சல்மான் கான் குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது குறித்து, அவருடன் பாதுகாப்புக் குச் சென்ற போலீஸ் கான்ஸ்டபிள் தான் போலீஸில் புகார் கொடுத் தார். பின்னர் போலீஸ் தரப்பில் இருந்தும், பலதரப்பில் இருந்தும் அவருக்குக் கடும் நெருக்கடிகள் வந்துள்ளன. ஆனால், கடைசி வரை தனது புகாரில் உறுதியாக இருந்த கான்ஸ்டபிள், காச நோயால் பரிதாபமாக இறந்துள்ளார்.
சல்மான் கான் உயிருக்கு, மும்பை நிழல் உலக தாதாக்களால் ஆபத்து இருப்பதாக கூறப் பட்டது. அதனால், அவருக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. கடந்த 1998-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ரவீந்திர பாட்டீலை, சல்மான் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பினர்.
சல்மான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பாட்டீல் அவருடன் காரில் சென்றுவந்தார். கடந்த 2002-ம் ஆண்டு ஒரு நாள் இரவு, அதிகமாக மது குடித்து விட்டு காரை தானே ஓட்டியுள்ளார் சல்மான்.
அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து வந்த பாட்டீல், சல்மானை எச்சரித்துள்ளார். காரை மெதுவாக ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். அதை அலட்சியப்படுத்திய சல்மான், காரை தாறுமாறாக ஓட்டி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினார். இந்த விபத்தில் பாட்டீலுக்கும் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு, சல்மான் கானுக்கு எதிராக கான்ஸ்டபிள் பாட்டீல்தான் புகார் கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் பல பிரச்சினைகளை, மிரட்டல்களை, நெருக்கடிகளைச் சந்தித்துள்ளார்.
கார் விபத்து குறித்த வழக்கை முதலில் மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் விசாரித்தபோது, எதைப் பற்றியும் கவலைப்படாத பாட்டீல், துணிச்சலாக நடந்த விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்தார். குடி மயக்கத்தில் இருந்ததால், காரை மெதுவாக ஓட்டும்படி சல்மானை எச்சரித்தேன். அதை அவர் கேட்கவில்லை என்று சாட்சியம் அளித்தார். இந்த வாக்குமூலத்தை மாற்றி சொல்லும்படி, பாட்டீலுக்கு பல தரப்பில் இருந்து நெருக்கடிகள் வந்துள்ளன.
நெருக்கடி முற்றியதால், பாட்டீல் திடீரென காணாமல் போனார். சல்மான் கானின் வழக்கறிஞர்களின் நெருக்கடி யைத் தாங்க முடியாமல் தலைமறை வானதாக அப்போது கூறப்பட்டது. அத்துடன் போலீஸ் துறையில் இருந்தவர்களே, சல்மான் மீது கூறப்பட்ட புகாரை மாற்றி சொல் லும்படி நிர்பந்தம் கொடுத்தனர் என்று புகார் எழுந்தது. அதன்பின், நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி கடந்த 2006-ம் ஆண்டு போலீஸார் பாட்டீலை கைது செய்தனர். அத்துடன் கான்ஸ்டபிள் பணியில் இருந்தும் அவரை நீக்கினர்.
அதன்பிறகு கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீவ்ரி பகுதியில் உள்ள ஒரு தெருவில் அநாதையாக பாட்டீல் கிடந்தார். அவரது நண்பர் ஒருவர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். காசநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டி ருந்தார் பாட்டீல். அதனால், அவரது குடும்பத்தினரும் அவரை அநாதையாக விரட்டி உள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 2007 அக்டோபர் மாதம் பரிதாபமாக பாட்டீல் இறந்து விட்டார்.
பாட்டீலை மருத்துவமனையில் சேர்த்தது அவரது நண்பர் சுஷாந்த் சாவந்த் என்பவர் தான். அவர் கூறும்போது, ‘‘பாட்டீல் எனக்கு சிறந்த நண்பர்.
இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்னர், பாட்டீல் என்னிடம் மனம் திறந்து பேசினார். ‘சல்மான் கான் மீது தான் கூறிய புகாரில் கடைசி வரை உறுதியாக இருந்தேன். ஆனால், என்னுடைய போலீஸ் துறையினரே எனக்கு ஆதரவாக இல்லை. எனக்கு மீண்டும் கான்ஸ்டபிள் வேலை வேண்டும். நான் வாழ வேண்டும். ஒரு முறை போலீஸ் கமிஷனரைச் சந்தித்துவிட வேண்டும்’ என்று கூறினார். ஆனால், பரிதாபமாக உயிரிழந்து விட்டார்’’ என்றார்.
இப்போது சல்மானுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு, இறந்தவர், படுகாயம் அடைந்த 4 பேருக்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, பரிதாபமாக உயிரிழந்த கான்ஸ்டபிளுக்கும்தான் என்கிறார் அவரது நண்பர்.
No comments:
Post a Comment