Wednesday, March 18, 2015

போலீஸ் போட்ட பொய் வழக்கு ! ( ஒன் மேன் ஆர்மி டிராஃபிக் ராமசாமி - 2 )



பாரிஸின் முகப்பில் குறளகம் உள்ளது. இந்த நகரத்திலேயே வாழ்பவர்கள், நகரத்துக்குப் புதிதாக வருபவர்கள், பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், உயர் நீதிமன்றம் செல்லும் வழக்கறிஞர்கள், பஸ் ஏறச் செல்லும் பெண்கள்... இப்படி ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் குறளகத்தின் வாசலைத்தான் கடந்து செல்ல வேண்டும்.

இப்படி நகரத்தின் தலைவாசலான ஓர் இடத்தில் விபசாரம் கன ஜோராக நடந்து கொண்டு இருந்தது அப்போது. குறளகத்தின் உள்ளே நான்கு ஐந்து பெண்கள் இருப்பார்கள். வெளியே இரண்டு ஆண்கள் நின்றுகொண்டு இருப்பார்கள்.

அந்த ஆண்கள்தான் விலைமகன்களை விலைபேசி அழைத்து வருவார்கள். பகல் பொழுதுகளிலேயே பாலியல் தொழில் எந்தப் பயமும் இன்றி இந்த நகரத்துக்கு இணையான பரபரப்புடன் நடந்துகொண்டிருக்கும்.

குறளகத்தில் விபசாரம் நடக்கிறது என்பது இதைக் கடந்துசெல்லும் வக்கீல்கள், நீதிபதிகள், பொதுமக்கள், போலீஸ் என எல்லோருக்கும் தெரியும். யாருமே வாய் திறக்கவில்லை. போலீஸின் துணையோடுதான் இந்த அசிங்கம் அரங்கேறிக் கொண்டிருந்தது. நாம் ஏதாவது சொன்னால் பொய் கேஸில் போலீஸ் உள்ளே போட்டுவிடுவார்கள் என்று எல்லோருக்கும் பயம்.

ஒரு சமூகத்தில் அசிங்கமென அங்கீகரிக்கப்பட்டச் செயல், அந்த மக்களுடைய தலைநகரின் மையத்திலே நடப்பது அந்தச் சமூகத்தையே அசிங்கப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றியது.ஓர் அசிங்கத்தைச் செய் பவனும் அதைப் பார்த்துக்கொண்டு செல்பவனும் ஒரே மாதிரியான ஆட்கள்தான். அவர்களுக்குள் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த அசிங்கத்தை வேரோடு சாய்க்க நினைத்தேன்.

குறளகத்தில் நடக்கும் கூத்துகளைப் பத்திரிகைகளின் பார்வைக்குக் கொண்டு சென்றேன். என்னுடைய போராட்டத்தால் ‘குறளகத்தில் காமத்துப்பால்’ என்ற தலைப்பில் ஒரு புலனாய்வுப் பத்திரிகையில் செய்தி வந்தது. இதன் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என்று போலீஸுக்குத் தெரியும். சாம்பலுக்குள் பதுங்கி இருந்த நெருப்புபோல ஒட்டுமொத்த போலீஸும் என்னைப் பார்த்துக்கொண்டு இருந்தது.

பூக்கடை இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் என்னைக் கொலை வெறியோடு தேட ஆரம்பித்தார். ‘420’ கேஸில் என்னைக் கைது செய்தார்கள். அரசாங்கத்தில் வேலை வாங்கித் தருவதாக 2,000 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு ஒருவரை ஏமாற்றிவிட்டதாகப் பொய்வழக்குப் போட்டார்கள். பசியோடு இருந்த சிங்கத்தின் வாயில் சிக்கிய ஆட்டுக்குட்டிபோல் மாட்டிக் கொண்டேன்.

