Saturday, October 18, 2014

தற்போது, தஞ்சாவூர் நகரம், நவநாகரீக தோற்றத்திற்கு மாறிவிட்டது. பிரமாண்ட கட்டடங்கள், சோடியம் வேப்பர் லைட்டுகள், பளபளப்பான சாலைகள் என அல்ட்ரா மார்டனாக காட்சி அளிக்கிறது.

ற்போது, தஞ்சாவூர் நகரம், நவநாகரீக தோற்றத்திற்கு மாறிவிட்டது. பிரமாண்ட கட்டடங்கள், சோடியம் வேப்பர் லைட்டுகள், பளபளப்பான சாலைகள் என அல்ட்ரா மார்டனாக காட்சி அளிக்கிறது.
தஞ்சாவூருக்கு  வரக்கூடிய வெளியூர்காரர்களுக்கு தற்போது இவைகள்தான் பளிச்சென கண்ணில்படும். இதைத்தாண்டி சரித்திர புகழ்மிக்க சின்னங்களை காண வேண்டும் என அவர்கள் ஆசைப்பட்டால்... பெரிய கோயிலுக்கோ, அரண்மனைக்கோ செல்வார்கள்.  
 
ஆனால் இப்பொழுதும் பழமையின் மிச்சமாக இருக்கக்கூடிய நீண்ட நெடிய அகழி... இவர்களின் கண்ணில் படாமல்... மேலவீதி, வடக்கு வீதி, கீழராஜ வீதிக்கு பின்னால் மவுனமாக மறைந்து கிடக்கிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னாள் நாயக்க மன்னர்களின் ஆட்சிகாலத்தில் இந்த அகழிகள் உருவாக்கப்பட்டன. நீர் மேலாண்மையில் அதிநுட்ப அறிவும் ஆர்வமும் கொண்ட அப்போதைய மன்னர்கள், இதனை மிக சிறப்பான முறையில் திட்டமிட்டு உருவாக்கி இருக்கிறார்கள்.
தஞ்சாவூர் நகரத்தில் பெய்யக்கூடிய ஒட்டுமொத்த மழைநீரையும் வடிய வைப்பதற்கும், நேரடியாக மழைநீரை சேமித்து வைப்பதற்கும், எதிரிகள் படைபெடுத்து வராமல் இருப்பதற்காகவும் இந்த அகழிகளை அப்பொழுது உருவாக்கி இருக்கிறார்கள்.

பெரிய கோயிலுக்கு பின் புறமாக தொடங்கி, சீனிவாசபுரம், செக்கடி, வடக்கு அலங்கம்,  கொடிமரத்து மூலை, கீழவாசல் பீரங்கிமேடு, வெள்ளை பிள்ளையார் கோயில் என பல கிலோமீட்டருக்கு நீள்கிறது, இந்த அகழி. 50 ஆண்டுகளுக்கு முன்பு, இதன் தொடர்ச்சியானது... தற்போதைய பழைய பேருந்து நிலையம், ராமநாதன் செட்டியார் ஹால், பாரத ஸ்டேட் பேங்க், மாவட்ட மைய நூலகம் உள்ள பகுதிகளில் எல்லாம் தொடர்ந்திருக்கிறது.
அகழிக்கு மூடுவிழா நடத்திதான் இந்த கட்டடங்கள் எல்லாம் அத்துமீறி குடியேறி இருக்கிறது. இதனால் தற்போது தெற்கு பகுதியில் அகழி இருந்தற்கான சுவடுகள் கூட தெரியவில்லை. ஆனால் ஆச்சரியம்... மற்ற மூன்று வீதிகளின் பின்புறம் உள்ள அகழியை மட்டும் கபளீகரம் செய்யாமல் ஏனோ ஆட்சியாளர்கள் விட்டு வைத்திருக்கிறார்கள். இதற்காக நாம் அவர்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
 
இருந்தபோதிலும் இந்த மூன்று வீதிகளிலும் உள்ள இந்த அகழிகள், கடந்த அரை நூற்றாண்டு காலமாக கவனிப்பாரற்று, உருதெரியாமல் சிதைந்து கிடக்கிறது. குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிப்ப்பிடமாகவும் இந்த அகழிகள் மாறிப்போனது. இது அவலத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும். தஞ்சாவூர் நகரத்தில் இருந்து அகழிக்கு தண்ணீர் வரக்கூடிய வழித்தடங்கள் அத்தனையும் அடைப்பட்டு போனது.

இதனால் தஞ்சாவூர் நகர மக்கள்படும் சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல... கனமழை காலங்களில் தண்ணீரில் தத்தளிக்கிறது தஞ்சாவூர் நகரம். அகழியின் உள் பகுதி, பல அடி உயரத்திற்கு மேடாகிப் போனதால், அதில் குவிந்து கிடக்கு குப்பைகளும் கழிவுகளும் மழைநீரோடு சேர்ந்து வெளியேறி, தஞ்சாவூர் நகரத்திற்குள் உலா வந்து, குடியிருப்பு பகுதிகள் நாற்றம் எடுக்கும். இதெல்லாம் ஒருபுறமிருக்க, அகழியில் முறையாக தண்ணீர் தேங்காமல் போனதால், தஞ்சாவூர் நகரத்தின் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று விட்டது. அகழியை ஒட்டியுள்ள கோட்டைகள், காலப்போக்கில் குடியிருப்பு பகுதிகளாக மாறிப்போனதால், சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் மக்களின் கண்ணில் படாமல் கடந்த பல ஆண்டுகளாக அகழி மறைந்து கிடக்கிறது.

இந்நிலையில் தான் தற்போதைய தஞ்சாவூர் கலெக்டர் டாக்டர் சுப்பையன், இந்த அகழி மீது தனி கவனம் செலுத்த தொடங்கினார். முதல்கட்டமாக, 45 லட்சம் ரூபாய் செலவில், மூணேகால் கிலோ மீட்டர் தூரத்திற்கு அகழியை புனரமைத்து புதுவாழ்வு கொடுத்திருக்கிறார். சுற்றுலா பயணிகளை கவர, தற்போது இந்த அகழியில் படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

விகடன் டாட் காம்க்காக கலெக்டர் சுப்பையனிடம் பேசினோம். ‘மழைநீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காகதான் இந்த அகழியை சீரமைத்தோம். அதேசமயம், சுற்றுலா தலமாக பராமரிக்கப்பட்டால்தான், எதிர்காலத்திலும் உயிர்ப்போடு நிலைத்திருக்கும். அதனால்தான் படகு சவாரி அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு குறிப்பிட்ட தூரம் வரைதான் படகில் பயணம் செய்ய முடியும். காரணம், தொடர்ச்சியாக பயணம் செய்ய முடியாத வகையில்... அகழியின் இடையிடையே  ஏராளமான தடுப்புகள் உருவாகி, சாலைகளாக மாறிப் போய் கிடக்கிறது. இந்த தடுப்புகளை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு, மேம்பாலங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். அகழியின் இரு ஓரங்களிலும் நடைப்பாதை மற்றும் பூங்காக்கள் அமைக்கவும் 35 கோடி ரூபாய்க்கு திட்டமதிப்பீடு தயார் செய்து, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளோம் என மிகுந்த உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் பேசினார்.
மிக விரைவில் தஞ்சாவூர் நகரம் பாரம்பரிய அழகுடன் புதுப்பொலிவுப் பெற்று திகழும்.

- கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: 
கே.குணசீலன்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024