Wednesday, March 18, 2015

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!


ப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்க ளால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த் தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு 30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ் 30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம். 

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்! 


குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள். 

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும் அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி, இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும் பொறுப்பும் வராது.
அத்தியாவசியமா, ஆடம்பரமா..? 

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி, ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.
பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும். 

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!
வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.  செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங் கள். 

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது, ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான புரிதலை உண்டு பண்ணும். 

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்! தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள் கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக் கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான், குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு அவர்களுக்குக் கிடைக்கும். 

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர் இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும். இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும். 

பாக்கெட் மணி கொடுங்கள்! 


குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம். ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள். 30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள். வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம், அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது. 

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!


குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.
மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்! 

- ஜெ.எம். ஜனனி

 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024