டீக் கடை வைத்து நடத்தும் பெண்களைப் பார்த்துப் பழகிய பலருக்கும் ஸ்கூட்டரில் சென்று டீ சப்ளை செய்யும் ஜெயாவைப் பார்ப்பது ஆச்சரியமாக இருக்கும். ஈரோடு குமலன்குட்டையைச் சேர்ந்த ஜெயாவுக்கு 42 வயது. டீ சப்ளை செய்வதில் இருபது வருட அனுபவம். சிறு வயதில் பவர்லூம் தறியில் வேலை பார்த்தவர், டீ மாஸ்டரைக் காதலித்துக் கரம் பிடித்தார். கணவர் பெருந்துறையில் டீ மாஸ்டராக இருக்க, இருசக்கர வாகனத்தில் டீ கேனைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிடுகிறார்.
“தினமும் லைனுக்கு டீ கொண்டு போவேன். டூவீலர் ஒர்க் ஷாப், கார் ஒர்க் ஷாப், லேத், கம்பெனி களுக்கு டீ, போண்டா, வடை, சமோசா சப்ளை செய்வேன். மதியம் 12 மணிக்கு மேல சின்னதா ஒரு கடை வச்சு வடை வியாபாரம் பண்றேன்” என்று சொல்லும் ஜெயா, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுத்துக்கொள்கிறார்.
“அன்னைக்கு ஏதாச்சும் சொந்தங்காரங்க விசேஷம் இருந்தா போயிட்டு வருவேன். மத்தபடி மழை பெஞ்சாலும், வெயில் அடிச்சாலும் டீ விக்கப் போயிடுவேன். செலவு போக தினமும் கூலி 500 ரூபா நிக்கும். எனக்கு எந்தக் குறையும் இல்லை. நான் நினைச்சபடியே வீடு கட்டியாச்சு. பையனும் எம்.பி.ஏ படிச்சுட்டு வேலைக்குப் போறான்” என்று ஜெயா சொல்லும்போது உழைத்து வாழ்வதில் இருக்கும் நிறைவை உணர முடிகிறது.
No comments:
Post a Comment