ஒரு காலத்தில் அஞ்சல் அட்டையில் ஒரு தகவல் வரும். இதைப் படித்துவிட்டு இதே போல் பத்துப் பேருக்கு அனுப்பினால் உங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும், இதை அலட்சியப்படுத்தினால் அழிவுதான் எனப் பயமுறுத்தும் வாசகங்கள் அதில் இடம்பெற்றிருக்கும். இதைப் போன்றவை ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவை வந்த பிறகு அவற்றிலும் தொடர்ந்து வரத் தான் செய்கின்றன. மொபைல் வரத் தொடங்கியபோது மெஸேஜ் இலவசமாக இருந்தது. அப்போது நண்பர்கள் அனைவரும் தொடர்ந்து மெஸேஜ் ஆக அனுப்பித் தள்ளுவார்கள்.
என்ன ஏதென்று பார்ப்பதே இல்லை. வந்த மெஸேஜை எல்லாம் படிக்காமல் பரப்புவார்கள். பின்னர் இதற்கு நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கத் தொடங்கின. அதன் பின்னர் நண்பர்கள் மெஸேஜ் அனுப்புவதைக் குறைத்துக் கொண்டார்கள்.
சில சலுகைகளை நிறுவனங்கள் அறிவித்தன. ரேட் கட்டர் போட்டு மெஸேஜ் அனுப்பினார்கள். பண்டிகை தினம் அன்று மெஸேஜ் அனுப்ப சலுகை இல்லை என்ற போதும் நம் நண்பர்கள் முந்தைய நாளே வாழ்த்துச் சொல்லி தங்கள் அன்பை நிரூபித்தார்கள்.
நேரில் பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லும் நண்பர்கள் மொபைல் வழியே அன்பைப் பொழிகிறார்கள். இப்போது இவர்கள் கையில் வாட்ஸ் அப் வந்து வசதியாகச் சிக்கிவிட்டது. காலையில் தொடங்கும் இவர்களது அன்பு இரவுவரை தொடர்ந்து ஓயாமல் டொய் டொய்ங்கென முழங்கியபடியே இருக்கிறது. புதுசு புதுசாக எவ்வளவோ விஷயங்களை என்ன ஏதென்று தெரியாமலே உலகம் முழுக்க அனுப்பி மகிழ்கிறார்கள்.
சமீபத்தில் காவல்துறை உயரதிகாரி ஒருவரின் சில்மிஷப் பேச்சை கேட்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லும் அளவுக்கு அந்த உரையாடல் மொபைல் வழியே ஒரு சுற்று சுற்றியது. செய்தி எப்படிப்பட்டது, அது உண்மையா, பொய்யா என்று யோசிக்காமலேயே வந்ததா, பார்க்கிறோமோ இல்லையோ பரப்பிவிடுவோம் என்ற பரந்த மனப்பான்மையில் செயல்படுகிறார்கள்.
அரசியல் தலைவர்களை நக்கலடித்து வரும் வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. தேர்தல் வருவதை ஒட்டி இதைப் போன்ற வீடியோக்கள் இனி அதிகம் வரலாம். நீங்கள் விரும்பும் விரும்பாத செய்திகளும், படங்களும், வீடியோகளும் உங்கள் மொபைல் போனின் பேட்டரியைத் தின்று தீர்க்கும். வாட்ஸ் அப் ஃப்ரீதானேன்னு நண்பர் ஒருத்தர் சொன்னார். ஆனால் மாதந்தோறும் நெட் கார்டு போட்டால்தான் வாட்ஸ் அப் உள்ளிட்ட வசதிகளையும் அனுபவிக்க முடியும். எதுவுமே ஃப்ரீயாகக் கிடைப்பதில்லை.
No comments:
Post a Comment