Thursday, February 1, 2018

வானில் இரண்டு சூப்பர் நீல நிலாக்கள்

By நெல்லை சு. முத்து  |   Published on : 31st January 2018 11:02 AM
muthu
வானத் திரை அரங்கில் சூரிய விளக்கு அணைந்த பிறகுதான் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும். நிலாவும் அதே ரகம். ஆனாலும், இந்த நிலாவையும் நட்சத்திரங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமம். காவிய ரசம் சொட்டச் சொட்ட எத்தனையோ பக்தர்கள், ஜென் சித்தர்கள், கவிக் கொத்தர்கள், சொற் குயவர்கள், சிறுகதைத் தச்சர்கள் பலரும் படைப்புகள் தயாரித்து உள்ளனர்.

சுய ஒளி அற்ற நிலா, பிற ஒளியை ஏற்றுத்தானே 'நீல வான ஆடைக்குள் முகம் மறைத்து' இரவில் எட்டிப் பார்க்கிறது?

கவிதையும், ஆன்மிகம் மாதிரிதானே? உள்ளத்தால் உணரப்படுவது. எதையும் கூட்டம் திரட்டி, பொருள் ஈட்டி, வார்த்தைகளில் பிறர்க்கு உபதேசிக்க முற்பட்டால் அது நிச்சயம் உணர்வை ஊட்டுவதாக இருக்கவே முடியாது.
சூப்பர் ஸ்டார் என்றால் தெரியும். சூப்பர் நிலா என்றால் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்?

முப்பது ஆண்டுகளுக்கு முன்னம், அமெரிக்க சோதிடர்கள் பேரவையின் சிறப்புச் சான்றிதழ் பெற்ற ரிச்சர்ட் நோல்வி என்பவர்தான் இந்தக் கலைச் சொல்லினை அறிவித்தவர்.

கடந்த ஒன்றரை நூற்றாண்டுக் காலத்தில் முக்கிய 'சூப்பர் நிலா' சந்திர கிரகணம் இன்று (2018 ஜனவரி 31) கீழை - வடகிழக்கு வானில் நிகழ்கிறது.

இன்று வழக்கத்திற்கு மாறாக, சந்திரன் சராசரி அளவினைக் காட்டிலும் எட்டில் ஒரு பங்கு (12 சதவீதம்) பெரிதாகத் தோன்றும். பொலிவும் மூன்றில் ஒரு பங்கு (30 சதவீதம்) கூடுதல்.

இருள் கவ்விய நிலாவின் ஒரு பகுதி இலேசான சிவப்பு வண்ணம் படிந்தது போல இருக்கும். அதனால் இதற்கு, 'சூப்பர்', 'குருதி', 'ரத்த' நிலா போன்ற 'விருதுப் பெயர்கள்' சேர்த்து அழைக்கிறோம்.

சந்திர கிரகணம் என்பது நிலாவில் விழும் சூரிய ஒளியினை நமது பூமி மறைப்பதால் ஏற்படும் இயல்பான வானவியல் நிகழ்வு. இதனையே 'திங்களைப் பாம்பு கொண்ட' நிகழ்ச்சியாக வள்ளுவரும் (குறள் 1146) ஏற்றுப் பாடுகின்றார்.

திருமால் மோகினி வடிவில் தோன்றித் தேவர்களுக்கு அமுது பகிர்ந்து அளித்தார். அப்போது தேவர் வேடத்தில் சூரிய, சந்திரர் இருவருக்கும் நடுவில் இராகு புகுந்து அமுது வாங்கினார்.

சூரிய, சந்திரர்கள் அது குறித்துத் திருமாலிடம் புகார் கூறினர். அதனால் மோகினியான திருமால் தனது கையில் இருந்த சட்டுவத்தால் இராகு தலையில் அடித்தார். தலை இராகு என்றும், தேகம் கேது என்றும் பிளந்தது. இராகு கரும்பாம்பு. கேது செம்பாம்பு. இவர்கள் தங்களைத் திருமாலிடம் காட்டிக் கொடுத்த சந்திர, சூரியர்களை அவ்வப்போது மறைப்பதுதான் சந்திர, சூரிய கிரகணங்களாம்.

'பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும்...' (நற்றிணை 128), 'அரவு நுங்கு மதி' (குறுந்தொகை 395), 'பாம்பு சேர் மதி போல' (கலித்தொகை 15), 'திங்களை உறின்' (கலித்தொகை 140), 'பால் மதி சேர்ந்த அரவினைக் கோள்விடுக்கும்' (கலித்தொகை 104) - எனப் பல பாடல்களில் சங்கப் புலவர்களும் குறிப்பிடுகின்றனர்.

