Wednesday, February 14, 2018

ரேசிங்.. சேஸிங் திருமணங்கள்.. பரபர கதை சொல்லும் காதலர்களின் "லவ்வர்" #HappyValentinesDay #LetsLove
 
விகடன் 



காதலர்களின் அதிகபட்ச இலக்கே திருமணம்தான். அதை வெற்றிகரமாக ஆபத்தின்றி முடித்துக் கொடுக்க நண்பர்களைத் தேடி அணுகுவதுதான் அவர்களுக்குண்டான மிகப்பெரிய சுமை. ஆனால், அந்த சிக்கலை சட்டப்பூர்வமாக முடித்து, காதலர்களை இணைத்து வைக்கும் சேவையை கடந்த 20 ஆண்டுகளாக செய்து வருகிறார் 'கராத்தே' முத்துக்குமார். இவரால் இணைந்த ஜோடிகளின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேர். திருச்சியைச் சேர்ந்த 'கராத்தே' முத்துகுமார் ஒரு வழக்கறிஞர். மேலும், தி.மு.க எம்.பி. திருச்சி சிவாவின் மருமகன் இவர். காதலர் தினத்தை முன்னிட்டு அவரிடம் பேசினோம்.

"காதலர் தினம் சீசன் இது. இதுவரைக்கும் 1902 பேருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறோம். இன்னும் எட்டு பேருக்கு பண்ணிட்டா 2000 ஆகிடும். ரெண்டு பேரு இருக்காங்க. இன்னும் ஆறு பேர் இல்லை. அதற்காக வடிவேலு மாதிரி போற வர்றவங்க எல்லாருக்குமா கல்யாணம் செஞ்சு வைக்க முடியும்." என்றபடி கலகல என்ட்ரி கொடுத்தவரிடம் நாம் கேள்விகளை கொடுத்தோம்.

"காதலர்களை சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியது?"

"நான் படிக்கும் காலத்திலேயே இந்த சாதி, மதம் இதெல்லாம் என்னன்னே தெரியாமதான் வளர்ந்தேன். 1997 அப்போ, முதல்முறையாக சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பம் பூர்த்தி பண்ணும்போதுதான் சாதின்னு ஒண்ணு இருக்கிறதே எனக்குத் தெரியும். கல்லூரிக் காலத்துல சாதி, சமூகம் தொடர்பா நிறைய விஷயங்கள் தெரிய வந்துச்சு. இது, காதலுக்குள்ள ஏற்படுத்துற பாதிப்பு பற்றி நிறையவே புரிய வந்துச்சு. கூட இருந்த நண்பர்களுக்காக சில காதல் திருமணங்களை நடத்தி வைச்சோம். அப்போதான், 'இதை ஏன் பொதுவா எல்லாருக்கும் பண்ணக்கூடாது'னு தோணுச்சு. ஒருகட்டத்துல சாதி, மதங்களை களைவதற்காகவே காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க ஆரம்பிச்சேன்."

"ஒரு காதல் ஜோடி உங்களிடம் நம்பி வந்ததும், அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும்? "

"அவங்களோட காதல்பற்றி நிறைய பேசி தெரிஞ்சுப்பேன். 'காதலிக்கிறோம், கல்யாணம் செஞ்சு வைங்க' என்று யார் வந்து நின்னாலும் உடனே திருமணம் செய்து வைக்க மாட்டோம். அவங்களுக்கு கவுன்சலிங் கொடுக்க ஏற்பாடு செய்வோம். பிறகு, சட்டரீதியாக தகுதியான ஜோடிகளானு சரிபார்ப்போம். பிறகுதான் திருமண ஏற்பாடுகளைச் செய்வோம். உண்மைக் காதலர்களுக்குப் பிரச்னை என்று தெரியவந்தால், நாங்களே அணுகி அவங்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வோம்.

" சாதி மாற்றி திருமணம் செய்து வைத்த அனுபவங்கள்? "

"நிறைய உதாரணங்கள் இருக்கு. ஒரு காதல் ஜோடிக்கு திருமணம் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போனோம். அவங்க இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவங்க. அங்கே போய், பொண்ணுகிட்ட கேட்டோம். 'உங்க வீட்டுக்கு தெரிஞ்சா ஏதாவது பிரச்னை வருமா'ன்னு. அதற்கு அந்த பொண்ணு 'எங்கப்பா வீட்டோடதாங்க இருக்காரு. எந்த பிரச்னையும் பண்ண வாய்ப்பே இல்லைங்க!'னு சொன்னாங்க. ஒரு மணிநேரம் கழிச்சு பார்த்தா, ஸ்டேஷன் வாசலில் 200 பேர் வந்து நிக்குறாங்க. விசாரிச்சபோதுதான் தெரியுது, அந்த ஊரிலேயே 'ஊர் தீர்மானம்'னு ஒண்ணு போடுறாங்க. அந்த பொண்ணை மீட்க எவ்வளவு செலவு ஆனாலும் அந்த சாதி மக்களே ஒண்ணு சேர்ந்து வசூல் பண்ணி கொடுத்துடுவாங்களாம். நாங்க வெறும் 20 பேருதான் இருக்கோம். நான் கூட்டத்தை பார்த்து, "இவங்க ரெண்டு பேரும் மேஜர். கல்யாணம் பண்ணிட்டாங்க. இனி ஒண்ணும் பண்ண முடியாது'ன்னு சொல்லிட்டேன். அதற்கு அவங்க, "ஒண்ண இங்கேயே போட்டுட்டு பொண்ணை தூக்காம போக மாட்டோம்'னு விடாப்பிடியா நின்னாங்க. நாங்க இதையே ஒரு சவாலா எடுத்து பண்ணோம். நேரம் ஆக ஆக இன்ஸ்பெக்டர் 'ஸ்டேஷன காலி பண்ணுங்க'னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. உடனே போன் பண்ணதுனால நிறைய நண்பர்கள் உதவிக்கு வந்தாங்க. உதவி கமிஷனர் ஶ்ரீதர் சாரும் உதவி செஞ்சாரு. ஸ்டேஷன் முன்னாடி மிரட்டுன எல்லாரையும் போலீஸ் துரத்தி விட்டுட்டாங்க. எல்லாம் முடிஞ்சதுக்கு பிறகு அந்த காதல் ஜோடிக்கு பிரச்னை இல்லாம கல்யாணம் செஞ்சு வச்சோம். இங்க எல்லாத்துலயும் பிரச்னைதான்."

