலர்த்தும். அப்போது மனிதர்களைக் கண்டால் தாக்கும்

- ஆந்தைகள் இரவில் மட்டும் விழித்திருப்பதில்லை, பெரும்பாலான ஆந்தைகள் பகலிலும் விழித்திருந்து இரை தேடும்.

- ஆந்தை இனங்களில் 14 வகையான முதுகெலும்புகளைக் கொண்ட ஆந்தைகள் இருக்கின்றன. இந்த முதுகெலும்புகள் மூலம் 270 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்ப முடியும்.

- கியூபாவில் வசித்துவந்த உலகின் மிகப்பெரிய ஆந்தை கியூபா அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தை 3.6 அடி உயரம் உள்ளது. இவ்வளவு பெரிய ஆந்தை பறந்திருக்குமா என்பது தெரியாது. ஆனால், அப்படிப் பறந்திருந்தால் இதுதான் உலகில் அதிக உயரம் பறக்கும் பறவையாக இருந்திருக்கும். இந்த ஆந்தையின் கால்களைப் பார்க்கும்போது, மனிதனுக்கு இணையான வேகத்தில் ஓடும் என்றே சொல்லலாம்.



- கொடிய வகை ஆந்தைகள் மத்தியக் கிழக்கு நாடுகளில் விவசாயிகளுக்கும், விஞ்ஞானிகளுக்கும் இடையே உள்ள உறவை வலுப்படுத்துகிறது. ஆம், இந்த ஆந்தைகள் ஒரு வருடத்திற்கு 6,000 எலிகளை உண்ணும். அதனால் விவசாயிகளுக்கு எலித் தொல்லை இருக்காது. இதனால் விவசாயிகள் கொடிய ஆந்தையை நண்பனாகவே பார்க்கின்றனர். விவசாயிகளின் நண்பன் என்று எல்லோரும் மண்புழுவைத்தான் சொல்வார்கள். அந்த வரிசையில் இந்த ஆந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம்.

- ஆந்தைக்கு முன்பக்கம் உள்ள இரண்டு கண்களைப் போன்றே தலையின் பின்புறமும் இரண்டு கண்கள் உண்டு. ஆனால், அதில் உண்மையான கண்கள் இருக்காது. எதிரிகள் தனக்குப் பின்னாலிருந்து தாக்காமல் தப்பிப்பதற்காகத்தான் அந்தப் பொய்க் கண்களைக் கொண்டிருக்கும்.



- பொதுவாகப் பெண் ஆந்தைகள், ஆண் அந்தைகளை விட பெரியதாக இருக்கும்.

- ஆந்தை மழையின்போது வேட்டையாடாமல் கூட்டுக்குள் இருந்து விடும். பெரும்பாலான ஆந்தைகளுக்கு இறக்கைகள் மிருதுவாக இருப்பதால் மழையின்போது பறக்க முடியாமல் போய்விடும்.

- ஆந்தை தனக்கென்று தனியாகக் கூடுகளை அமைத்துக்கொள்ளாது. மற்ற பறவைகளால் கைவிடப்பட்ட கூட்டைத்தான் ஆந்தைகள் அதிகமாக விரும்பும்.

- ஒவ்வொரு கால்களிலும் இரண்டு வலிமையான கூரிய நீளமான நகங்களைக்கொண்டிருக்கும். இதன் மூலமாகத்தான் இரையைப் பிடித்து உண்ணும்.

- பனி ஆந்தைகள் அதிகமான தொலைவு பறக்கும் தன்மைகொண்டது. 3,000 மைல் தொலைவு வரை நில்லாமல் பறக்கும் தன்மை கொண்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024