Added : அக் 05, 2018 01:35
லக்னோ:உத்தர பிரதேசத்தில், யாருக்கும் புரியாத வகையில், மருத்துவப் பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து எழுதிக் கொடுத்த, மூன்று டாக்டர்களுக்கு, தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உ.பி.,யில் உன்னோவா, சிதாபூர், கோண்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு தலைமை மருத்துவ மனையின் டாக்டர்கள் எழுதிக் கொடுத்த, மருத்துவக் குறிப்புகள் யாருக்கும் புரியாத வகையில் இருந்தன.இதுதொடர்பாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அரசு டாக்டர்கள், டி.பி.ஜெய்ஸ்வால், பி.கே.கோயல், கோண்டா ஆசிஷ் சக்சேனா ஆகிய மூவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.நீதிபதிகள், அஜய்லாம்பா, சஞ்சய் ஹர் குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த வழக்குகளை விசாரித்தது.'அதிக வேலை காரணமாக அவசரமாக எழுதுவதால், கையெழுத்து இப்படி இருக்கிறது' என, டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.
டாக்டர்கள் கூறிய காரணத்தை, நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். டாக்டர்கள் மூவருக்கும், தலா, 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.தீர்ப்பில் மேலும் கூறியிருப்பதாவது:விபத்தில் காயம் அடைந்தவருக்கு எழுதிக் கொடுத்த பரிசோதனை அறிக்கையை, யாருமே படித்து புரிந்து கொள்ள முடியவில்லை.
இப்படி இருந்தால், வேறு மருத்துவமனையில் எப்படி சிகிச்சை பெற முடியும்? மருந்து எப்படி வாங்க முடியும்?அறிக்கைநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் கூட, கிறுக்கல்களாகத்தான் உள்ளன. அவற்றை, வக்கீல்கள், நீதிபதிகள் படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. டாக்டர்கள், அனைவருக்கும் புரியும்படி மருத்துவ பரிசோதனை குறிப்பு மற்றும் மருந்து பெயர்களை எழுத வேண்டும்.இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment