Monday, February 12, 2018

ஈறேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமை தரும் சிவராத்திரி நான்குகால பூஜைகள்! #MahaSivarathiri

மு.ஹரி காமராஜ்


விரதங்களிலெல்லாம் மேலான விரதம் சிவராத்திரி. இந்த விரதமிருந்து தேவாதிதேவர்களும், முனிவர்களும், மனிதர்களும் ஏன் விலங்கினங்கள் கூட மிகப்பெரிய வரங்களைப் பெற்றார்கள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்னை பார்வதி சாபம் நீங்கியது, இந்திரன் பதவி பெற்றது, கணபதி கணங்களின் முதல்வரானது, ஸ்ரீராமபிரான் தோஷம் நீங்கியது, முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு வடிவிலிருந்து மீண்டு மிகப்பெரிய அரசரானது என எல்லாமே இந்த சிவராத்திரி விரதத்தினால்தான் நடைபெற்றது. சிவராத்திரி அன்று கண்விழித்து நான்கு கால பூஜை செய்வோர் எவருக்கும் இனி பிறப்பே இல்லை என்பதும் சகல பாவங்களையும் ஒழித்து முக்தி பெறுவார்கள் என்பதும் புராணங்கள் சொல்லும் நம்பிக்கை. ஈ, எறும்பு தொடங்கி திருமால் வரை இந்த சிவராத்திரியின் மகிமையை உணர்ந்தே பல்வேறு ஆலயங்களில் சிவபூஜையினை இந்த நாளில் மேற்கொண்டார்கள். அப்படி ஒரு சிறப்பான மகா சிவராத்திரி நாளில் அறியாமல்தான் செய்த பூஜையின் பலனால் வேடன் ஒருவன் பெருமைபெற்ற விதம் சுவாரஸ்யமானது.



அயோத்தியை தசரத சக்கரவர்த்தி ஆட்சி செய்துகொண்டிருந்த காலமது. அயோத்தியின் எல்லையிலிருந்த அடர்ந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான் வியாதன் என்ற வேடன். ஒருநாள் பகல்வேளையில் தொடங்கிய அவனது வேட்டை இருட்டிய பிறகும்கூட முடிவடையவில்லை. ஒரு சின்னஞ்சிறு முயல் கூட அன்று அவனுக்குக் கிடைக்கவில்லை. பசித்திருக்கும் தனது குடும்பத்தை எண்ண எண்ண அவனுக்கு ஆத்திரம் மிகுதியானது. கண்சிமிட்டும் நேரத்துக்குள் ஒரு சிறுத்தையைக்கூட தைத்து விடும் அவனது வில்லாற்றலுக்கு அந்த நாள் சவால் விடுவதைப்போல இருந்தது. சூரியன் மயங்கி மேற்கு திசையில் விழுந்துவிட்டான். வியாதனின் கண்கள் பிரகாசமாகி விலங்குகளை நோக்கிச் சென்றன. எதிரே இருந்தால் விலங்குகள் ஓடிவிடும் என்று எண்ணி தாகம் தீர்க்க ஒரு குடுவையில் நீரை எடுத்துக்கொண்டு ஒரு வில்வ மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான். சற்று நேரத்துக்குப் பிறகு சலசலக்கும் ஒலிக்கிடையே ஒரு மானைக் கண்டுவிட்டான் வியாதன். ஆர்வம் பெருகி அதை நோக்கி அம்பை குறிவைக்கும் நேரத்தில் அந்த மான் அவனிடம் கெஞ்சிப்பேசத் தொடங்கியது. 'அய்யா குட்டி ஈன்ற என் மனைவிக்கு உணவு எடுத்துச்செல்ல வந்துள்ளேன், தயவு செய்து என் இருப்பிடம் சென்று இந்தத் தழைகளைக் கொடுத்துவிட்டு வரும்வரை என்னைக் கொல்லாதீர்கள்' என்று மன்றாடியது.



மானின் கெஞ்சலுக்கு மனமிரங்கிய வேடன், மானை சீக்கிரம் வரச்சொல்லி விட்டுவிட்டான். அப்போது அவன் அசைவால் நீர் கீழே சிந்தி மரத்தின் இலைகளும் சில உதிர்ந்தன. அவை மரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்திருமேனியின் மீது பட்டு தானாக அபிஷேகம் நடந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் சலசலக்கும் ஓசை கேட்க, அப்போது ஒரு பெண் மானைக் கண்டான் வேடன். அதுவும் தன் இணையான ஆண் மானை தேடி வந்ததாகவும், கருவுற்றிருக்கும் தனது மூத்தாளை கண்டுவிட்டு உடனே வந்துவிடுவதாகவும் கெஞ்சியது. வேடனும் அதையும் சீக்கிரம் வந்துவிடுமாறுச் சொல்லிவிடுவித்தான். அப்போதும் நீர் சிந்தி வில்வ இலைகள் உதிர்ந்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடந்தது. அடுத்து வயதான ஓர் ஆண் மான் எதிர்ப்பட, அதுவும் குட்டியை ஈன்றிருக்கும் தங்களது மகளைப் பார்த்துவிட்டு வந்துவிடுவதாகச் சொல்லிச் சென்றது. மூன்றாவது முறையாக அபிஷேகமும் நடந்தது. இறுதியாக இரு மான்குட்டிகள் எதிர்ப்பட, அவையும் தங்களது பெற்றோர்களைப் பார்த்து சொல்லிவிட்டு வருவதாகச் சென்றன. தாய், தந்தை, தாத்தா, பாட்டி என எல்லா மான்களிடமும் குட்டிகள் தாங்கள் செய்த சத்தியத்தைக் கூறி, வேடனை நோக்கி வந்தன. அவற்றோடு எல்லா மான்களும் சொன்ன சொல்லைக் காப்பாற்ற வந்தன.

