'தி இந்து' தமிழ் இணையதளத்தில் பிப்ரவரி 27-ல் வெளியான மாணவர்களை அரசுப் பள்ளிகள் "உற்பத்தி" செய்வது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தேன்.
ஒட்டுமொத்த சமூக அமைப்பின் யதார்த்தமான சமூக, அரசியல், பொருளாதார அவலங்கள் அனைத்தையும் சமூக அமைப்பின் ஒரு சிறு நிறுவனமான அரசுப் பள்ளியின் கல்வி முறையின் விளைபொருள் என்று எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
"இன்று தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களாக உள்ளனர், தற்போது மாணவர்களும் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவது வேதனையாக உள்ளது. வேலூரில் 10-ம் வகுப்பு மாணவன், ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழலை உருவாக்கியது, நமது கல்வி முறையின் மிகப்பெரிய தோல்வி என்பதை நவீன மெக்காலேக்கள் உணர்வார்களா?" என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
எந்த மெக்காலேவின் ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்தக் கண்டுபிடிப்பைக் கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் என்பதுஆய்வுக்குரியது. ஒரு சமூகக் குற்றம் நடப்பதற்கு ஒரு குறிப்பிட்ட பிரிவினரே காரணம் என்றும், அரசுப் பள்ளியின் கல்விச் சூழல் மட்டுமே காரணம் என்றும் கருத்தை உருவாக்கும் வகையில் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல.
ஓர் அரசுப் பள்ளி மாணவன், ஒரு மாணவியைக் பலாத்காரம் செய்து கொலை செய்யும் சூழல் உருவாக அரசுப் பள்ளியின் கல்வி முறையும், அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் மட்டுமே காரணம் என்று குற்றம் சுமத்துவது நியாயமற்றது. இப்படிப் பேசுவதைக் கூட, பணக்கார வர்க்கக் கல்வியாளர்கள் பின்பற்றிவரும் நவீனத் தீண்டாமைக் கொள்கை என்றுதான் குறிப்பிட வேண்டும்.
அரசுப் பள்ளிப் பெற்றோர்கள் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்க முடியாதவர்கள் என்ற துணிவில் இந்தக் கருத்தைக் கட்டுரையாளர் கூறியிருக்கிறார் என்றும் கருதத் தோன்றுகிறது. ஒட்டு மொத்த சமூகத்தின் அவலங்களையும், கல்வியின் அவலங்களையும் ஏழைகள் மீதும் ஏழைகளின் பள்ளிகளின் மீதும் மட்டுமே சுமத்துவது நியாயமற்ற செயலாகவே கருத முடியும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் படித்த ஒன்பதாம் வகுப்பு மாணவர், தனது ஆசிரியை ஒருவரை வகுப்பறையில் கத்தியால் குத்திக் கொன்றார். இந்தச் சூழல் உருவானதற்கு ஆங்கிலோ இந்தியக் கல்வி முறை மாணவர்களை இப்படி "உற்பத்தி" செய்கிறது என்றும், இதற்கு மாணவர்களின் பெற்றோர்களும் காரணம் என்றும் யாராவது குற்றம் சாட்டினார்களா? குற்றங்களைப் பற்றிப் பேசுவதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை, ஆங்கிலோ இந்தியப் பள்ளி மாணவர்களுக்கு ஓர் அணுகுமுறை என்ற பாகுபாடு உருவாக்கப்படுவது கல்வியில் ஜனநாயகத் தன்மைகளை அழித்துவிடும்.
"ஒரு மாணவன் வருடம் முழுவதும் என்ன கற்றுக்கொண்டான்? அதை எப்படி தேர்வில் எழுதினான் என்பெதெல்லாம் தாண்டி, அன்றைய தேர்வுக்கு யார் அறைக் கண்காணிப்பாளராக வந்தார்கள், எப்படி தாராளமாக நடந்து கொண்டார்கள் என்பதைப் பொறுத்தே மாணவர்களின் தேர்ச்சி நிர்ணயிக்கப்படுறது" என்று கட்டுரையாளர் கூறியுள்ள குற்றச்சாட்டு தனியார் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். கண்காணிப்பாளருக்குக் கப்பம் கட்ட அரசுப் பள்ளிகளுக்கு என்ன வாய்ப்பு இருக்கப்போகிறது? கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போலக் குடிகாரப் பெற்றோர்களின் பிள்ளைகளல்லவா அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள்? கண்காணிப்பாளர்களுக்கு கப்பம் கட்ட வாய்ப்புள்ள தனியார் பள்ளிகளில்தானே இப்படியெல்லாம் மாணவர்களின் தேர்ச்சியை நிர்ணயிக்க முடியும்.