அப்போது புறநகர் பேருந்து நிலையம் பாரீஸில்தான் இருந்தது. பஸ் ஸ்டாண்டைச் சுற்றி என்னை அடித்து இழுத்துக்கொண்டு போனார் வடக்கு கடற்கரை காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம். என் கைகள் இரண்டையும் கட்டி, விலங்குமாட்டி ஜட்டியுடன் விட்டு அடித்தார். பஸ் ஸ்டாண்டில் நின்ற எல்லோரும் என்னையே வேடிக்கை பார்த்தார்கள். ‘‘இன்னும் உன்னை என்ன செய்கிறேன் பார்றா...’’ என்றார் தர்மலிங்கம். ‘உன்னால இதான்டா செய்ய முடியும். வெளியே வந்து உன்னை நான் என்ன செய்றேன் பார்...’ என்றேன் கோபத்தோடு.

ஆத்திரம் அடங்காமல் லத்தியால் ஓங்கிப் பின்புறத்தில் அடித்தார். ‘இந்த அடியோடு இவன் இறந்துவிட மாட்டானா?’ என்கிற அளவுக்கான ஆவேசம். போட்டிருந்த என் பனியனை இழுத்துக் கிழித்தார்... பனியன் கிழிந்து தொங்கியது. எல்லோருடையப் பார்வையிலும் நான் திருடனாகத் தெரிந்தேன்...

ஆனால், என் பார்வையில் எல்லோரும் தவறுகளை தட்டிக் கேட் கத் துணிவில்லாதவர்களாக,கேடுகளைப் பார்த்து கேள்விக் கேட் காதவர்களாக, அவலங்களைப் பார்த்து ஆவேசம் கொள்ளாதவர் களாக, தனக்கு வீரம் இல்லையே என நினைத்து வெட்கப்படா தவர்களாகத் தெரிந்தார்கள். அதனால், தலை நிமிர்ந்தபடியே, ‘ஏய்! மீனாட்சி சுந்தரம் உன்னை ஒரு நாள் தலைகுனிந்தபடி நடக்கச் செய்தே தீருவேன்’ என்று உரக்கச் சொன்னபடி நடந்தேன்.

துகில் உரிப்புக்கு நிகரானத் துன்பச் செயல் ஏதும் நம் சமூகத்தில் இருக்கிறதா? துகில் உரிப்பில் துவங்கியதுதானே பாரதப் போர். பாஞ்சாலிக்கு அன்று கண்ணன் இருந்து காப்பாற்றினான். ஆனால், எனக்கு யாரும் இல்லை. ஆடை இழந்து அவமானம் அடைந்து நினைக்கையில் பாஞ்சாலி போல் மனம் பதறுகிறது. ஆடையை அவிழ்த்த கணத்தில் பாஞ்சாலி எப்படிக் கதறியிருப்பாள்; பதறியிருப்பாள்; துடித்து இருப்பாள்; கூனிக் குறுகிக் கொந்தளித்திருப்பாள்... பாஞ்சாலியின் பதட்டத்தை ஓர் ஆண் மகனாக நான் அறிந்தழுத தருணம் அது.

ஆடை அவிழ்ப்புதானே அநாகரிகத்தின் ஆரம்பம். உள்ளாடையோடு ஊர் சுற்றி அசிங்கப்பட்டதை, நாம் ஆண்தானே என்று எண்ணி, புறந்தள்ள முடியவில்லை. புறமுதுகுக் காயம்போல் அந்த நிகழ்வு என்னுள் புகைந்துகொண்டு இருந்தது. என் மனைவி, என் மகள், என் உறவினர் கள் என? என்னைச் சுற்றியிருந்த அனைவருக்கும் இந்தச் சம்பவம் அசிங்கமாகவும், அவமானமாகவும் இருந்தது. என் மனைவி கோபத்தில் திட்டினாள்.

என் மகள், ‘இதெல்லாம் நமக்குத் தேவையாப்பா... ஏம்ப்பா... நீங்களும் கஷ்டப்பட்டு எங்களையும் கஷ்டப் படுத்துறீங்க... விட்டுருங்கப்பா’ என மனம் உருகி மன்றாடினாள். என் உறவினர்கள் துஷ்டனைக் காண்பது போல் தூர ஒதுங்கினார்கள். ஆனால், என் மனசாட்சிக்கு முன் நான் குற்றம் அற்றவனாகத் தலைநிமிர்ந்து நிற்கிறேன்.

