Saturday, October 18, 2014

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
வடகிழக்குப்பருவமழை நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. சென்னையில் பல இடங்களில் மரங்கள் சாலைகள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழைநீர் தேங்கியிருப்பதால் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் புதுச்சேரியில் கடல் சீற்றமும் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. காரைக்கால் மாவட்டத்திலும் மழை நீடித்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சராசரியாக 63 புள்ளி 5 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 3 தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை விவசாயத்திற்கு உதவும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை இருந்தது. தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால், தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம், பாளையங்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினர். சிவகங்கை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வடகிழக்குப் பருவமழை ஓரிரு நாட்களில் தொடங்குவதற்கு சாதகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024