பெரும்பாலான தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்புப் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பிலும், பன்னிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பதினோராம் வகுப்பிலும் கற்பிக்கப்படுகின்றன. இந்த முறைகேட்டின் மூலமே தனியார் பள்ளி மாணவர்கள் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களைவிட அதிக தேர்ச்சி விகிதமும் மதிப்பெண் விகிதமும் பெறுகின்றனர். இதனால் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் உயர் கல்விச் சேர்க்கை வாய்ப்புகள் பறிபோகின்றன. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த ஒரு விழுக்காட்டினர்கூட இடம் பெற முடிவதில்லை. இந்தச் சமூக அநீதிக்குக் காரணமான தனியார் பள்ளிகளின் முறைகேட்டைத் தடுக்க பதினோராம் வகுப்பிலும் அரசு பொதுத்தேர்வு முறையைக் கொண்டுவரவேண்டும். மேலும் தவறு செய்யும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படவேண்டும் என்று இதுவரை எத்தனைபேர் கேட்டிருக்கிறார்கள்?
கேட்கும் தகுதியுடைய பெற்றோர்களின் குழந்தைகள் அனைவரும் எப்படியாவது மதிப்பெண் பெற்றால் போதும் என்ற ஒரே குறிக்கோளில் தனியார் பள்ளிகளில் கேட்ட அளவுக்குக் கட்டணம் செலுத்திப் படித்துவருகிறார்கள். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்கவைக்கும் ஏழைப் பெற்றோர்களோ இதையெல்லாம் கேள்வி கேட்பதற்கு இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்பதுதானே உண்மை நிலை.
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எல்லாம் குற்றவாளிகளாக உருவாக்கப்படுகிறார்களா? அரசுப் பள்ளிக் கல்வி முறைதான் நாட்டில் பெண்களைப் பலாத்காரம் செய்து கொலை செய்பவர்களை "உற்பத்தி" செய்கிறதா?
அரசுப் பள்ளி மாணவர்கள் அனைவரும் படிக்காமல் தேர்வில் காப்பி அடித்து மதிப்பெண் வாங்கினார்களா? அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தலைமை ஆசிரியர்களும் மாணவர்களைத் தேர்வில் பார்த்து எழுதவைத்துதான் மதிப்பெண் வாங்க வைக்கிறார்களா? என்று கேள்வி கேட்கும் வகையில் ஒட்டு மொத்தமாக அனைவர்மீதும் தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பது நியாயமற்றது.
அனைத்துக் குழந்தைகளும் உயிர் வாழ்வதற்கும், தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முன்னேறுவதற்கும் சமவய்ப்புகளையும் சமஉரிமைகளையும் பெற்றுக் கொடுக்கும் கல்வி முறை ஒன்றே நமது ஒரே குறிக்கோளாக இருக்க முடியம். மேலும் ஓர் உண்மையான மக்களாட்சி அமைப்பை உருவாக்குவதற்கான அடிப்படைக் கடமையும் கூட இதுவாகத்தான் இருக்க முடியும். இந்த உயரிய நோக்கத்தை அடைவதற்கு நாம் அரசுப் பள்ளிகளைக் காப்பதையும் மேம்படுத்துவதையும் முதன்மை இலக்காகக் கொள்ளவேண்டும். அரசுப் பள்ளிகளின் மதிப்பைத் தாழ்த்தும் படியான வகையில் நியாயமற்ற கருத்துகளைப் பொத்தாம் பொதுவாக கூறிவருவது ஆபத்தானது.
அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் கல்விக் கூடங்களுக்குள் காலடிவைத்த முதல் தலைமுறையினர் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, சந்திராயன் திட்ட இயக்குனர் போன்ற சிகரங்களைத் தொட்ட தமிழர்கள் பலர் அரசுப் பள்ளியில் தாய்மொழிவழியில் படித்தவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஏழைகளின் அறிவுக்கூடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்படவேண்டியவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை.
எனவே, இருக்கின்ற குறைகளைக் களைய உதவுவதே ஆக்கபூர்வமான பணியாக இருக்க முடியும். அரசுப் பள்ளிகள் மீது அவநம்பிக்கைச் சேற்றை இறைப்பதால் எதிர் விளைவுகளே ஏற்படும். அரசுப் பள்ளிகள் ஜனநாயகப் பயிர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்கள் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுவோம்.
அரசுப் பள்ளியில் இரண்டு மகன்களைப் படிக்க வைக்கும் ஒரு தந்தை என்ற உரிமை காரணமாகவும், அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் என்ற பொறுப்புணர்வினாலும் இந்த வேண்டுதலை அனைவருக்கும் முன்வைக்கிறேன்.
சு.மூர்த்தி, கட்டுரையாளர் - ஒருங்கிணைப்பாளர். கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு, திருப்பூர் மாவட்டம். தொடர்புக்கு- moorthy.teach@gmail.com
No comments:
Post a Comment