Saturday, March 21, 2015

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

பொதுவாக நாட்டின் வளர்ச்சி என்பது வேலை வாய்ப்புகளோடு கூடிய வளர்ச்சி என்றால்தான் பயனுள்ளதாக இருக்கும். சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வுப்படி, இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9 சதவீதமாக இருந்தாலும்கூட, நாட்டில் வேலை இல்லா திண்டாட்டத்தை போக்க இன்னும் 20 ஆண்டுகள் ஆகும். எனவே, வேலைவாய்ப்பை அனைத்து பிரிவிலும் உள்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இன்றைய இளைஞர் சமுதாயம் பெறுவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குவதே மத்திய, மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

அதிலும் தங்கள் ஊரில் உள்ள அதிகம் படிக்காத இளைஞர்கள் எல்லாம் துபாய் போகிறோம், அரபு நாடுகளுக்கு செல்கிறோம் என்று ‘டாட்டா’ காட்டிவிட்டு, அங்கு தங்கள் உடல் உழைப்பை மூலதனமாக வைத்து சம்பாதித்து, குடும்பத்தை வளப்படுத்துவதை பார்த்த பிறகு, படித்த இளைஞர்களுக்கும் ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற ஆசை வந்துவிட்டது. அதிலும் குறிப்பாக, நர்சு வேலைக்கு படித்த பெண்கள், உள்நாட்டில் அபரிமிதமான வேலைவாய்ப்பு இருந்தாலும், வெளிநாட்டில் போய் வேலை பார்த்தால் அதிக சம்பளம் கிடைக்குமே என்ற ஆசையில், அதுதான் தங்கள் முழு லட்சியமாகக் கொண்டு முயற்சி செய்கிறார்கள். பொதுவாக அரபு நாடுகளில் மட்டுமல்லாமல், மேலை நாடுகளில் உள்ள மருத்துவமனைகளிலும் தமிழ்நாடு, கேரளா நர்சுகள் என்றால் அவர்களின் பணித்திறமைக்காகவும், அன்போடு நோயாளிகளை கவனிக்கும் கருணை உணர்வுக்காகவும் நல்ல கிராக்கி இருக்கிறது. ஆனால், பல நேரங்களில் போலி ஏஜென்சிகளை நம்பி ஏராளமான பணத்தையும் கொடுத்து, வெளிநாடுகளுக்கு செல்லும்நேரத்தில், அவர்கள் சொன்னது போல நல்ல சம்பளத்திற்கு வேலையும் கிடைக்காமல், ஏமாந்து நிற்கும் அவலநிலை நாள்தோறும் அரங்கேறுகிறது. வெளிநாட்டுக்கு போய் நிறைய சம்பாதிக்கப் போகிறோமே என்ற எதிர்பார்ப்பில் வீட்டில் உள்ளவைகளை விற்று, கடன் வாங்கி போலி நிறுவனங்களில் கொடுத்து அவர்களை நம்பி வெளிநாடு போகிறார்கள். அங்கு போனபிறகு படும் அவதியோ சொல்லிமாளாது. மோசடி நிறுவனம் என்று தெரியாமல் ஏமாந்துவிட்டோமே என்று கையைப் பிசைந்து கொண்டு நிற்கும் நர்சுகளுக்கு நல்ல செய்தியாக மத்திய அரசாங்கம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.

வெளிநாடுகளில், குறிப்பாக அரபு நாடுகளில் வேலை வாங்கித் தருகிறோம் என்று நர்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்ப அரசு அங்கீகாரம் இல்லாத ஏஜென்சிகளுக்கு மத்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 167 தனியார் நர்சிங் கல்லூரிகளும் இருக்கின்றன. ஆண்டுதோறும் இங்கு படித்து முடித்து 8 ஆயிரம் நர்சுகள் வேலை வாய்ப்பை தேடி வெளியே வருகிறார்கள். இதில் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை தேடும் நிலையில் மத்திய அரசாங்கத்தின் இந்த புதிய உத்தரவு நிச்சயமாக வரவேற்கத்தக்கது. இதுமட்டுமல்லாமல், தமிழக அரசு எம்.ஜி.ஆர். ஆட்சியின்போது, 30–11–1978–ல் அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் என்று ஒன்றை தொடங்கி, ஆண்டுதோறும் ஆயிரம் பேர்களுக்கு மேல் வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப மத்திய அரசின் அனுமதியையும் பெற்றது. 35 ஆண்டுகள் ஆகியும் இந்த நிறுவனத்தின் சார்பில் 9 ஆயிரம் பேர்தான் பல பணிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே தனியார் ஏஜென்சிகளைத்தான் பெரிதும் நம்ப வேண்டிய நிலையில் அங்கும் ஏமாற்றப்படமாட்டோம் என்ற புதிய நம்பிக்கையை இந்த உத்தரவு உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment

Google launches Credit Card with Axis Bank —

Google launches Credit Card with Axis Bank —  Here's wh at you need to know about Pay Flex  Google Pay, in collaboration with Axis Bank,...