Friday, August 21, 2015

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 1


‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 1


Author: - பா. தீனதயாளன்

First Published: Aug 20, 2015 10:00 AM
Last Updated: Aug 20, 2015 11:13 AM

விழுப்புரம் சின்னையா கணேசனின் நடிப்பாற்றல் இந்திய எல்லைகளையும் கடந்து எகிப்தில் எதிரொலித்தது.


வீரபாண்டிய கட்டபொம்மன் படம், 1959-ம் ஆண்டு பி. ஆர். பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன் எனப் பலரும் நடித்து வெளிவந்து பெரும் வெற்றிபெற்றது. இந்தத் திரைப்படத்துக்காக சிவாஜிகணேசன் ஆப்ஃரோ ஆசியன் படவிழாவில் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். இதன்மூலம் சர்வதேச திரைப்படவிழாவில் விருது வாங்கிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றார்.

தற்போது, வீரபாண்டிய கட்டபொம்மன் படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் வருகிற 21-ம் தேதி வெளிவரவுள்ளது. அதை முன்னிட்டு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம் திரையில் உருவான வரலாறு பற்றி எழுத்தாளர் பா. தீனதயாளன் இங்கே விவரிக்கிறார்.

***

விழுப்புரம் சின்னையா கணேசனின் நடிப்பாற்றல் இந்திய எல்லைகளையும் கடந்து எகிப்தில் எதிரொலித்தது.

கட்டபொம்முவின் சுதந்தர தாகம், விடுதலை உணர்வை மட்டுமல்லாது, ஆசியாவிலேயே மிகச்சிறந்த நடிகர் என்கிற கவுரவத்தை வி.சி. கணேசன் பெறவும் விதை ஊன்றியது.

அதோடு நின்றதா. அவருக்கு மத்திய சர்க்காரின் பத்மஸ்ரீ, பத்மபூஷண், தமிழ்த்திரை உலகில் முதல் தாதா சாஹிப் பால்கே விருது, பிரெஞ்சு அரசின் மிக உயரிய செவாலியே போன்ற பரிசுகளையும் பெற்றுத் தந்தது.

தென்னக பயாஸ்கோப் வரலாற்றில், எண்ணற்ற விதங்களில், வெற்றிகரமாகப் பிள்ளையார் சுழி போட்டவை நடிகர் திலகத்தின் படங்கள். அவற்றில் மிக முக்கியமானது, தமிழகத்தின் முதல் சரித்திரப் படைப்பான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

அதுமட்டுமல்ல, மூவேந்தர்களில் (எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன்) இரண்டு கணேசன்களுக்கும் அதுவே முதல் வண்ணச்சித்திரம்! தமிழில் இரண்டாவது கலர் ஃபிலிம். லண்டனில் வண்ணப் பிரதி எடுக்கப்பட்ட முதல் தென்னிந்திய சினிமா. ஜெய்ப்பூரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் டாக்கி. ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா...’ என்று ஜெமினி கணேசனுக்கு, பி.பி.ஸ்ரீனிவாஸ் முதன்முதலில் பின்னணி பாடியதும் கட்டபொம்மனில் ஒலித்தது.

ராஜராஜ சோழன் போன்றோ, அவரது மகன் ராஜேந்திர சோழன் மாதிரியோ, வாழும்போதே வரலாறாகி, உலகப் புகழ் பெற்றத் தமிழ்ச் சக்கரவர்த்தி அல்ல கட்டபொம்மு. கம்பள நாயக்கர்களின் பரம்பரையில் வந்தவர். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்.

விடுதலைப் போரில், தமிழ் மண்ணிலிருந்து ஓங்கி ஒலித்த முதல் முழக்கம் கட்டபொம்முவுடையது. குறு நில மன்னர் என்றுகூடச் சொல்ல முடியாது. வெள்ளையனுக்குக் கப்பம் கட்டாமல், பாஞ்சாலங்குறிச்சியைத் தன்னிச்சையாக ஆள நினைத்த மிகச் சிறிய பாளையக்காரர்.

மொழி பேதமற்ற சென்னை ராஜதானியில், வீதிதோறும் நடைபெற்றது கட்டபொம்மு தெருக்கூத்து. திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் அதைப் பார்த்த ஒரு சிறுவன், மெய்சிலிர்த்து சில நொடிகளில் அரிதாரம் பூசும் ஆர்வம் கொண்டான்.

‘பிஞ்சு மூளை - அதில் எழுந்த அந்த எண்ணம், அப்படியே என்னை அடிமையாக்கிக் கொண்டது. வெறிபிடித்த குரங்குக்கு ஒரு புண்ணும் உண்டாகிவிட்டால் என்ன கதியாகுமோ, அதேபோல் நான் பார்த்த கட்டபொம்மன் தெருக்கூத்து, என்னை கலைத் தொழிலுக்கே இழுத்து வந்துவிட்டது’ - சிவாஜி கணேசன்.



கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன், கட்டபொம்மு குறித்து, அவதூறாகப் பல கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ரா.வே.யின் உதவியோடு டி.கே.எஸ். சகோதரர்கள் ‘முதல் முழக்கம்!’ என்ற பெயரில் கட்டபொம்முவின் கதையை நாடகமாக நடத்தினர். மிகக் குறுகிய காலம், சில ஊர்களில் மட்டும் முதல் முழக்கம் கேட்டது.

