Friday, October 5, 2018


ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் வழிபாடு


By DIN | Published on : 04th October 2018 11:46 PM

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

நவகிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகாரத் தலமாக விளங்கும் இக்கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்றது. இது சோழவள நாட்டில் 98-ஆவது தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் காசி ஆரண்யம், திருஇரும்பூளை, ஆலங்குடி என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு அருள்மிகு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு வியாழக்கிழமை இரவு 10.05 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையொட்டி, இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

யாக பூஜைகள்: விழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு குருபரிகார யாக பூஜைகளும், அனைத்து சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மூலவர் குருபகவானுக்கு தங்கக் கவசம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, உத்ஸவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மூலவர் குருபகவான் சன்னிதி எதிரில் பிராகாரத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தொடர்ந்து, கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேசுவரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வர பகவான் சன்னிதிகளில் சுவாமிகளுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டன. அதிகாலை முதல் திரளான பக்தர்கள் பங்கேற்று, குருபகவானை வழிபட்டனர்.

குருபெயர்ச்சி: வியாழக்கிழமை இரவு சரியாக 10.05 மணிக்கு குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். அப்போது, மூலவர் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் தங்கக் கவச அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. குருபெயர்ச்சி விழாவில், அமைச்சர்கள், மத்திய, மாநில அரசு அலுவலர்கள் உள்ளிட்ட தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு ஏற்பாடு: விழாவையொட்டி, அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தெற்கு கோபுரவாசல் பகுதியில் நீண்ட தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை இரவு தொடங்கி, தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் மற்றும் தக்கார் ச. கிருஷ்ணன், அறநிலைய உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் பி. தமிழ்ச்செல்வி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

2-ஆவது கட்ட லட்சார்ச்சனை: இக்கோயிலில் 2-ஆவது கட்ட லட்சார்ச்சனை அக். 8-ஆம் தேதி தொடங்கி அக். 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024