Monday, February 19, 2018

தேவை, மனமாற்றம்

By ஆர். வேல்முருகன் | Published on : 19th February 2018 02:38 AM |

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று பெற்றவர்களுக்கு அடுத்து ஆசிரியர்களுக்கு உயரிய மதிப்பளித்த நமது மரபு இன்று தேய்ந்து வருகிறது.

இப்போது ஒவ்வொரு குழந்தை வளரும் சூழ்நிலை வேறு வேறாக உள்ளது. தன்னை மிகவும் இழிவுபடுத்தியதால் தலைமை ஆசிரியரைக் கத்தியால் குத்தியதாக ஒரு மாணவன் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இது வேலூரில் அரங்கேறிய சம்பவம். மாணவர்களால் சிறு சிறு அவமானங்களையும் தாங்க முடிவதில்லை. அதிலும் மாணவியர் முன்னிலையில் அவமானப்படுத்தினால்...?!  தான் சொன்னதை மீறி ஒரு கிரிக்கெட் கிளப்புக்காக விளையாடிய மாணவனைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கத்தியால் குத்தினாராம். இது கரூரில் அண்மையில் நடந்த சம்பவம்.

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், கிரிக்கெட் விளையாட்டில் மிளிர எண்ணிய ஒருவனின் கனவுக்கு முதலிலேயே ஒரு தடைக்கல் வந்துவிட்டதே என்று கவலையுறத் தோன்றுகிறது.

ஆசிரியராகப் பணியாற்றிய எஸ்.ராதாகிருஷ்ணனை குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்த தேசமிது. அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக  நாடு கொண்டாடுகிறது.

இயன்றவரை மாணவர்களைச் சந்தித்து நேரத்தைச் செலவிடுவேன் என்று உறுதிபூண்டு, நாடெங்கிலும் லட்சக்கணக்கான மாணவர்களைச் சந்தித்து உரையாடி, மாணவர்கள் நிறைந்த அரங்கு மேடையிலேயே உயிர் நீத்த அப்துல் கலாம் இந்த மண்ணைச் சேர்ந்தவர்தான்.

ஒரு காலத்தில் ஆசிரியர்கள் சொன்னால் அது வேத வாக்கு. இப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பல ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு எவ்விதப் பிரதி பலனும் எதிர்பாராமல் வழிகாட்டுகின்றனர்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத் தமிழக ஆசிரியர்களும் பெறுகின்றனர். ஆனால் தகுதியில், மலை, மடுவுக்குள்ள வித்தியாசம்.

ஆசிரியர் பணி என்பது எவ்விதப் பொறுப்பும் இல்லாத, அதிக விடுமுறை, கூடுதல் ஊதியம் தரும் பொழுதுபோக்காகப் பெரும்பாலானவர்களுக்கு மாறிவிட்டது என்பது கண்கூடு.
இப்போது பல ஆசிரியர்கள் டியூஷன் எடுப்பது முதல் வட்டி வரவு செலவு வரை பல்வேறு தொழில் செய்கின்றனர். பதிலி ஆசிரியர்களை நியமித்துவிட்டு பள்ளிக்கு வருவதில்லை. மலைப்பகுதிகளில் நியமிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் பள்ளிகளுக்கே செல்வதில்லை. இன்னும் சிலர் டியூஷன் வருமானத்தை விட்டுத் தர மனமில்லாமல் பணியிட மாறுதலுக்காகப் பல லட்சங்களைச் செலவு செய்கின்றனர். "அரசுப் பள்ளியில் ஊதியம், தனியார் பள்ளியில் விசுவாசம்' காட்டுபவர்கள் பலருண்டு.
தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அங்கிங்கெனாதபடி முறைகேடுகள். இதன் உச்சபட்சம் பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரின் கைது.

கல்வித்துறை அலுவலகங்களில் நடைபெறும் முறைகேடுகளுக்கு அளவேயில்லை. இவற்றையெல்லாம் மீறித்தான் பல நல்ல ஆசிரியர்கள் நாட்டையும் நல்லதையும் பற்றி மாணவர்களுக்குப் பாடம் நடத்த வேண்டியுள்ளது.

கற்றலின் முக்கிய அம்சமான கேள்விகளையே கேட்கக் கூடாது என்றுதான் இன்றைக்கும் பல ஆசிரியர்கள் சொல்கின்றனரே தவிர, மாணவர்களைக் கேள்வி கேட்கும்படி ஊக்கப்படுத்துவதில்லை. இது மாணவர் மனதில் எதிர்மறைத் தாக்கத்தையல்லவா ஏற்படுத்தும்?

குடிபோதையில் வகுப்பறைகளுக்கு வரும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் பலர் மோசமான வார்த்தைகளைப் பேசுவது, இருபால் ஆசிரியர்களும் மாணவ, மாணவியரைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது என பல பிரச்னைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
ஒரு காலத்தில் ஆசிரியர்கள் மீதிருந்த நம்பிக்கையின் காரணமாக மாணவர்களை அடிக்கவும் மிரட்டவும் பெற்றோர்கள் உரிமை கொடுத்திருந்தனர். ஆனால் இப்போது ஆசிரியர்களின் மீதான நம்பிக்கை அனைவருக்குமே போய்விட்டது. நம்புங்கள் - இவர்களின் கையில்தான் வருங்கால இந்தியாவை உருவாக்கும் வல்லமை படைத்த சிற்பிகளின் எதிர்காலத்தை ஒப்படைத்திருக்கிறோம்.

இப்போதும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகச் செயல்படும் ஆசிரியர்கள் ஒவ்வொரு பள்ளிகளில் உள்ளனர். ஆனால் அவர்கள் மெழுகுவர்த்தி போலத் தங்களை உருக்கிக் கொண்டு வெளியில் தெரியாதவாறு உள்ளனர்.
ஆசிரியர் தொழிலுக்கு இருக்கும் மிகப் பெரிய மரியாதை உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் ஒரு மாணவர் இருப்பார் என்பதுதான். அத்தகைய பெருமை, புனிதம் மிக்க ஆசிரியர் பணியென்பது சிலரால் கேவலப்பட்டுப் போக யாரும் அனுமதிக்கக் கூடாது. எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களுடன் ஒப்பிடும் போக்கை ஆசிரியர்கள் கைவிட வேண்டும். இதில் அவர்களுக்குத் தேவை மனமாற்றம். இல்லாவிட்டால் மாணவர்களின் மனதில் நஞ்சை விதைத்த பெருமை ஆசிரியர்களுக்கே.

ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதிகளை உயர்த்தி தொழில் நுட்ப ரீதியாகவும் அவர்களைத் தயார்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்களால் நாளைய தலைமுறையைச் சிறப்பாக உருவாக்க முடியும். இதற்கு அவர்களுக்குத் தேவை மனமாற்றமே. களிமண்ணைப் போல இருக்கும் மாணவ, மாணவியரைப் பார்போற்றும் வகையில் சிறந்த மண்பாண்டங்களாக உருவாக்குவதும் வீணாக்குவதும் ஆசிரியர்களிடம்தான் உள்ளது என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.

வேறு எந்தத் துறை மோசமானாலும் அதைச் சரி செய்து விட முடியும். ஆனால் கல்வித்துறை மோசமாகப் போனால் சீர் செய்வது கடினம். அதற்கு முன்பாக அரசு விழித்துக் கொண்டு ஆசிரியர் பணியை நெறிப்படுத்துவது அவசரமான அவசியம்! இதற்கு ஆசிரியர் இயக்கங்களின் ஒத்துழைப்பும் மிக முக்கியம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 30.10.2024