என் மனசாட்சி என்னை எதுவும் கேள்வி கேட்கவில்லை. தூர நின்று எச்சிலைக் காறி என்மீது துப்பவில்லை. என்னைப் பார்த்து கைகொட்டி சிரிக்கவில்லை. என்னைக் கயவன் என்று கைகாட்டவில்லை. பிறகு, எதற்காக நான் பின்வாங்க வேண்டும்? இனி கயவர்களின் பிடரியைப் பிடித்து உலுக்க வேண்டியதுதானே என் வேலை என்பதில் உறுதியாக இருந்தேன்.

இப்படி, எத்தனை எத்தனைப் பேரை அடித்துத் துவைத்து இருப்பார்கள். ஆடை களைந்து அசிங்கப்படுத்தி இருப்பார்கள். தங்களின் சுய லாபத்துக்காக எத்தனைப் பேரை சூறையாடி இருப்பார்கள். குற்றம் செய்த வனைக் கூண்டில்தானே ஏற்றச் சொல்கிறது சட்டம். உதை கொடுத்து ஊர்வலம் வர எந்தச் சட்டமும் சொல்லவில்லையே... ஆயிரம் குற்றவாளிகளை மன்னிக்கச் சொல்லும் சட்டம், ஒரு நிரபராதியைக்கூட தண்டிக்கக் கூடாது என்கிறது. ஆனால், நமது போலீஸ் 1,000 குற்றவாளிகளை உருவாக்குபவர்களாகவும், ஒரு நிரபராதியைக் கொடூரமாகத் தண்டிப்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, காவல் நிலையத்தில் அவர்கள் செய்யும் காட்டு மிராண்டித்தனத் தையும், அறைகளுக்குள் அவர்கள் நிகழ்த்தும் அராஜகங் களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவும், சட்டத்தால் சாட்டை அடி கொடுக்கவும் முடிவு செய்து மீனாட்சி சுந்தரம் உட்பட 24 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்தேன்.

ஆயிரம் பிச்சைக்காரர்களையாவது திருடன்களாக மாற்றி இருக்கிறது போலீஸ். ஆனால், ஒரு திருடனைக் கூட யோக்கியவானாக மாற்றியதில்லை. ஏதாவது அப்பாவித் திருடன் சிக்கினால் அவனை அடித்து உதைத்து அவன்மேல் கேஸ்மேல் கேஸ் போடுகிறது. அடி உதைக்குப் பயந்து அவனும் ஒப்புக்கொண்டால், இருக்கிற கேஸை எல்லாம் அவன்மீது திணிக்கிறது.

இப்படி கோர்ட், ஜெயில் என்று அலைந்து தெரிந்துகொண்டு, சூழ்நிலைக்குத் திருடிய சின்ன திருடன், கொஞ் சம் கொஞ்சமாக வளர்ந்து பெரிய ரவுடியாக வந்து நிற்பான். அந்த ரவுடிகளிடம் கைகட்டி, வாய்பொத்தி போலீஸ் சேவகம் செய்யும். ரவுடிகளை உருவாக்குவதே போலீஸ்தான். போலீஸின் அடிதடிக்குப் பயப்ப டாமல் எதிர்த்து நின்றதால்தான் 8 கேஸோடு விட்டுவிட்டார்கள். இல்லையென்றால் என் மீது 50 கேஸா வது போட்டு ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருப்பார்கள்.

உடல் எலும்புகளில் ஒன்றிரண்டை ஒடித்து நிரந்தர ஊனமாக்கிப் பிச்சை எடுக்க வைத்திருப்பார்கள். நிஜத் திருடனாக மாற்றி, வயிற்று வலி பொறுக்க முடியாமல் தூக்கில் தொங்கியவர்களின் லிஸ்டில் என்னையும் சேர்த்திருப்பார்கள். போலீஸிடம் எலும்பை உடைக்கும் லத்தி இருந்தது. அவர்களின் மண்டையில் குட்டும் நீதி தேவதையின் சுத்தி என்னிடம் இருந்தது. என்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு துன்புறுத்தும் தைரியம் அவர்களிடத்தில் இருந்தது. நீதியின் முன்னால் அவர்களை மண்டியிடச் செய்யும் மன உறுதி என்னிடத்தில் இருந்தது. என்னைத் தெருவில் உள்ளாடையோடு அடித்து இழுத்து அசிங்கப்படுத்தும் ஆணவம் அவர்களிடத்தில் இருந்தது. அவர்களை ஆடையோடு இருக்கும்போது அதற்கு நிகரான அசிங்கத்தை ஏற்படுத்தும் ஆண்மை என்னிடத்தில் இருந்தது.

