Wednesday, October 10, 2018

கவுரவம்!

நேர்மையாக வரி செலுத்தினால் சலுகை
திட்டம் தயாரிக்க நிபுணர் குழு அமைப்பு


dinamalar 10.10.2018

புதுடில்லி : முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்துவோருக்கு, பல்வேறு சலுகைகளை வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நேர்மையாக வரி செலுத்துவோருக்கு, பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை, மாநில கவர்னருடன் அமர்ந்து, தேனீர் பருகும் கவுரவம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.




வளர்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், நம் நாட்டில், வருமான வரி செலுத்துவோர் மிகவும் குறைவு. இந்த சதவீதத்தை அதிகரிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 'முறையாக வருமான கணக்கு காட்டி, வரி செலுத்தாதோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்' என, மத்திய அரசு எச்சரித்து வருகிறது.

வரி ஏய்ப்பாளர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நவீன தொழில் நுட்பங்களை வருமான வரித்துறை பயன்படுத்தி வருகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளில், வரி வளையத்தில் கோடிக்கணக்கானோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்; அரசின் வருவாயும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், நேர்மையாக வருமான கணக்கு காட்டி, முறையாக வரி செலுத்துவோருக்குபல்வேறு சலுகைகளை வழங்கி கவுரவிக்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், வரி செலுத்துவது கவுரவம் என்ற மனப்பான்மையை மக்கள் மத்தியில் விதைக்க, அரசு திட்டமிட்டுள்ளது.

அரசின் திட்டப்படி, முறையாக வரி செலுத்துவோருக்கு, பாஸ்போர்ட் வழங்குவதில் முன்னுரிமை, மாநில கவர்னருடன் அமர்ந்து தேனீர் பருகும் கவுரவம், விமான நிலையங்களில் சிறப்பு அறைகளில் தங்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தயாரிப்பதற்காக, சி.பி.டி.டி., எனப்படும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் கீழ், நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: வளர்ந்த நாடுகளில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் வகையில் பரிசு திட்டங்கள் உள்ளன. அத்தகைய திட்டங்களை நிபுணர் குழு ஆய்வு செய்து, சிறப்பான திட்டத்தை தயாரிக்கும். பரிசு அல்லது சலுகைகளுக்கு உரியோர், அவர்கள் செலுத்தும் வரி தொகை அடிப்படையில் தேர்வு செய்யப்பட மாட்டர்கள்.

காலந்தவறாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல், தில்லு முல்லு செய்து சட்ட ரீதியில் தண்டனைக்கு ஆளாகாமல் இருத்தல், சோதனைகளுக்கு ஆட்படாமல் நன்னடத்தையுடன் திகழ்தல் போன்றவை, பரிசு அல்லது சலுகைகள் பெறுவதற்கான வரையறைகளாக இருக்கும். இதற்கு முன், 2004ல், நேர்மையாக வரி செலுத்துவோருக்கு பரிசு வழங்கி கவுரவிக்கும் திட்டத்தை, வருமான வரித்துறை அமல்படுத்தி உள்ளது; பின், அத்திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது, வரி ஏய்ப்பாளர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சமயத்தில், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்க வேண்டியது அவசியம். எனவே, அதற்கான திட்டத்தை அரசு அமல்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஜப்பானில் எப்படி?

நேர்மையாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்கும் வகையில், பிற நாடுகள், பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. கிழக்காசிய நாடான, ஜப்பானில், நேர்மையாக வரி செலுத்தி, பிறருக்கு முன்மாதிரியாக திகழும் குடிமகன்கள், அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கலாம். தென் கிழக்கு ஆசிய நாடான, பிலிப்பைன்சில், வரி செலுத்துவோரை கவுரவிக்க, அவர்களின் பெயர்களை, லாட்டரி சீட்டில் பொறிக்கும் திட்டம் அமலில் உள்ளது. கிழக்காசிய நாடான, தென் கொரியாவில், நேர்மையாளர்களுக்கு, சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது; விமான நிலையங்களில், வி.ஐ.பி., அறைகளில் அவர்கள் தங்கலாம்; வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம். அண்டை நாடான பாகிஸ்தானில், வரி செலுத்துவோரில், 100 நேர்மையாளர்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்கள், விமான நிலையங்களில், வி.ஐ.பி., அறைகளில் தங்கலாம்; குடியேற்ற விண்ணப்பங்கள் முன்னுரிமை அளித்து நிறைவேற்றப்படுகிறது. இலவச பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது; விமானங்களில் கூடுதல் பெட்டிகளை எடுத்து செல்லலாம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024