இம்மண்ணுலகம் மானிடர் சூழ் உலகமாய் இருக்கக் காரணம் பெண்கள். நாம் எல்லோரும் இப்புவியில் ஜனிக்கக் காரணமாய் இருந்தவள் அம்மாவாய், மனைவியாய், மகளாய்க் கடைசி வரை உடனிருக்கிறாள். மரணம் வரை.
ஆனாலும் அவர்களுக்கான முக்கியத்துவத்தை அளிக்கிறோமா? ஆம் என்ற பதில் எல்லா இடத்திலுமிருந்தும் சுலபமாகக் கிடைத்து விடுவதில்லை.
எத்தனை இன்னல்கள் வந்தாலும், பெண்கள் தங்களுக்கான பாதையை செவ்வனே வகுத்துக் கொள்கின்றனர். ஒரு காலத்தில் மயானத்தில் நுழையவே அனுமதிக்காத சமூகத்தில் இருந்துகொண்டு அனுதினமும் அங்கேயே வேலை பார்க்கின்றனர் இரண்டு பெண்கள். எந்தவொரு வேலையையும் அறிவுப்பூர்வமாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமாகவும் பெண்களால் இலகுவாய் அணுக முடியும் என்பதற்கு இந்த சாதனைப் பெண்களைத் தவிர வேறு என்ன சிறந்த உதாரணம் இருக்க முடியும்?
சென்னை, அண்ணா நகர் புது ஆவடி சாலை, வேலங்காடு எரியூட்டு மயானம். வயது வித்தியாசங்கள் இல்லாமல் பழுத்து உதிர்ந்த முதியவர்கள், அகால மரணமடைந்தவர்கள், இளைஞர்கள், பிஞ்சுக் குழந்தைகள் என மரணித்தவர்களின் உடல்கள் புதைக்கப்படவும், எரியூட்டப்படவும் காத்துக் கொண்டிருக்கின்றன.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி- அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி" - கடுவெளிச் சித்தரின் பாடல் வரிகள் கணீரென்று ஒலிக்கின்றன.
சங்கு ஊதப்படும் ஒலியும், சிகண்டி அடிக்கும் ஓசையும் காதுகளை அறைகின்றது. கால நதி ஓடிக்கொண்டே இருக்கிறது. அதன் சுழலில் நாமும் சுழித்தோடிக் கொண்டேதான் இருக்கிறோம். மகிழ்ச்சி, ஏமாற்றம், துக்கம், அழுகை, கோபம், ஆசுவாசம் என்ற எல்லா உணர்ச்சிகளின் முடிவிடம் இங்குதான் என்னும் நிதர்சனம் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது.
பயணம் பெரும்பாலானோருக்குப் பிடித்த விஷயம். ஆனால் இந்த இறுதிப்பயணம் எதை நோக்கி என்ற கேள்வியும், அது குறித்த பயமும் அங்கிருக்கும் எல்லோருக்குள்ளும் அலையாய் அடித்துக் கொண்டேயிருக்கிறது.
இத்தகைய தருணங்களை எதிர்கொள்ள முடியாமல் சுடுகாட்டிலும், இடுகாட்டிலும் வேலை செய்யும் பெரும்பாலான ஆண்கள் எப்போதும் போதையில் மிதப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்களே தயங்கும் இது போன்ற கணங்களை பெண்கள் எதிர்கொண்டால்? பெண்கள் நுழையக் கூடாத இடமாய் இருந்த மயானத்தில் பெண்களே வேலை செய்தால்?
மயானங்களில் லஞ்சமும், போதையும் தலை விரித்தாடிய சூழலில், சென்னை மாநகராட்சி மயானத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்திடம் கொடுத்தது. அதன் நிறுவனரான ஹரிஹரன் இந்த விஷயத்தைத் தன் மையத்தில் பணிபுரியும் பெண்களிடம் எடுத்துச் செல்ல, தைரியத்துடன் இதை ஒப்புக்கொண்டவர்கள்தான் எஸ்தர் சாந்தியும், பிரவீணாவும். அதே நிறுவனத்தில் 15 வருடங்களாகக் கைவிடப்பட்ட குழந்தைகளுக்காக களப்பணி செய்தவர்கள், இதற்கு பொறுப்பேற்றுக் கொண்டனர்.
ஆரம்பத்தில் இவர்கள் ஒத்துக் கொண்டாலும், அச்சத்துடனே சில நாட்களைக் கழித்தனர். காற்று வீசும்போதும், ஜன்னல் திறந்து கொள்ளும்போதும் பயந்துபோனவர்கள், எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்றனர். தனியாட்களின் கட்டுப்பாட்டில் இருந்த மயானம் இவர்கள் கண்காணிப்புக்கு வந்ததால் ஆரம்பத்தில் இவர்களிடம் வேலை பார்க்க யாரும் வரவில்லை. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஒரு பிரேதம் வர, உதவ யாருமே இல்லாமல், இவர்களே குழி தோண்டிப் புதைத்தார்கள். பழகப் பழக இப்போது பயம் போய்விட்டதாம்.
