சென்னையில் புறநகர் ரயில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன் செயலி (App) மூலம் 646 பேர் மட்டுமே டிக்கெட் எடுத்துள்ளனர்.
நாட்டிலேயே முதல்முறையாக சென்னை, மும்பையில் ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் செல்போன்கள் மூலம் புறநகர் மின்ரயில் டிக்கெட் முன்பதிவு (எம்-டிக்கெட்டிங்) செய்யும் வசதி கடந்த ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிளேஸ்டோரில் ‘யூடிஎஸ்’ (UTS on mobile) என்னும் செயலியை பதிவிறக்கம் செய்து, பெயரை பதிவு செய்துகொள்ளலாம். கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு (ஏடிஎம் கார்டு) மூலம் இருப்புத் தொகையை அதிகரிக்கலாம்.
சென்னையில் 18 ரயில் நிலையங்களில் ‘ஏடிவிஎம்’ எனப்படும் தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரங்கள் உள்ளன. அதன்மூலம் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.
இத்திட்டம் குறித்து தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் கூறியதாவது:
எம்-டிக்கெட் வசதிக்கான செயலியை இதுவரை 6,227 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இவர்களில் 284 பேர் மட்டுமே ரீசார்ஜ் செய்துள்ளனர். அந்த 284 பேர் 523 டிக்கெட்களை முன்பதிவு செய்ததன்மூலம் 646 பேர் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். இதன்மூலம் ரூ.35,300 வருவாய் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை புறநகர் ரயில்களில் ஒரு நாளுக்கு 5 லட்சம் முதல் 6 லட்சம் டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. அதன்மூலம் சராசரியாக ரூ.14 லட்சம் வருவாய் கிடைக்கிறது. ஆனால், ‘எம்-டிக்கெட்டிங்’ மூலம் இரண்டரை மாதங்களில் 523 டிக்கெட்கள் மட்டுமே விற்கப்பட்டிருப்பது இத்திட்டம் இன்னும் பயணிகளை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதையே காட்டுகிறது.
No comments:
Post a Comment