போலீஸைக் கண்டு பயந்து ஓடாமல், ஒதுங்கி மறையாமல், எதிர்த்து நேருக்கு நேர் நின்று உரக்கக் கத்தியதால்தான் என்னை அடித்து துன்புறுத்திய அதே போலீஸை எனக்குப் பாதுகாப்புக்காக பிஸ்டலுடன் என் பின்னால் வரவைக்க முடிந்தது. ‘காலம் திரும்புகிறது’ என்பார்களே... அதுபோல் ‘காவல் திரும்பிய கதை’ இது.

உடலை விற்றுச் சம்பாதிப்பவளிடம் பங்கு கேட்பவர்கள் எவ்வளவு பெரிய பயங்கரவாதிகளாக இருப்பார்கள். கூறு கட்டிய காய்கறிகளைக் ‘கூறு அஞ்சு ரூபாய்’ எனக் கூவிக் கூவி விற்பவளிடம் 50 ரூபாயைப் பறித்துக்கொண்டு போகிறவன் எவ்வளவு பெரிய அயோக்கியனாக இருப்பான். அயோக்கியர்களையும் பயங்கர வாதிகளையும் வளரவிடுவதும் பாவம்தானே! 1987 லிருந்து 1992 வரை சட்டப் போராட்டம் நடத்தினேன்.

மாவட்ட கலெக்டரும், ஹோம் செகரட்டரியும் நேரடியாக என்னை விசாரணை செய்தார்கள். வக்கீல் சந்திரசேகரன் எனக்காக வாதாடினார். இவர் தற்போது 7 வது சிவில் கோர்ட்டில் ஜட்ஜாக இருக்கிறார். இந்த இடைப்பட்ட காலங்களில் எனக்கு எதிராக சாட்சி சொன்ன எம்.கே.பி.சுல்தான் இறந்துவிட்டார். எனக்கு ஆதரவாக என் நண்பர் ஷேக் முகமது சாட்சி சொன்னார். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் பதவி உயர்வு பெற்று ஏ.சி யாக நன்னிலத்துக்குப் போய்விட்டார்.

நான் எப்போதும் நீதிமன்றங்களுக்கு இணையாகத் தெய்வங்களையும் வணங்குபவன். ‘அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்’ என்று நம் முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. அனுபவித்து உணர்ந்துதான் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் தெய்வங்கள்போல நீதிமன்றமும் கொஞ்சம் லேட்டாகத்தான் கண் திறக்கும். 1992-ல் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்குக்கானத் தீர்ப்பை அறிவித்தார்கள்.

வழக்கைத் தொடுத்தவர் என்ற முறையில் விசாரணை அதிகாரியாக தர்மலிங்கம் நீதிமன்றத்துக்கு காலை யிலேயே வந்திருந்தார். மாலை 4 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசித்தார். போலீஸின் அராஜகத்தை நீதிபதி கடுமையாகக் கண்டித்ததோடு, எனக்கு எதிரான பொய் வழக்கையும் தள்ளுபடி செய்தார். தீர்ப்பைக் கேட்டு விட்டு கோர்ட் படிகளில் இறங்கிய தர்மலிங்கம், அந்த இடத்திலேயே விழுந்து இறந்துவிட்டார். கோர்ட்டே கூடிவிட்டது. எனக்கு பேரதிர்ச்சி.

இரண்டு வருடங்களுக்கு முன்பு அவர் வீட்டில் மேலும் இரண்டு பேர் வெவ்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டு இறந்து போய்விட்டனர். அவருக்குப் பின் அந்தக் குடும்பமே நலிந்து போனது. அவரின் இறப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தனிமனித இறப்பையும் இழப்பையும் தடுப்பதற்காகத்தானே எனது போராட்டமும் பயணமும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024