Tuesday, February 13, 2018

டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார்: பிளாட்பாரத்தில் நின்றவர்கள் மீது மோதியதில் 4 பேர் காயம்

Published : 12 Feb 2018 09:18 IST

சென்னை



விபத்துக்குள்ளான கார்.

சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி, கணவன் மனைவி உட்பட 4 பேர் காயம் அடைந்தனர்.

மந்தைவெளி வள்ளீஸ்வரன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் மந்தைவெளியில் உள்ள கார் ஷோரூம் ஒன்றில் செயல் அதிகாரியாக உள்ளார். அதே ஷோரூமில் விழுப்புரம் சின்னதுரை, நெய்வேலி கிஷோர் குமார், சூளைமேடு அசோக்குமார் ஆகியோர் மெக்கானிக்காக பணி செய்து வருகின்றனர்.

இவர்கள் சனிக்கிழமை இரவு திரைப்படத்துக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மயிலாப்பூரில் இருந்து ஆர்.ஏ.புரம் நோக்கி காரில் புறப்பட்டனர். காரை கோபால கிருஷ்ணன் ஓட்டினார்.

சாந்தோம் நெடுஞ்சாலையில் முன்பு வேலை வாய்ப்பு அலுவலகம் இருந்த இடம் அருகே செல்லும்போது காரில் முன் பகுதியில் வலது பக்கம் உள்ள டயர் திடீரென வெடித்து தாறுமாறாக ஓடியது.

கோபால கிருஷ்ணன் காரை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் அருகில் இருந்த பிளாட்பாரத்தில் மோதி நின்றது.

இதில், பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த குயில் தோட்டத்தைச் சேர்ந்த வள்ளி, அவரது கணவர் பிரேம் குமார், அவர்களது நண்பர்களான ரவிச்சந்திரன், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் மீது கார் மோதியது. காருக்குள் இருந்த 4 பேருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடம் விரைந்தனர்.

கார் மோதி காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மகனை தேடியபோது சோகம்

வள்ளியின் மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லையாம். அவரை தேடி அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்கள் என 4 பேரும் திரிந்துள்ளனர். இறுதியில் பிளாட்பாரம் ஓரம் சோகமாக அமர்ந்திருந்துள்ளனர். இந்த நேரத்தில்தான் கார் மோதி 4 பேரும் காயம் அடைந்துள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளி மற்றும் பிரேம்குமாருக்கு வலது காலிலும் ரவிச்சந்திரன் மற்றும் ஜெயந்திக்கு இடுப்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

டயர் பராமரிப்பு முக்கியம்

கார் பொறியாளர் ராஜூ கூறும்போது, ‘அதிகக் காற்றைவிட குறைந்த காற்று இருப்பதுதான் டயருக்கு ஆபத்து. டயரில் குறைந்த காற்று இருக்கும்போது சாலையுடனான உராய்வினால், ஓவர் ஹீட் ஆகி டயர் வெடிக்கும். அதனால், எப்போதுமே கார் யூசர் மேனுவல் புக்கில் இருக்கும் அளவிலேயே கார் டயரில் காற்று இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். இன்று வெயில் அதிகமாக இருக்கிறது. 30 பிஎஸ்ஐ-க்கு பதில் 25 பிஎஸ்ஐ நிரப்பினாலே போதும் என்பார்கள் சிலர். இதுவும் தவறானது.

முடிந்த வரை டயர்களில் நைட்ரஜன் வாயுவை நிரப்புவது நல்லது. சாதாரண காற்று வெப்பத்தினால் விரிவடைந்து டயர் வெடிக்கும். ஆனால் நைட்ரஜன் வாயு எளிதில் வெப்பம் அடையாது. அதிகமாக தேய்ந்த நிலையில் இருக்கும் டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அதிக வெப்பத்தின் காரணமாக இவை எளிதில் வெடிக்கும்.

கார் ஓட்டிக்கொண்டு இருக்கும்போது திடீரென டயர் வெடித்தால் டென்சன் ஆகிவிடக்கூடாது. முன்பக்க டயர் பஞ்சரானால் அந்த பக்கமாக கார் திரும்பும். பின் பக்க டயர் பஞ்சரானால் உடனடியாக அலைபாய ஆரம்பித்து விடும். அந்த நேரத்தில், காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். கார் திரும்புகிறதே என்பதற்காக ஸ்டீயரிங்கை எதிர் திசையில் திருப்பக்கூடாது. ஆக்ஸிலரேட்டரில் இருந்து உடனடியாக காலை எடுத்து விட்டு, மெதுவாக பிரேக்கை அழுத்தி, அப்படியே சாலையின் ஓரத்துக்கு காரை ஓட்டி வந்து விடவேண்டும்’ என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 14.05..2026