Wednesday, October 10, 2018


பாடி ஸ்பிரேயினால் ஆபத்தா?

Published on : 10th October 2018 10:00 AM \




பெண்களுக்கு இயற்கையாகவே , தான் தனியாகத் தெரிய வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. அதனால், அவர்கள் உடுத்தும் உடையிலிருந்து பயன்படுத்தும் உதட்டு சாயம் வரை தனித்தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் அலங்கார வஸ்துக்களைத் தவிர இன்றைய நாட்களில் அதிமாக பெண்களால் உபயோகப் படுத்தப்படும் இன்னுமொரு வஸ்து பாடி ஸ்பிரே.

நம் உடலில் இருந்து கழிவுகள் வியர்வை மூலமாகவும் வெளியேறுகிறது என்பதை நாம் எல்லோருமே அறிவோம். இது இயற்கை நமக்குத் தந்த ஒரு வரப்பிரசாதம். பொது இடங்களுக்குப் போகும் போது சுற்றி இருப்பவர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தும் படி வியர்வை துர்நாற்றம் வீசுமோ என பயந்து பலரும், அக்குள் பகுதிகளில், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரேயைப் பயன்படுத்துகிறார்கள்.

வியர்வையைக் கட்டுப்படுத்த டியோடரண்டும், மேனியிலிருந்து நறுமணம் வீசுவதற்காக பாடி ஸ்பிரேயையும் உபயோகப் படுத்துகிறார்கள். ஒரு பெண்ணானவள் சராசரியாக ஒருநாளைக்கு நூற்று அறுபத்து எட்டு வஸ்துக்களை மேனியில் உபயோகப் படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன (சோப்பு முதல் தலை டை வரை).
ஆண்கள், டியோடரண்ட் மற்றும் பாடி ஸ்பிரே உபயோகப் படுத்துவதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாவது இல்லை. ஆனால் அவற்றையே பெண்கள் உபயோகப்படுத்தும் போது, அவர்கள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
பெண்கள் பாடி ஸ்பிரேயை அக்குள் பகுதிகளில் பாய்ச்சிக்கொள்ளும்போது, அதில் இருக்கும் நஞ்சுப் பொருளான அலுமினியம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவை, அக்குள் மூலமாக மார்பகங்களை எளிதில் அடைந்து விடுகின்றன. அலுமினியமானது மார்பகத் திசுக்களுடன் வினை புரிந்து சிஸ்டிக் என்னும் திரவத்தினை அதிகமாக்குகிறது. டியோடரண்ட்டில் உள்ள ட்ரிக்ளோசன் என்னும் பொருளும் நச்சுத்தன்மையை கூட்டுகிறது. ரசாயனங்களில் இருக்கும் "பாரபின்' என்னும் பொருளும் பெண்களின் ஈஸ்ட்ரோஜென்னில் சேர்ந்து மார்பகங்களில் கட்டியை உண்டாக்குகிறது.
இவைகளைத் தொடர்ந்து உபயோகித்து வந்தால், பெண்களுக்கு,மார்பகப் புற்று நோய் விரைவில் வந்து விடும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் கூறப்படுகிறது. நம் உடலில் இருக்கும் உறுப்புகளிலேயே மிகப் பெரிய உறுப்பு தோல்தான். தோலில் தங்கும் நச்சுத் தன்மை வியர்வைத் துவாரங்கள் வழியே இருபத்தாறு செகண்டுகளில் நம்முடைய இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது.

சமீபமாக, டியோடரண்ட் உபயோகப் படுத்திக்கொண்டிருந்த பெண்கள், உபயோகித்து நிறுத்திய பெண்கள் இருவரிடமும் அக்குளில் ஆராய்ச்சி செய்யப்பட்டதாம். உபயோகப்படுத்திக்கொண்டிருந்த பெண்களிடம் மிகக் குறைந்த அளவே பாக்டீரியா காணப்பட்டதாம். உபயோகித்து நிறுத்திய பெண்களிடம் அதிக அளவு பாக்டீரியா காணப்பட்டதாம். சரி , குறைவாக இருந்தால் நல்லதா? அதிமாக இருந்தால் நல்லதா ? என்று யோசனை செய்ய வேண்டாம். நம் உடலுக்கு நன்மை செய்யும் அதாவது நச்சுத் தன்மையை தோலுக்கு உள்ளே விடாமல் அரணாக இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருப்பதே உடலுக்கு ஆரோக்கியம். ஆகையால், பெண்களே! இயற்கையாக வெளியேறும் வியர்வையை தடை செய்யாதீர்கள். வம்பை விலை கொடுத்து வாங்கி ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு வருடத்தில் சுமார் நாற்பத்து இரண்டாயிரம் பெண்கள் மார்பகப் புற்று நோயினால் தாக்கப்படுகிறார்களாம் எனவே உஷாராக இருங்கள்.

- மாலதி சந்திரசேகரன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024