Sunday, May 3, 2015

தனியார் எம்.பி.பி.எஸ். கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயம்: நிர்ணயக் குழுவின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு

2014- 15-ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புக் கட்டணத்தை நிர்ணயித்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக் குழு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மதுரையில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

எங்கள் மருத்துவக் கல்லூரி கடந்த 2011-12-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. எங்கள் கல்லூரிக்கு 2013-14-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ரூ. 2.30 லட்சம் கட்டணத்தை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு உத்தரவிட்டது. இந்த நிலையில் 2014-15 -ஆம் ஆண்டுக்கான கட்டணத்தை மாற்றி நிர்ணயிக்கக் கோரி சில கல்லூரிகள் கட்டண நிர்ணயக் குழுவை அணுகியது. அதில் எங்கள் கல்லூரியும் ஒன்று.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியின் தனிப்பட்ட வரவு, செலவுகளை கணக்கில் கொள்ளாமல் நிர்ணயக் குழு தன்னிச்சையாக கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் இணையதள முகவரி மூலம் எங்களுக்கு அனுப்பப்பட்டது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி கட்டணம் நிர்ணயிக்காமல், தன்னிச்சையாக கட்டணக் குழு கல்லூரிகளுக்கு கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

இது எங்கள் கல்லூரியின் செலவை ஒப்பிடும் போது மிகக் குறைவானது. எனவே, தகுந்த கட்டணத்தை எங்கள் கல்லூரிக்கு நிர்ணயிக்க கட்டண நிர்ணயக் குழுவுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டது. மேலும், அந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி எஸ்.கே.கெளல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், கட்டண நிர்ணயக் குழுவின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து, ஜூன் 29-ஆம் தேதிக்குள் மனுவுக்கு பதில் அளிக்குமாறு கட்டண நிர்ணயக் குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024