அதனால்தானே கிரகண வேளைக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன. எதிலும் உடனடியாக மெய்ப்பொருள் காண்பதைவிட 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற சமரசத்தையும் புத்திசாலி வள்ளுவரே வகுக்கிறார்.

கிரகண வேளையில்மட்டும் அல்ல, மற்ற நேரம் கெட்ட நேரங்களில் கூட உண்பதும், நீர் அருந்துவதும் குளிப்பதும், குளிக்காததும் அவரவர் விருப்பம்.
போகட்டும். நளாயினி சூரியனை 'நில்' என நிறுத்தியது போன்ற புராண, கர்ண பரம்பரைக் கதைகள் நம் நாட்டிலும் உண்டு. பாரதப் போரின்போது சூரியனை கிரகண இருள் கவ்விய இதிகாசக் கதைகளும் நாமறிவோம்.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாட்ரிக் துறவியார் அயர்லாந்து நாட்டு மக்களை தெய்வ விசுவாசிகளாக மாற்றிடவும் சூரிய கிரகணங்கள் உதவியுள்ளன!

அது சரி... நீல நிலா என்றால் புரியவில்லையா? நிலா, பூமியைச் சுற்றி வரும் கால அளவினை வெறுமனே மாதம் என்கிறோம். ஆனால், வானவியலில் பல வகை மாதங்கள் உள்ளன.

விண்வெளியில் ஒரு குறித்த விண்மீன் திசையினைப் பொருத்தமட்டில், ஒரு தடவை சுற்றும் சராசரி காலம் 'திசை மாதம்' (சைடீரியல்' மாதம்). இது 27.32 நாட்கள். இலத்தீன் மொழியில் 'சைடஸ்' என்றால் விண்மீன்.

இரண்டு பௌர்ணமிகளுக்கு இடையே 29.531 நாட்கள் இடைவெளி வரும். இதுவே ஆங்கிலத்தில் 'சைனோடிக் மாதம்'. தமிழில் 'திங்கள் மாதம்' ('லூனார்' மாதம்) என்று கூறலாம். 'சைனோடிக்' என்றால் சந்திப்பு.

அதனால் ஒரு சில ஆங்கில மாதங்களில் இரண்டு முறை பெளர்ணமி தோன்றினால், யாரும் வருத்தப்பட வேண்டாம். இரண்டாம் தடவை காட்சி தரும் முழு நிலவுக்கு 'நீல நிலா' என்பதுதான் பட்டப் பெயர்.

யாரேனும் ஆபாசப் படம் மாதிரி என்று நினைத்துவிட வேண்டாம். பச்சையான (பாட்டு), மஞ்சள் (பத்திரிகை), சிவப்பு (விளக்கு விவகாரம்), கருப்பு (பணம்) போல சில திரைப்படங்களுக்கு 'நீலம்' என்பது 'கெட்ட' வார்த்தை!

நமக்கு என்னவோ இந்தியாவில் ஒருவர் சொன்னார் என்பதை விட, எஸ்கிமோ சொன்னால்தான் ஏற்றுப் பதிவு செய்வோம். நியூஃபவுண்ட்லாந்து நாட்டுப்புற வழக்கு மற்றும் மொழி ஆவண நினைவுப் பல்கலைக்கழகத்தினர் நீல நிலா குறித்துப் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

1985-ஆம் ஆண்டு 'உலக நாட்காட்டிப் பதிப்பக'த்தின் வழி மார்கோ மக்லூன்-பஸ்டா மற்றும் ஆலிஸ் சீகல் தொகுத்து வெளியிட்ட 'குழந்தைகளுக்கான உலக சாதனைகள் மற்றும் உண்மைகள் நாட்காட்டி' (World Almanac of Records and Facts, World Almanac Publications, New York, 1985)  என்கிற நூலில் நீல நிலா பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன.

1883-ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் கிரக்கதோவா எரிமலை வெடித்தது. அதில் இருந்து சீறிப் படர்ந்த சாம்பல் புகை மூடி, அந்திவானம் பச்சை நிறம் பூண்டது. இரவில் முழு நிலாவும் நீல நிறமாகத் தோன்றியதாம்.

1951-ஆம் ஆண்டு மேற்கு கனடாவில் காடு தீப்பற்றி எரிந்தது. வட அமெரிக்காவின் வட கிழக்கு வானில் சாம்பல் திரைமறைவில் நிலவு நிறமாகக் காட்சி அளித்தது.