"காதலர்களுக்கு திருமணத்தை தவிர வேறு வடிவில் வரும் பிரச்னைகளை அணுகியிருக்கீங்களா? "

"2008-ல் திருச்சியில் காதலர் தினத்தப்போ மிகப்பெரிய பிரச்னை நடந்தது. அப்போ இருந்த சில மதவாத அமைப்புகள், திருச்சி முக்கொம்பு, கல்லணை மற்றும் மலைக்கோட்டைக்கு வரும் காதல் ஜோடிங்ககிட்ட தாலி கட்டச்சொல்லி அராஜகம் பண்ணாங்க. அப்போ நாங்க ஒரு 500 பேர் டி.ஜி.பி கிட்ட போய் அவங்களை கைது செய்ய மனு கொடுத்தோம். அடுத்த வருடம் 'இனி காதலர் தினம் கொண்டாடும் காதலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும்'னு டி.ஜி.பி அறிக்கை விட்டாரு."

"காதலர்கள் சேர்த்து வைக்கும் போது நடந்த எதிர்பாராத சம்பவம் பற்றி? "

"மண்ணச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒரு பையன் வேறு சாதியைச் சேர்ந்த பொண்ணை லவ் பண்ணியிருக்கான். என்கிட்ட வந்த அந்த பையன், 'அண்ணே. நான் மேஸ்திரியா இருக்கேன். இந்த பொண்ணுக்காக நானே சம்பாதிச்சு வீடு கட்டியிருக்கேன். எல்லா வசதியும் பண்ணியிருக்கேன். ராணி மாதிரி பாத்துக்குவண்ணே!' என்றான். நானும் விசாரிச்சேன். பிறகுதான் தெரிஞ்சுது அந்த பொண்ணு என்னோட தூரத்து சொந்தம். சொந்தக்காரங்க என்கிட்ட 'உங்க சொந்தக்கார பொண்ணு சார். நீங்களே இப்படி பண்ணலாமா?'னு சமரசம் பேச வந்தாங்க. உடனே, பையனையும், பொண்ணையும் கமிஷனர் ஆபிஸ்ல சரண்டர் பண்ணேன். போலீஸ் பாதுகாப்போட கல்யாணம் செஞ்சு வச்சோம். இப்போ, அந்த பையனுக்கு குழந்தை பிறந்திருக்கு. அதே ஊருல, அந்த பொண்ணை ராணி மாதிரி பாத்துக்குறாரு அந்த பையன்"

"காதலர்களை சேர்த்து வைப்பதால் நீங்கள் எதையாவது இழந்திருக்கீங்களா? "

"நிறைய அடிபட்டிருக்கேன். எல்லா சமூகத்தினரும் எங்க மேல கோபத்தோடதான் இருக்காங்க. என் தலையில வெட்டுக்காயம் இல்லாத இடத்தை நீங்க பார்க்கவே முடியாது. ஆழ்ந்த தூக்கம் தூங்கி பல வருஷம் ஆகுதுங்க. என் மாமியார் கடைசியா சாகப்போகும்போது கூட,"உன்னை நம்பி என் பொண்ணை கொடுத்திருக்கேன். எனக்காக, லவ் மேரேஜ் பண்ணி வைக்கறதெல்லாம் நிறுத்திடு"ன்னு சொன்னாங்க. மறுத்துட்டேன்."

"காதலர் தினம் வந்துருக்கு. இன்றைய காதலர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?"

"உங்களுடைய இணையை சரியா பார்த்து தேர்ந்தெடுங்க. முதல் தலைமுறையோடு சாதி பெருமை பேசுறவங்க போகட்டும். நீங்களாவது சாதி பார்க்காம இருங்க. 365 நாள்களையும் 'காதலர் தின'மா கொண்டாடுங்க. காலம் முழுக்க அந்த 'லவ் கெமிஸ்ட்ரி' இருக்கணும். வாழ்க்கை முழுவதும் காதலையும், காதலர்களையும் கொண்டாடுங்க."

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024