Friday, October 5, 2018


கருணை கொலைக்கு அனுமதி கோரிய வழக்கு சிறுவனின் நிலை அறிந்து கண் கலங்கிய நீதிபதி

Added : அக் 05, 2018 00:33

சென்னை:கருணை கொலைக்கு அனுமதி கோரிய சிறுவனின் தந்தைக்கு, மத்திய, மாநில அரசுகள், நிதி உதவி அளிக்குமா என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

வழக்கு விசாரணையின் போது, நீதிபதி கிருபாகரன், கண்களில் கண்ணீர் ததும்பியது.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் தாலுகாவைச் சேர்ந்த, திருமேனி தாக்கல் செய்த மனு:தனியார் மருத்துவமனையில்,2008ல், எனக்கு மகன் பிறந்தான். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட என் மகனை, குழந்தைகளுக்கான நரம்பியல் மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர்களிடம் காட்டினேன்.வலிப்புஎந்த முன்னேற்றமும் இல்லை. அவனால் எதையும் செய்ய முடியாது. 

சுற்றுப்புறத்தில், என்ன நடக்கிறது என்பதை, உணரவும் முடியாது.உட்கார முடியாது; மல்லாந்து படுத்த நிலையில் தான் எப்போதும் உள்ளான். வலுக்கட்டாயமாக, உணவை, வாயில் ஊட்ட வேண்டும். தினசரி,20 முறை வலிப்பு வருகிறது. தற்போது, ஒன்பது ஆண்டுகளை கடந்து விட்டான். இன்னும், அதே நிலை தான் நீடிக்கிறது. மூளை பாதிக்கப்பட்டு இருப்பதால், குணமடைய வாய்ப்பே இல்லை என, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, உணவு, மருந்து கொடுப்பதை நிறுத்துவதற்கு, அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. சிறுவனை பரிசோதித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, டாக்டர்கள் குழுவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இதையடுத்து, கடலுாரில் இருந்து சென்னைக்கு, சிறுவனை கொண்டு வந்து, டாக்டர்கள் பரிசோதித்தனர்.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதை படித்து பார்த்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மருத்துவ அறிக்கையை பார்க்கும் போது, எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டாலும், உடல் நிலை தேறாது என்பது தெரிகிறது. சிறுவனுக்கு ஆதரவும், கவனிப்பும் தேவை. அரசு தரப்பில் தாக்கல் செய்த மனுவில், அரக்கோணத்தில் உள்ள, அரசு சாரா அமைப்பு, சிறுவனை கவனிக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஆனால், சிறுவனை, வேறு யாரிடமும் ஒப்படைக்க, பெற்றோர் தயாராக இல்லை. கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், தானே கவனித்துக் கொள்வதாக தந்தை கூறினார். 

மருத்துவ அறிக்கையை படித்த பின், பதில் அளிப்பதாக, மனுதாரரின் வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர் தெரிவித்தார்.பரிசீலனைமத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், 'நிதி உதவி பெற முடியும்; பெற்றோருக்கு வயதாகும் போது, அவர்களை கவனிக்க ஆள் தேவைப்படும். அப்போது, இந்த சிறுவனின் நிலை என்ன என்பதையும், பரிசீலிக்க வேண்டும்' என்றார்.சிறுவனின் பெற்றோருக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதி உதவி அளிக்க முடியுமா; சிறுவனுக்கு, மருத்துவ உதவி வழங்க முடியுமா என்பதை, இந்த நீதிமன்றம் அறிய விரும்புகிறது.

மேலும், இதுபோன்ற குழந்தைகள் விஷயத்தில், பெற்றோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில், அரசிடம் திட்டம் உள்ளதா என்பதையும், தெரிவிக்க வேண்டும்.எந்த திட்டமும் இல்லை என்றால், இதுபோன்ற குழந்தைகளுக்கு, மருத்துவ உதவி அளிக்கவும், பெற்றோருக்கு நிதி சுமையை குறைக்கவும், மத்திய, மாநில அரசுகள், ஏன் திட்டம் வகுக்கக் கூடாது என்பதை தெரிவிக்க வேண்டும். விசாரணை, வரும், 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், சிறுவனின் நிலையை விளக்கும்போது, நீதிபதி கிருபாகரன் கண்கள் ததும்பின. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, அவ்வப்போது, கைக்குட்டையால், கண்களை துடைத்துக் கொண்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.09.2024