Friday, February 23, 2018

ஏர்செல் சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும்: தென் இந்திய தலைமை செயல் அதிகாரி தகவல்!
By DIN | Published on : 22nd February 2018 05:15 PM


சென்னை: தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை புதன்கிழமை கடுமையாக பாதிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தொலைபேசி, இணைய சேவைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் ஆத்திரமடைந்தனர்.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. செல்லிடப்பேசி புழக்கத்துக்கு வந்த காலத்திலேயே ஏர்செல் நிறுவனம் தனது சேவையைத் தொடங்கியதால், அதற்கு வாடிக்கையாளர்கள் பெருமளவு குவியத் தொடங்கினர்.

நாளடைவில் செல்லிடப்பேசி இணைப்பு வழங்கும் சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் படையெடுக்கத் தொடங்கின. வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அள்ளிக் குவித்தன. அதேசமயம், 'ஏர்செல்' நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் படிப்படியாக விலகி வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனங்களை நாடத் தொடங்கினர். இதற்கு செல்லிடப்பேசி சிக்னல்கள் கிடைக்காததும் ஒரு காரணம் என வாடிக்கையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

சிக்னல் இல்லாத காரணத்தால், ஏர்செல் இணைப்பை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பலரும் புதன்கிழமை கடும் அவதிக்கு உள்ளாகினர். அவர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவன சேவை மையங்களை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, தொழில்நுட்ப ரீதியாக ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என புதனன்று அந்த நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.

ஏர்செல் நிறுவனத்தின் சிக்னல்கள் திடீரென தடைபட்டதற்கான காரணம் குறித்து அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், 'ஏர்செல்லின் சிக்னல் கோபுரங்களை வைத்திருக்கும் ஏஜென்சிகளுக்கு வாடகைப் பணம் கொடுப்பதில் நிலுவை உள்ளது. இதனால் சிக்னல் விநியோகம் தடைபட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஏர்செல் நிறுவனத்துக்காக செயல்பட்டு வந்த 9 ஆயிரம் டவர்களில் 6 ஆயிரத்து 500 டவர்களில் சிக்னல் நிறுத்தப்பட்டுள்ளது' என தெரிவித்தனர்.

வேறு நிறுவனத்துக்கு மாற்றும் வசதி: ஏர்செல் நிறுவனத்தின் சேவை திருப்திகரமாக இல்லாத காரணத்தால், வேறு செல்லிடப்பேசி சேவை வழங்கும் நிறுவனத்துக்கு மாறுவதிலும் சிக்கல்கள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை பாதிப்பு காரணமாக விரக்தியுற்ற வாடிக்கையாளர்கள், சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஏர்செல் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக நான்கு நாட்கள் ஆகும் என்று அந்நிறுவன தென் இந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

தமிழகம் முழுவதும் தாற்காலிகமாக முடங்கியுள்ள 'ஏர்செல்' நிறுவனத்தின் செல்லிடப்பேசி சேவை சரியாக இன்னும் நான்கு நாட்கள் ஆகும்

அதே சமயம் வேறு நிறுவனங்களுக்கு அலைபேசி எண்ணை மாற்றிக் கொள்ள குறுஞ்செய்தி அனுப்பியவர்களுக்கு, கூடிய விரைவில் மாறுவதற்கான 'தனிப்பட்ட போர்ட் எண்' கிடைக்கும்,

ஏர்செல் நிறுவனம் திவால் ஆகப் போகிறதுஎன்பது முழு உண்மையில்ல; நிறுவன கடன் மறுசீரமைப்பு பணிகளில் ஏர்செல் தற்பொழுது ஈடுபட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Man held for ‘digital arrest’ scam

Man held for ‘digital arrest’ scam  Sindhu.Kannan@timesofindia.com 30.10.2024 Chennai : Two days after Prime Minister Narendra Modi cautione...