"தூக்குப் போட்டுக் கொண்டவர்கள், விபத்தில் அடிபட்டு இறந்தவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் என எல்லா விதமான உடல்கள் வந்தாலும், விபத்தில் இறந்தவர்களின் உடல்களைப் பார்க்கும்போது அது மனதை அதிகம் பாதிக்கிறது" என்கிறார்கள்.
"குடித்துவிட்டு வந்து பலர் பிரச்சினை செய்கின்றனர்; அசிங்கமாகத் திட்டியதும் உண்டு. பெண்கள் என்பதாலேயே கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது என்று கட்டுப்பாடோடும் சிலர் இருக்கிறார்கள்" என்னும் எஸ்தர் வேலைக்கு சேர்ந்த ஆரம்பத்தில் தன் கணவரிடம் இவ்வேலை குறித்து எதுவும் சொல்லவில்லை. சில நாட்கள் கழித்து கணவருக்கு விஷயம் தெரிய வந்து, நேரில் வந்து வேலையைப் பார்த்தவர் மனநிறைவுடன் வீடு திரும்பியிருக்கிறார்.
”பீகாரைச் சேர்ந்த ஒருவர் அரசு மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரின் இரு மகள்களும் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்க, அவர்களுக்கு உதவ எண்ணினோம்.
அவர்கள் ஊர் வழக்கப்படி கால் இரண்டிலும் சிவப்புச் சாந்து பூசி அதை ஒரு தாளில் பிரதியெடுத்து பூஜையறையில் வைத்து வழிபடுவது வழக்கம். அதைச்செய்ய அருகே சென்றால், இறந்தவரின் வாயிலிருந்து ஒரு விதமான திரவம் வடிந்துகொண்டே இருந்தது. அந்த வாடை தாங்காமல் நான் நாள் முழுவதும் வாந்தி எடுக்கும்படியானது. படுத்த படுக்கையாகவே இருந்தவர்களின் உடலில் இருந்து புழுக்கள் கூட வெளிவரும். சில சமயம் விபத்துக்குள்ளானவர்களை கை தனியாக கால் தனியாக மூட்டை கட்டியும் கொண்டு வருவார்கள்”என்கிறார் பிரவீணா.
அனாதைப் பிணங்கள் வந்தால், மாலை வாங்கிப் போட்டு செய்ய வேண்டிய சாங்கிய முறைகளைச் செய்து வழியனுப்பி வைக்கிறார்கள். வேலை முடிந்ததும் வீட்டுக்குப் போய் குளிப்பதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு பணிபுரிபவரை அவரது வீட்டில் மஞ்சள் நீர் தெளித்த பின்னர்தான் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கிறார்களாம். நண்பர்கள் யாராவது இறந்து போய் இங்கே கொண்டு வரப்பட்ட தருணங்களில் மட்டும், அவர்களின் நினைவுகள் சில நாட்களாவது தங்களைச் சுற்றி வரும் என்றார்கள்.
தெரிந்தவர்களின் மரணம் மட்டுமல்ல, தெரியாதவர்களின் மரணமும் கூட மனதில் வெறுமையை ஏற்படுத்துகிறது.
"திருச்சியைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியையும் மகனையும் கொடுமைப்படுத்த, அதைத் தாளமாட்டாமல் சின்ன வயதிலேயே ஓடி வந்துவிட்டான் மகன். அப்போதிருந்தே வேலை செய்து கிடைக்கும் பணத்தை மிச்சம் பிடித்து அம்மாவுக்கும் அனுப்பி வந்தான். அப்பா மேலிருந்த வெறுப்பினால் அவர் இறந்ததுக்குகூட அவன் போகவில்லை. சில நாட்கள் கழித்துத் தன் அம்மாவை சென்னை வரச் சொல்லியிருக்கிறான். தன்னந்தனியாய் எப்படி வருவது என்று அம்மா கேட்க, சென்னை வந்து இறங்கினால் போதும். தான் புதிதாய் வாங்கியிருக்கும் வண்டியில் வந்து அழைத்துச் செல்கிறேன் என்று கூற, அம்மாவும் கிளம்பி வந்துவிட்டார்.
