Monday, May 4, 2015

ஒரு நிஜ 'சுந்தரா டிராவல்ஸ்' பேருந்து!

மிழகத்தின் கிராம்ப்புறங்களில் அரசுப் பேருந்துகளின் நிலை எப்படி இருக்கிறது என்பதை பட்டவர்த்த னமாக படம்பிடித்துக் காட்டுகிறது தொப்பம்பட்டியிலிருந்து பழனி வரை செல்லும் 5 ம் நம்பர் பேருந்து. 

பழனி டிப்போவைச் சேர்ந்த அப்பேருந்து வெளிப்பார்வைக்கு சுமாராக இருந்தாலும், பேருந்தின் உட்புறம் அப்பட்டமாக 'சுந்தரா டிராவல்ஸ்' படத்தை நினைவுபடுத்துகிறது. வழக்கத்துக்கு மாறாக பேருந்தின் வலதுபுறத்தில் சில இருக்கைகள் நீக்கப்பட்டு பொருட்களை வைப்பதற்காக ஒரு அடுக்கு உருவாக்கப்பட் டிருந்தது. அந்த அடுக்கு வலுக்குறைந்த இரும்புக் கம்பிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நடத்துனரிடம் பேசியபோது, அப்பேருந்து தேனி, கம்பம் போன்ற ஊர்களில் முன்னர் ஓடியபோது காய்கறி கூடைகளை கொண்டு செல்வதற்கு வசதியாக அந்த அடுக்கு அமைக்கப்பட்டிருப்பதாக சொன்னார்.
ஆங்காங்கே ஒட்டடை,  பேருந்தின் தரையில் உள்ள ஓட்டை வழியாக சக்கரத்தின் தரிசனம், சில இடங் களில் உடையும் நிலையிலும் பல இடங்களில் உடைந்த நிலையிலும் கைப்பிடி, குப்புற கவிழ்ந்து கிடந்த சீட்டுகள் என பேருந்தின் எந்தப் பகுதியும் பயணிக்க தகுதியற்றதாக இருந்தது. 

பாழடைந்த பங்களாவை கேள்விபட்டிருப்போம். ஆனால் முதன்முறையாக ஒரு பாழடைந்த பேருந்தை அப்போதுதான் பார்த்தோம். 

கீழே விழாமல் இருக்க பயன்படும் கைப்பிடியே உடைந்து, ஏதோ ஒரு அபாயத்தை வரவேற்பது போல் இருந்தது. பேருந்தின் கீழ்தளம் மிகவும் பழுதடைந்து இருந்தது. முதல்முறை பார்க்கும்போது, கீழ்தளத்தில் அதிகமான எடைகொண்ட பொருட்களை வைத்தால் உடைந்துவிடும் என்பதற்காகத்தான் அடுக்கு போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்களோ என்று நினைத்தோம். ஆனால் அது அப்படி இல்லை என நடத்துநர் சொன்னபின்தான் தெரிய வந்தது.
அந்த அடுக்கு அமைப்பில் உள்ள கம்பிகளும் உடைந்திருந்து பின் வெல்டு வைக்கப்பட்டிருந்தது. அவ்வ மைப்பின் பின்புறத்தில் ஒரு கம்பியே இல்லை. பெரும்பாலான இருக்கைகளில் சில நட்டுகள் காணாமல் போயிருந்தது. அதனால் பேருந்து ஓடும்போது எல்லா இருக்கைகளும், அந்த அடுக்கு அமைப்பும் கிடுகிடு வென ஆடி, பெரிய சத்தத்தை ஏற்படுத்திய வண்ணமிருந்தது. மொத்தத்தில் அந்த பேருந்தில் ஒரு சிறிய விபத்து ஏற்பட்டாலே மிகப்பெரிய அளவில் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வண்ணமிருந்தது. 

இதுவரையிலும் அப்பேருந்தை எந்த விபத்தும் ஏற்படாமல் ஓட்டியதே ஓட்டுநரின் மிகப்பெரிய சாதனை யாக இருக்கும். இதுபோன்ற பேருந்துகளுக்கு எப்படி எப்.சி தருகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. நடத் துனர் சரவண ராஜபாண்டியன், ‘’நான் 25 வருடங்களாக நடத்துனராக இருக்கிறேன். பேருந்தில் பழுதுகள் இருந்தால் டிப்போவில் எழுதி வைப்போம். நான் தொடர்ந்து எழுதி வைத்திருக்கிறேன். எப்.சி காட்டும் போது எல்லா பழுதுகளையும் நீக்கி எப்.சி வாங்கிக் கொள்வோம்’’ என்றார்.
இது போன்ற பேருந்துகளை நகரங்களில் இயக்கினால் பயணிகள் அடுத்த நாளே புகார் செய்திருப்பார்கள். கிராம்ப்புறங்களில் மக்கள் எந்தவித கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்ற எண்ணமே இது போன்ற பேருந்துகள் கிராமப்புறங்களில் இயக்கப்பட காரணம். 

தமிழக பேருந்துகளின் நிலை இப்படி இருக்க, ஆட்சியாளர்கள் சம்பிரதாயமாக வருடம் ஒரு முறை ஏதாவது ஒரு பேருந்தில் ஏறி, மக்களிடம் வசதிநிலவரம் கேட்பதுபோல் சில நிமிடங்கள் பேசிவிட்டு புகைப்படங்கள் எடுத்தவுடன் இறங்கி சென்றவிடுகிறார்கள்.
பயணம் செய்ய தகுதியற்ற இம்மாதிரி பேருந்துகளில் அவர்கள் ஏறி இறங்குவார்களா என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கை.
மக்களின் உயிர்களைக் கொண்டு அரசு விஷப்பரீட்சை நடத்துவதை யாராலும் ஏற்க முடியாது.

- பா.குமரேசன்

 படங்கள்: த.ஶ்ரீனிவாசன்
( மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024