அரும்பாக்கம், குன்றத்தூரில் பைக்கில் சென்று செயின் பறிப்பு: நகை பறிக்கும்போது சாலையில் பெண் இழுத்து செல்லப்பட்ட கொடூரம் - குற்றவாளிகளைப் பிடிப்பதில் போலீஸார் தீவிரம்
Published : 12 Feb 2018 09:03 ISTசென்னை
அரும்பாக்கத்தில் மேனகாவின் செயின் கையோடு வராததால், சாலையில் அவரை தரதரவென்று இழுத்துச் செல்லும் பைக் இளைஞர்கள்.
சென்னையில் செயின் மற்றும் செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது. தினமும் சராசரியாக 5-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகை பறிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
செயின் பறிப்பு நடைபெறுவதும், குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைப்பதும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், இந்த வகை குற்றங்கள் முற்றிலும் கட்டுக்குள் வரவில்லை. இதனால், சாலையில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தனியாக செல்லும் பெண்களின் செயின் பறிக்கும் நிலை மாறி தற்போது கணவருடன் செல்லும்போது, அதுவும் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள இடத்திலேயே நகை பறிக்கப்பட்டு வருவது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அரும்பாக்கம், குன்றத்தூரில் அடுத்தடுத்து நகை பறிப்பு சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் அரும்பாக்கத்தில் நகை வராததால் பெண்ணை செயின் பறிப்புக் கொள்ளையர்கள் சாலையில் இழுத்துச் செல்லும் காட்சிகள் பார்போரின் நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
அதன் விபரம் வருமாறு: சென்னை வண்ணாரப்பேட்டை யைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (50). அந்தமானில் உள்ள இவர்களது உறவினர்கள் வீட்டு திருமணம், விரைவில் சென்னையில் நடைபெற உள்ளது.
இவரது உறவினர்கள் பல ஆண்டுகளாக அந்தமானில் இருப்பதால் திருமணம் தொடர்பான முழு விபரமும் அவர்களுக்குத் தெரியவில்லை. இதனால், திருமண நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக சில தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக உறவினரான மேனகாவை அழைத்துள்ளனர்.
இளைஞர்கள் இருவர் நோட்டம்
அதன்படி, மேனகா நேற்று காலை 7.30 மணிக்கு அரும்பாக்கம் வள்ளலார் நகர், பாஞ்சாலியம்மன் கோயில் தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பைக்கில் வந்த இளைஞர்கள் 2 பேர் நோட்டம் விட்டனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் மேனகா கழுத்தில் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் செயினைப் பறித்தனர்.
செயின் உடனே கையோடு வராததால் மேனகாவை. சாலையில் அவர்கள் கொடூரமாக இழுத்துச் சென்றனர். இதனால், மேனகா நிலைகுலைந்தார். எவ்வளவோ போராடியும் நகையைக் காப்பாற்ற முடியாத விரக்தியில் சாலையோரம் அமர்ந்து கதறி அழுதார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து, மேனகா கூறும்போது, “சிறுகச் சிறுக பணம் சேர்த்து வாங்கிய நகை. அனைத்தும் மொத்தமாக பறிபோய் விட்டது. உயிர் போனாலும் பரவாயில்லை என நினைத்து நகையைக் காப்பாற்ற முயன்றேன். ஆனால், அது முடியாமல் போய்விட்டது” என கதறி அழுதார். செயின் பறிப்பு குறித்து அரும்பாக்கம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
குன்றத்தூரில் ஜெயஸ்ரீயை கீழே தள்ளிவிட்டு அவரது செயினை பறித்துக்கொண்டு ஓடுகிறார் இளைஞர்.
குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் அசோக்குமார் (61). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் மாலை அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு ஒன்றாக வீடு நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 20 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஜெயஸ்ரீயின் கழுத்தில் இருந்த 5 சவரன் நகையைப் பறித்தார். கண் இமைக்கும் நேரத்துக்குள் தயாராக பைக்கில் நின்ற நண்பருடன் மின்னல் வேகத்தில் தப்பினார். இதைத் தடுக்க முடியாமல் ஜெயஸ்ரீ நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. கொள்ளையர்களை விரட்டிச் செல்ல முயன்றும் அவரது கணவர் அசோக்குமா ரால் முடியவில்லை. இந்தச் சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த 2 செயின் பறிப்பு சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சென்னையில் 2012-ல் 450 செயின் பறிப்பு திருடர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். 2013-ல் 300 பேர், 2014-ல் 300 பேர், 2015-ல் 400 பேர், 2016-ல் 375 பேர் செயின் பறிப்பு குற்றவாளிகள் பட்டியலில் இருந்தனர். இதுபோக வெளியூரைச் சேர்ந்த 150 முதல் 200 பேர் வரை சென்னையில் செயின் பறிப்பு குற்றச் செயல்களில் ஈடுபட்டனர். பெரும்பாலானவர்களைக் கைது செய்தோம். ஒரு சிலர் வெளி மாநிலம், மாவட்டங்களுக்குத் தப்பினர். சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது” என்றனர்.
No comments:
Post a Comment