மகன் புதிதாய் வாங்கிய வண்டியில் உற்சாகமாய் வர, எதிரே வந்த லாரி அவனை வண்டியோடு அப்படியே அடித்துத் தூக்கியெறிந்தது. வந்திறங்கிய அம்மா, மகனுக்கு போன் மேல் போன் அடித்துக் கொண்டே இருக்க, வெகு நேரம் கழித்து விபத்து நடந்த இடத்திலிருந்த போக்குவரத்துக் காவலர் போனை எடுத்திருக்கிறார். அருகிலிருக்கும் யாராவது ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் செல்பேசியை கொடுக்கச் சொல்ல, ஆட்டோவும் அம்மாவை அழைத்துக் கொண்டு மயானத்துக்கு வந்திருக்கிறது.
என் மகனைப் பார்க்க ஏன் சுடுகாட்டுக்குள் நுழைகிறீர்கள் என்று கேட்டுக் கொண்டே வந்திருக்கிறார். உள்ளே வந்தபின்தான் உண்மை தெரியவருகிறது. அத்தனை ஆண்டுகள் மகனைப் பார்க்காமல் இருந்து, கணவனையும் இழந்த நிலையில் தன் ஒரே மகனை வாழ்வாதாரமாக எண்ணி வந்தவருக்கு அங்கே காத்திருந்தது, அவர் ஆசையாய்ப் பெற்றெடுத்த மகனின் உடல். அதிர்ந்து போய் அங்கேயே படுத்து அழுதவரின் முகம் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிழலாடுகிறது" சொல்லிக் கொண்டிருந்த எஸ்தரின் கண்களில் தளும்பி நிற்கிறது கண்ணீர்.
இங்கு இவர்களிடம் வேலை பார்க்கும் ஆண்களின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது? அங்கு வேலை செய்யும் ஆண்களிடம் கேட்டோம்.
"உயரதிகாரிகளாக பெண்கள் இருப்பதால், உங்களுக்கு ஏதேனும் மனவருத்தங்கள் உண்டா?" என்றால், "இல்லை. ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன.. இங்கு வருபவர்களுக்கு நல்ல விதமாய் சேவை செய்ய முடிகிறதா என்றுதான் பார்க்கிறோம்" என்கின்றனர்.
இறந்தவரின் உறவினர்கள் ஒரு நாள் முன்னதாகவே இவர்களைத் தொடர்புகொண்டு அடுத்த நாளில் எரியூட்டுதலுக்கான நேரத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும். வீட்டில் இறந்தவர்களுக்கு ஒரு படிவமும், மருத்துவமனையில் இறந்தவர்களுக்கு ஒரு படிவமும் வழங்கப்படும். இதைக் கட்டாயம் பூர்த்தி செய்து மயானத்திற்கு எடுத்துவர வேண்டும். அதை இவர்களிடம் கொடுத்து சரிபார்த்தால் போதும். ஒரு பைசா செலவில்லாமல் இறந்தவரின் அஸ்தியை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேரலாம்.
இங்கு இயற்கை எரிவாயு கொண்டு உடலை எரியூட்டுகின்றனர். கையுறை, காலுறை, முகமூடி அணிந்து வேலை பார்க்கிறார்கள். வெளியேறும் புகையின் வீரியத்தைக் குறைக்க ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஊசியும் போட்டுக் கொள்கின்றனர். உடல் மொத்தமாய் எரிய ஒரு மணி நேரம் ஆகும். எலும்புகளின் சாம்பலை எடுக்க 10 நிமிடங்கள். மொத்தமாய் 70 நிமிடங்களில் அஸ்தியை உறவினர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள்.
முன்னர் இந்த இடுகாட்டில் முகாமிட்டிருந்த சமூக விரோதிகளின் நடவடிக்கைகள், இவர்களின் வருகைக்குப் பின்னர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒடுக்கப்பட்டன. எஸ்தர் சாந்தியும், பிரவீணாவும் வீட்டுக்குச் செல்லும்போது “இவங்க தான் எல்லாத்துக்கும் காரணம்; மூஞ்சில ஆசிட் ஊத்தணும்” என்றெல்லாம் இவர்கள் காதுபடவே பேசியிருக்கிறார்கள். இதனால் முன்னர் எங்கு சென்றாலும்,
இவர்களுடன் வேலை செய்யும் பணியாளர்களுடனேயே போயிருக்கிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் எதற்கும் பயப்படுவதில்லை. ஒரு நல்ல காரியத்திற்காக தங்களின் உயிர் போனாலும் பரவாயில்லை என்னும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.
உடல்களை எரியூட்ட வந்தவர்கள் சிலர் சொன்ன விஷயங்கள் அவர்கள் மீதான மதிப்பை இன்னும் அதிகப்படுத்துகின்றன.
