உயிர் பிரியும் வரை கொடூரன் தஷ்வந்துக்கு 'தூக்கு'
செங்கல்பட்டு: சிறுமி ஹாசினியை, பாலியல் துன்புறுத்தல் செய்து கொன்ற வழக்கில், கொடூரன் தஷ்வந்துக்கு துாக்கு தண்டனை விதித்து, செங்கல்பட்டில் உள்ள, காஞ்சிபுரம் மாவட்ட, மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, போரூர், மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர், பாபு; இவரின் மகள் ஹாசினி, 6. அங்குள்ள, 'நிகிதா பிளாட்ஸ்' குடியிருப்பில், கீழ் தளத்தில் பாபு வசித்து வந்தார். அதே குடியிருப்பில், தஷ்வந்த், 22, என்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர், குடும்பத்துடன் வசித்து வந்தான்.
கடந்த, 2017 பிப்., 5 மாலை, 5:00 மணிக்கு, கீழ்தளத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன், தஷ்வந்த், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.
அங்கு, ஒன்றும் அறியாத சிறுமி, நாயுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். அப்போது, வீட்டின் கதவை உட்புறமாக தாழிட்ட தஷ்வந்த், சிறுமியை பாலியல் வன்முறை செய்ய துவங்கினான்.
அதனால், சிறுமி கதறி அழுதுள்ளாள். உடன், 'பெட்ஷீட்'டை எடுத்து, சிறுமியின் முகத்தில் மூடி அழுத்தி, கழுத்தை இறுக்கி, வாயை பொத்தி, கொலை செய்தான் தஷ்வந்த்.அதை மறைப்பதற்காக, சிறுமியின் உடலை, 'டிராவல்' பையில் வைத்து, இரு சக்கர வாகனத்தில், வெளியே எடுத்துச்சென்று, தாம்பரம் - மதுரவாயல் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகேயுள்ள, முட்புதரில் வீசியதோடு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்து, தடயங்களை அழித்தான்.இதுகுறித்து, மாங்காடு போலீசார், இந்திய தண்டனை சட்டம், குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புசட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, தஷ்வந்தை கைது செய்தனர்.
30 பேரிடம் விசாரணை
செங்கல்பட்டில் உள்ள, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை நடைபெற்றது. ௨௦௧௭ டிசம்பரில் விசாரணை துவங்கி, ஜனவரியில் முடிந்தது. ஹாசினியின் தந்தை, பாபு உட்பட, 30 பேரிடம் விசாரிக்கப்பட்டது.
வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவித்ததை தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்தை, நேற்று காலை, 11:35 மணிக்கு, நீதிபதி, வேல்முருகன் முன் ஆஜர்படுத்தினர். மாலை, 3:00 மணிக்கு நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், 'தஷ்வந்த் குற்றவாளி' என, தீர்மானித்திருப்பதாகவும், தண்டனை விபரங்களை, பின்னர் அறிவிப்பதாகவும் கூறினார்.அப்போது, தஷ்வந்த், குறைந்தபட்ச தண்டனை வழங்கும்படி, நீதிபதியிடம் வேண்டினான். மாலை, 4:30க்கு, நீதிபதி, வேல்முருகன்,தண்டனை விபரங்களை வாசித்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:
சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக, ஏழு ஆண்டுகள்; பாலியல் தாக்குதல் செய்யும் நோக்கில், கடத்தி வைத்திருந்த குற்றத்திற்காக, 10 ஆண்டுகள்; மானபங்கப்படுத்திய குற்றத்திற்காக, ஏழு ஆண்டுகள்; தடயங்களை
மறைத்ததற்காக, ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.பாலியல் வன்முறை குற்றத்துக்காக, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ௧5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. சிறுமியை கொலை செய்து, எரித்த குற்றத்திற்காக, துாக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. உயிர் பிரியும் வரை, துாக்கிலிட வேண்டும்.இவ்வாறு நீதிபதி கூறினார்.இதையடுத்து, மாலை, 6:20க்கு, தஷ்வந்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன், புழல் சிறையில் அடைத்தனர். அரசு தரப்பில் வழக்கறிஞர், சீதாலட்சுமி ஆஜரானார். அரசு தரப்போடு இணைந்து, சிறுமியின் பெற்றோர் சார்பில், உயர் நீதிமன்ற வழக்கறிஞர், கண்ணதாசன் ஆஜரானார்.
வழக்கறிஞர், கண்ணதாசன் கூறும்போது, ''விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்ததில், முறையாக வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை, உயர் நீதிமன்றம் ஆராயும். தண்டனை விதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்தால், அதை எதிர்த்து, சிறுமியின் பெற்றோர் சார்பிலும், உயர் நீதிமன்றத்தில் முறையிட முடியும்,'' என்றார்.
No comments:
Post a Comment