Thursday, February 1, 2018

பொறுப்பை தட்டிக் கழிக்கும் அதிகாரிகளிடம்...  பாடாய்ப்படுது தகவல் அறியும் உரிமைச்சட்டம்!

Added : பிப் 01, 2018 02:24



தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு, பதில் தருவதில்லை என்பதில், கோவையிலுள்ள பல்வேறு துறை அதிகாரிகளும் ஓரணியில் உள்ளனர். இதற்கு உதாரணமாக, ஒரு கேள்விக்கு பதில் தருவதால், 'உயிருக்கு ஆபத்து' என்று பதில் கூறி, தனது பொறுப்பைத் தட்டிக் கழித்துள்ளார், மாநகராட்சி தணிக்கைத்துறை அதிகாரி.

கடந்த, 2005ல் அமலுக்கு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக, அரசு துறைகளில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அரசின் மெத்தனப்போக்கு மற்றும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கும், இதனால் மக்களுக்குத் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக, அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பல்வேறு பாதிப்புகளுக்கும், தண்டனைகளுக்கும் உள்ளாக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

பல விதங்களிலும் பாதிக்கப்படும் அதிகாரிகள், இதற்குப் பதில் தருவதற்குப் பதிலாக, அசாத்தியமான துணிச்சலுடன், ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி, மனுவையும், சட்டத்தையும் உதாசினப்படுத்துவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கும் கேள்விகளுக்கு, நேரடியாக பதில் அளிக்காமல் மழுப்பி விடுகின்றனர்; அல்லது, பதிலே தர முடியாது என்று பகிரங்கமாக தட்டிக் கழித்து விடுகின்றனர்.

சில உதாரணங்கள்...

கோவை மாநகராட்சியில், கடந்த, 2016, அக்., 25 முதல், தனி அலுவலராக, மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். மாமன்ற நடைமுறையின் கீழ், ஒவ்வொரு மாதமும் கூட்டம் நடத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அவை, மாநகராட்சி இணைய தளத்தில் வெளிப்படையாக வெளியிடப்பட்டன. யார் வேண்டுமானாலும், பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறை பின்பற்றப்பட்டது.

சமீபகாலமாக, விதிமுறைகளை மீறி, பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், அவை எதுவும் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. சமூக ஆர்வலர் தியாகராஜன், கடந்த, 2017, ஜூலை முதல் டிச., வரை நிறைவேற்றிய தீர்மான நகல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில், மாநகராட்சிக்கு விண்ணப்பித்தார். அதற்கு வந்த பதில், அவரை அதிர வைத்துள்ளது.

அந்த பதிலில், 'மொத்தம் 129 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. முதல் மூன்று பக்கங்களுக்கு ரூ.100, மற்ற பக்கங்களுக்கு ரூ.10 வீதம், மொத்தம், ரூ.13 ஆயிரத்து 600 செலுத்த வேண்டும்' என்று மாநகராட்சி பதிலளித்து உள்ளது. மூன்று பக்கங்களுக்கு நுாறு ரூபாய், ஒரு பக்க நகலுக்கு 10 ரூபாய் என்பது என்ன கணக்கு என்பதே தெரியவில்லை.

மற்றொரு சமூக ஆர்வலர் டேனியல் என்பவர், கடந்த, 2011 அக்., முதல், கடிதம் கிடைக்கும் நாள் வரை, உள்ளாட்சி தணிக்கை துறையால் தணிக்கை செய்து சமர்ப்பித்த அறிக்கையின் நகல் கேட்டு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தார். அதற்கு, 'உயிருக்கு அல்லது உடமைக்கு ஆபத்து உண்டாக்கும்' என்ற சட்டத்தை சுட்டிக்காட்டி, 'தணிக்கை அறிக்கை நகல் வழங்க இயலாது' என, உள்ளாட்சி நிதி தணிக்கை துணை இயக்குனர் பதில் அளித்துள்ளார்.

எப்படித்தான் கேட்பதோ?

தணிக்கை துறை அறிக்கை என்பது, நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிதி இழப்பு மற்றும் முறைகேடுகளை சுட்டிக்காட்டுவதாகும். இந்த அறிக்கையின் பரிந்துரையை ஏற்று, நிதி இழப்புக்கு காரணமான அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; நிதி விரயம் செய்திருந்தால், அத்தொகையை திரும்பச் செலுத்தவும் அறிவுறுத்தப்படும். இதற்கு முன், தணிக்கைத்துறை அறிக்கை, மாமன்ற பார்வைக்கு வெளிப்படையாக வைக்கப்படுவது வழக்கமாக இருந்தது.

தற்போது மாமன்ற நடைமுறை இல்லாததால், தணிக்கைத்துறை அறிக்கை விபரங்கள் மூடி மறைக்கப்படுகின்றன. அதைக் கேட்டதற்கு, தணிக்கைத் துறை இப்படி ஒரு தனித்துவமான பதிலை அனுப்பி, பதற வைத்துள்ளது.

இதேபோன்று, லோகநாதன் என்ற வக்கீல், 'அவிநாசி ரோட்டில், அண்ணாதுரை சிலைக்கு அருகில், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெ., சிலைகள் வைக்க துறைரீதியாக அனுமதி தரப்பட்டதா' என்று மாநில நெடுஞ்சாலைத்துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு, 'தாங்கள் கோரியுள்ளது, கேள்விகள் வடிவில் உள்ளதால், அது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வராது' என்று இத்துறையின் கோட்டப் பொறியாளர் பதிலளித்து அசத்தியுள்ளார்.

இவ்வாறாக, கோவையில், மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட நிர்வாகம் என எந்தத் துறையிடம், எந்தத் தகவலைக் கோரினாலும், அதற்கு உரிய பதில் கிடைப்பதில்லை. மேல் முறையீடு செய்தாலும், முழுமையான பதில் தருவதில்லை என்பதே வாடிக்கையாகி விட்டது. இப்படி, தகவல் அறியும் உரிமைச் சட்டம், கோவை அதிகாரிகளிடம் பாடாய்ப்படுகிறது. மாநில தகவல் ஆணையமோ, ஐகோர்ட்டோ தலையிட்டால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

இப்படியும் நடக்குது!

கோவையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி, சில தகவல்களை வாங்கிக் கொண்டு, அவற்றை வைத்து, அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் சிலர் ஈடுபடுகின்றனர். இவர்களால், சமூக அக்கறையோடு, தகவல் கேட்பவர்களுக்கும் கெட்டபெயர் ஏற்படுகிறது. இது ஒரு புறமிருக்க, அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தமும், அதிகாரிகளை தகவல் தராமல் தடுக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.


-நமது நிருபர்-

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...