மகா சிவராத்திரி நாளின் நான்கு கால பூஜைகளைப்பற்றி அறிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யவும்..

மான் கூட்டத்தினைக் கண்ட வேடன் குறிவைக்க தயாராக, நான்காம் ஜாம வேளை நெருங்கியது. சொன்ன சொல்லை மீறாத அந்த மான்களின் செயலால் மனம் நெகிழ்ந்த வேடன் அவற்றை வணங்கி, தருமத்தை மீறாத உங்கள் செயல் என்னை மகிழ்விக்கிறது. என் குடும்பமே பட்டினியால் கிடந்தாலும் சரி, உங்களைக் கொல்லமாட்டேன் என்று வாழ்த்தினான். அப்போது உண்டான அசைவால் நீர் சிந்தி ஈசனை குளிப்பாட்டியது. வில்வ இலைகள் விழுந்து ஈசனை அர்ச்சித்தன. வேடன் இரவெல்லாம் கண்விழித்து மானுக்குக் காத்திருந்த நாள் மகாசிவராத்திரி திருநாள். நான்கு ஜாமத்திலும் தற்செயலாக நடந்த அந்த பூஜையால் ஈசன் மகிழ்ந்து உடனே அங்கு தோன்றினார். ஒளிப்பிழம்பாக விடையேறிய பெருமானாய்த் தோன்றிய ஈசனை மான்களும், வேடனும் வணங்கித் துதித்தார்கள். 'சொன்ன சொல்லை மீறாத மான்களே உங்களைப் பெருமைப்படுத்தும் விதமாக இனி மான் ஏந்தியே காட்சி தருவேன் என்று ஈசன் வாக்களித்தார். மேலும் வேடனை நோக்கி 'வேட்டையாடுவது உன்னுடைய தொழில் என்றாலும், மான்களுக்காக மனமிரங்கி அவற்றைக்காத்த வியாதனே, நீ அறியாமல் செய்தாலும், மகாசிவராத்திரியன்று நீ செய்த நான்கு கால பூஜைகளையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டோம். மகாசிவராத்திரி அன்று செய்யப்படும் பூஜை ஈரேழு லோகங்களையும் பெறத்தக்க பெருமைகளை அளிக்கவல்லது. எனவே நீ செய்த பூஜைக்கு ஈடாக வேண்டுவனக்கேள்' என்றார் ஈசன்.



தங்களையே நேரிடையாகக் கண்ட பிறகுதான் வேண்டுவது ஒன்றுமில்லை எனக்கூறி இனிக் கொல்லாவிரதம் ஏற்று நடப்பேன் என்றும் உறுதிகூறினான். அவனது பணிவுக்கு மகிழ்ந்த ஈசன், "சிவராத்திரி விரதம் மேற்கொண்ட ஒருவருக்கு வரமளிக்காமல் இருப்பது எனக்கு வழக்கமில்லை" என்று கூறி "இனி நீ வியாதனில்லை, குகன் என்று அழைக்கப்படுவாய். ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமான ஸ்ரீராமர் இந்தக் காட்டுக்கு வரும்போது அவரை நீ சந்திப்பாய், அதுமட்டுமல்ல, அவருக்கே தம்பியாகும் பாக்கியத்தையும் நீ பெறுவாய்' என்று வாழ்த்தி மறைந்தார். சிவராத்திரி விரத மகிமையால் ஒரு சாமானிய மனிதன் குகன் என்று மாறி ஸ்ரீராமர் வாயால் சகோதரன் என்றும் அழைக்கப்பட்டார். அறியாமல் செய்த சிவராத்திரி பூஜையே தெய்வ நிலையைத் தருமென்றால் இந்த நாளின் மகத்துவத்தை என்னவென்று சொல்வது?

No comments:

Post a Comment

Passengers can’t fly Air India to Singapore from June to Aug

Passengers can’t fly Air India to Singapore from June to Aug  Venkadesan.S@timesofindia.com 14.015.2026 Chennai : Air India will suspend its...