ஜிப்மரில் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி பங்கேற்பு
Added : அக் 12, 2018 01:20
புதுச்சேரி:புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில், இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்று, 466 பேருக்கு பட்டம் வழங்குகிறார்.இது குறித்து ஜிப்மர் கல்வி மற்றும் பொது மருத்துவ பேராசிரியர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு
:புதுச்சேரி ஜிப்மர் மருத்துக் கல்லுாரியின் 9வது பட்டமளிப்பு விழா, ஜிப்மர் வளாகத்தில் அமைந்துள்ள அப்துல் கலாம் அரங்கில், இன்று (12ம் தேதி) பகல் 11:00 மணியளவில் நடக்கிறது. ஜிப்மர் தலைவர் டாக்டர் மஹராஜ் கிஷன் பான் தலைமை தாங்குகிறார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 466 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கி, விழா பேருரை நிகழ்த்துகிறார். மருத்துவ துறைகளில் சாதித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்குகிறார். விழாவில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். எம்.பி.,க்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி பங்கேற்கின்றனர். சரியாக காலை 11:00 மணிக்கு விழா துவங்கி, 12:00 வரை நடக்கிறது. பதிவு செய்து அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் மட்டுமே விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவர். பதிவு செய்யப்பட்ட மாணவர்கள், ஒதுக்கப்பட்ட இருக்கையில் காலை 09:30 மணிக்குள் அமர வேண்டும். பெற்றோர்கள் விழா அரங்கிற்குள் செல்ல அனுமதியில்லை. அவர்களுக்கு, ஜிப்மர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டடத்தின், 3வது மாடியில் உள்ள கருத்தரங்கு ஹாலில், பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment