முதியோரை காப்போம்
2019-12-17@ 00:18:32
60 வயதைக் கடந்த முதியோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முதியோர் 20 சதவீதம் பேர் இருப்பார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இங்குதான் வயதான பெற்றோரை, முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன. இயந்திரத்தனமான வாழ்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெற்றோர், பிள்ளைகளுக்கான உறவில் விரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இது நல்லதல்ல. முக்கியமாக, பணம் மற்றும் சொத்துக்காக பெற்றோரை தாக்குவதும், அவர்களை உடல் மற்றும் மனரீதியாக துன்புறுத்துவதும் வேதனை தரும் விஷயம். சமீபகாலமாக முதியோர் மீதான தாக்குதலும் தலைதூக்கி வருகிறது. இதை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்த மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்கள் பராமரிப்பில் உள்ள பெற்றோர் அல்லது முதியோரை துன்புறுத்தினால் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க வகை செய்யும் வகையில் இந்த சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோரின் நலனுக்காக சிறப்பு போலீஸ் பிரிவு அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க விஷயம். பிள்ளைகள் நல்ல வசதியாக இருந்தும் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்க்கும் அவலநிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கூட்டுக்குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது தான். இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வயதானவர்களுக்கு முதியோர் இல்லம் நிரந்தர தீர்வாக இருக்காது. முதியோர்களை பாரம் என்று நினைக்கும் எண்ணத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும். வயதான பெற்றோர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் என்ற எண்ணம் உருவாக வேண்டும். குழந்தைகளை மன உளைச்சலுக்கு ஆளாக்காமல் பார்த்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இன்றைய இளம்தம்பதியினருக்கு தெரிவதில்லை.
இதற்கு காரணம் தனிக்குடித்தனம். பேசி தீர்க்கக்கூடிய சிறு விஷயம் கூட விவகாரத்தில் அல்லது விவாகரத்தில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு வீட்டில் முதியோர் இல்லாததும் ஒரு காரணம். முதியோரை மதித்து அவர்களை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு சிறுவயதில் இருந்தே சொல்லித் தர வேண்டும். குழந்தை வளர்ப்பில் தொடங்கி வாழ்க்கையில் இக்கட்டான சூழ்நிலைகளை எளிதாக கடந்து செல்வதற்கும், முதியோர்களின் வழிகாட்டுதல் அவசியம் தேவை என்பதை நாம் அழுத்தமாக உணர வேண்டிய தருணம் இது. இளமைக்கு எப்பொழுதுமே முதுமை பற்றிய தெளிவான அறிவு இருத்தல் வேண்டியது கட்டாயம். ஏனென்றால் நாமும் ஒரு காலத்தில் முதுமைக்கு செல்வோம் என்பதை புரிந்து கொண்டு பெற்றோர், முதியோரை அரவணைத்து அவர்களுக்கு மதிப்பளிப்போம்.
No comments:
Post a Comment