எப்போதாவது நிகழும் இத்தகைய சம்பவங்களால் மேனாட்டில் உதித்தது ஒரு பழமொழி. 'நீல நிலா உதித்தால்தான் நமக்குத் திருமணம்' என்கிற சொலவடை.
'அத்தி பூத்தாற்போல' என்பது போல... 'நீல நிலாக் காலம் வந்தால்தான் கட்சி தொடங்குவோம்' என்பது இங்கு நம் புது மொழி!

எப்படியோ, இத்தகைய மாதமிரு முழு நிலாக் காட்சியினை ஒரு நாட்டுப் புறக் கதையோடு இணைத்து மேனாட்டில் வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகள் அலைபரப்பாயின.

நமக்கு வந்த சோதனை, இங்கு ஊடகங்களில் இன்னமும் தமிழர்களை ஆற்றுப்படுத்த ஏதேனும் இருட்டு அரங்கின் நட்சத்திரம் உதிக்காதா என்றே விவாதங்கள்.

துயரச் சூழலில்தான் 'நீல நிலா கருக்கிறதே' என்று மேலைநாட்டவர் பாடுவார்களாம். முன்பு 'வெள்ளி நிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு' என்று பாடும்போது சோக நிலா, வெள்ளி ஆன காலம் காலாவதி ஆயிற்று.

இந்த ஆண்டு வேறு பல வானியல் நிகழ்வுகளும் அரங்கேற இருக்கின்றன. பண்டைக் காலத்தில் வானில் இருந்து விண்மீன் விழுந்தால் தீ நிமித்தம் என்று கருதப்பட்டது.

கோச்சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இறப்பிற்கான தீ நிமித்தம் கருதினார் கூடலூர் கிழார்.

கார்த்திகை, அனுஷம், உத்திரம், மிருகசீரிஷம் ஆகிய விண்மீன்கள் இடையே 'கனை எரி பரப்பக் கல் எதிர்பு பொங்கி ஒரு மீன் விழுந்தன்றால்' (புறநானூறு 229: 11, 12) என்று பாடுகிறார்.

உண்மையில், நட்சத்திரங்கள் தரை இறங்கி வந்து விளம்பரம் நாடுவது இல்லை. வந்தவை எல்லாம் விண்கற்கள், அவ்வளவுதான்.

இப்போதைய 2018-ஆம் ஆண்டிலும் திசைதோறும் விண்கற்கள் பறக்க இருக்கின்றன. யாழ் ஒத்த உடுகணத்தின் பின்னணியில் லிரிட்டுகள் (ஏப்ரல் 22, 23); கும்ப உடுக்கணத்தில் ஈடா அக்வாரிட்டுகள் (மே 6, 7); டெல்டா அக்வாரிட்டுகள் (ஜூலை 27, 28); பெர்சியஸ் உடுக்கணப் பிராந்தியத்தில் பெர்சியடும் (ஆகஸ்ட் 12, 13); ட்ரக்கோனிடுகள் (அக்டோபர் 8); வேட்டைக்கார உடுக்கணத்தில் ஓரியனிடுகள் (அக்டோபர் 21, 22); மேட உடுக்கணத்தில் டாரிடுகள் (நவம்பர் 5, 6 ); சிம்ம உடுக்கணத்தில் லியோனிடுகள் (நவம்பர் 17, 18); மிதுன உடுக்கணத்தில் ஜெமினிடுகள் (டிசம்பர் 13, 14); சப்தரிஷி மண்டலத்தை ஒட்டி உர்சிடுகள் (டிசம்பர் 21, 22) என்று ஆண்டு நெடுகிலும், அதிகாலையிலோ பின்னிரவிலோ அடிவானில் சகட்டுமேனிக்கு விண்கல் மழைதான் போங்கள்!

ஆதலால், தெருவோரப் பலகைக்கு பாலபிஷேகம் செய்யும் நட்சத்திர ஆர்வலர்களே, பிறகு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்! திருமண மண்டபங்கள், நினைவு மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் திரண்டு நேரத்தையும் உழைப்பையும் வீண் அடிக்காதீர்.

குழந்தைகளுடன் அருகிலுள்ள அறிவியல் மையங்களுக்குச் சென்று சூப்பர் நிலா அற்புதங்களை தரிசியுங்கள். அடுத்த தலைமுறைக்கேனும் அறிவியல் தேடலில் ஆர்வம் ஊட்டுங்கள்.

No comments:

Post a Comment

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC

How can flyover less than 10 yrs old tumble down, must probe ‘scam’: HC New Delhi : 27.11.2024  Terming it a “scam”, Delhi High Court on Tue...