முத்து:
"முன்னர் இங்கு இருந்தவர்கள் வருபவர்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொள்வதிலேயே குறியாய் இருப்பார்கள். சடங்குகள் நடக்கும் இடங்கள் முழுவதும் சாம்பல் மேடாய்க் காட்சியளிக்கும். இயற்கை உபாதைகளும் இங்கேயேதான். மது அருந்திவிட்டுத்தான் வேலையையே தொடங்குவார்கள். அவர்கள் வைத்ததுதான் இங்கே சட்டமாய் இருந்தது. நான்கைந்து பேராய்ச் சூழ்ந்து கொண்டு, வருபவர்களிடம் பணத்தைப் பறித்துக் கொள்வார்கள். இப்போது அதுமாதிரி எதுவும் இல்லை. பைசா செலவில்லாமல் காரியம் நடந்துவிடுகிறது."
வெங்கடேசன்:
"இந்த மாதிரியான ஒரு மயானத்தை நான் பார்த்ததே இல்லை. இவ்வளவு அற்புதமாக வேலை செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கவில்லை. மிகவும் துக்கத்துடன்தான் வந்தோம். எவ்வளவு பணம் கேட்பார்களோ, இவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்ற எண்ணத்துடன் இருந்தோம். இறப்பு ஒரு போராட்டம்; இது மற்றொரு போராட்டம் என்று நினைத்தோம். ஆனால் இங்கு எங்களை உட்கார வைத்து, 'ஒரு ரூபாய் கூடச் செலவில்லை, யாருக்கும் இனாம் தரவும் தேவையில்லை' என மிகவும் புரொஃபஷனலாய், கடவுச் சீட்டு அலுவலகத்தில் இருப்பது போல எங்களை நடத்தினார்கள்.
கருணையுடன், எங்களின் மனது நோகாமல் பக்குவமாக எல்லாக் காரியங்களையும் செய்தார்கள். மனிதநேயத்துடனான இத்தகைய காரியங்கள் இன்னும் நாட்டில் இருக்கிறதா என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வயதில் அந்தப் பெண்கள் இருவரும் வேலை பார்ப்பது எங்களுக்கு மிகவும் ஆச்சரியம். எல்லா இடத்தையும் மிகவும் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். இதே போன்ற திட்டங்கள் எல்லா இடத்திலும் நடைமுறைக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்களாக விருப்பப்பட்டு எதாவது பணம் கொடுக்க நினைத்தாலும் எதுவும் வேண்டாமென்று கூறிவிட்டார்கள். துக்கத்திலும் ஒரு நிம்மதி. அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன்."
அங்கிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்த எஸ்தரிடம், மயான வேலை அலுத்துப் போகவில்லையா என்றதற்கு, தங்கள் வீட்டைப் போல்தான் வேலை செய்யும் மயானத்தையும் பார்ப்பதாக பளிச்சென்று பதில் வந்தது.
ஓய்வாக இருக்கும் சமயங்களில் தோட்ட வேலையும் செய்கிறார்கள். அருகில் இருக்கும் ஏழைச் சிறுவர்களுக்கு மயானத்திலேயே இலவசமாக டியூஷன் எடுக்கும் எண்ணமும் இருக்கிறதாம்.
இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்தவரான ஹரிஹரன், அனுபவத்தைப் பொறுத்து பணியாளர்களுக்கு சம்பளத்தோடு, ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது என்கிறார். விடுமுறையே இல்லாது மன அழுத்தம் வர வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் மயானத்தில் வேலை பார்ப்பவர்களை ஒன்றிணைத்து, பிரத்யேக கலை மற்றும் விளையாட்டு விழாவையும் நடத்தி வருகிறார்.
"பெண்களுக்குரிய மாதாந்திர நாட்களில் வேலை செய்ய ஏதேனும் தயக்கம் இருந்திருக்கிறதா" என்று கேட்க அதைக் குறித்து யோசித்ததேயில்லையாம் மற்ற இடங்களில் வேலை பார்த்தபோது கூட மனக் குழப்பம் அதிகமாய் இருக்கும். ஆனால் சுடுகாட்டுக்கு வேலைக்கு வந்த பிறகுதான் நிம்மதியாய்த் தூங்குகிறோம் என்கிறார்கள்.
"சுடுகாட்டுல பேய் இருக்கும்னு பயமுறுத்துவாங்களே?"
இருவரும் பேய்ச் சிரிப்பு சிரிக்கின்றனர். "அப்படி எதுவும் கிடையாது; கெட்ட மனுஷங்கதான் பேய்!"
"சுப நிகழ்ச்சிகளுக்குப் போனால் அங்கிருக்கும் உறவினர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்?"
"எங்கள யாரும் ஒதுக்கலை; ஏன் ஒதுக்கப் போறாங்க.. கொலை செஞ்சவனே நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு நடக்கும்போது, இப்படி நல்ல காரியம் செய்யற நாங்க எதுக்கு வெக்கப்படணும்?!'
அவர்கள் சொல்வது சரிதானே?
No comments:
Post a Comment