எஸ்.எஸ்.வாசன், ஆனந்தவிகடனில் கட்டபொம்மன் வாழ்க்கைத் தொடரை எழுதி வந்தார். ஜெமினியில் கட்டபொம்மனை சினிமாவாகத் தயாரிக்க ஆலோசனைகள் நடந்தன. அத்தகைய சூழ்நிலையில், சிவாஜி நாடக மன்றம் உதயமானது. அவர்களது முதல் படைப்பு, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.

‘கோவில்பட்டியில் நாடகம் ஒன்றை நடத்திவிட்டு, நானும் எனது ஆசான் சக்தி கிருஷ்ணசாமியும், கட்டபொம்மன் தூக்கில் தொங்கிய கயத்தாறு வழியாக திருநெல்வேலிக்கு காரில் போய்க்கொண்டிருந்தோம்.

ஆசானிடம் எனது வெகு நாளைய ஆசையைக் கூறி, கட்டபொம்மன் சரித்திரத்தை ஒரு சிறந்த நாடகமாக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் வெளிப்படுத்தினேன். ஒரு மாதத்தில் அவர் எழுதி முடித்ததும் உற்சாகமாக வாசித்தேன்.

நாடக அமைப்பு புதுமையாகவும், எழுத்து தரமாகவும் இருந்தது. எனது நீண்டகாலத் துடிப்புக்கு இரட்டிப்பு ஊக்கம் ஏற்பட்டது. நாடகம் உருவாக ஐம்பதாயிரம் செலவானது’ - நடிகர் திலகம்.

ம.பொ.சி.க்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படைப்பாக்கத்தில் மிக உன்னதப் பங்கு உண்டு. கட்டபொம்மன் நாடக அரங்கேற்றம், தமிழ் அறிஞர் மு.வரதராசனார் தலைமையில், 1957-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ம் தேதி, புதன்கிழமை, சேலம் பொருட்காட்சியில் நடைபெற்றது.

எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து, 1961 வரையில் நூறு முறைகளுக்கு மேல் நடைபெற்றது. அதன் மொத்த வசூல், கிட்டத்தட்ட 32 லட்சங்கள். அந்தத் தொகை, தமிழ்நாட்டின் கல்விப் பணிக்காக, ஏராளமான ஆரம்பப் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் நடிகர் திலகத்தால் நன்கொடையாக வழங்கப்பட்டது.

மூவேந்தர்களில் முதல் மரியாதைக்குரிய நடிப்புச் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன், சுமார் இரண்டு டஜன் சினிமாக்களில், பல்வேறு புத்தம் புது மாறுபட்ட வேடங்களை இரவு பகலாக ஏற்று நடித்த நேரம் அது. தொடர்ந்து, கட்டபொம்மனாகவும் மேடையில் முரசு கொட்டித் தன்னை மிகவும் வருத்திக்கொண்டார்.

‘கட்டபொம்மன் நாடக வெறியினால் என் உடல் நிலையைக்கூடச் சரியாகக் கவனிக்காமல் நடித்து வந்தேன். வசனம் பேசிக்கொண்டிருக்கும்போதே சில சமயம் வாயில் இருந்து ரத்தம் குபுக் குபுக்கென வந்துகொண்டே இருக்கும். அதையும் பொருட்படுத்தாமல் நடித்துக்கொண்டே இருப்பேன். மூக்கிலும் வாயிலும் ரத்தம் கொட்டுவதைக் கண்டு, ஜனங்கள் ஐயோ ஐயோ என்று பதறுவார்கள்.

‘கட்டபொம்மனாக என்னுள் இருந்து வரும் சத்தமானது, அடி வயிற்றிலிருந்து வருகிறதா? இல்லை இதயத்திலிருந்து வருகிறதா என்று எனக்கே தெரியாது. சில சமயம், நாடகம் முடிந்தவுடன்கூட ரத்தம் கக்குவேன்’

நாடகத்துக்கு ஆனந்த விகடன் அளித்த விமரிசனம்:

‘வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்துக்கு சிவாஜி கணேசன் ஒருவரே பொருத்தமானவர் என நினைக்கும்படியாக அமைந்துவிட்டது அவர் நடையும், பேச்சும், எடுப்பான தோற்றமும். அவர் வாயால் ‘வீரவேல்! வெற்றிவேல்!’ என்று முழக்கம் செய்யும்போது, நாடகத்தைப் பார்க்கும் அத்தனை தமிழ் மக்களும் வீராவேசம் கொள்கின்றனர். நாடகம் முழுவதும் சிவாஜி கணேசனின் நடிப்பே உயிராக விளங்குகிறது.

கட்டபொம்முவுக்கு சிலை எங்கே, சிலை எங்கே என்று எல்லோரும் கேட்கும் இந்நாளில், சிலையை ஓரிடத்தில்தான் நாட்டலாம்; இதோ நான் கட்டபொம்மனை எல்லோருடைய சிந்தையிலும் நாட்டுகிறேன் என சிவாஜி கணேசன் எழுந்து விட்டார். ’

நடிகர் திலகத்தையும் கட்டபொம்மனையும் ஒரு சேர விண்ணில் உயர்த்தியது, ஆனந்த விகடன் விமரிசனம்.

*

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள பூதுகூரு என்கிற சிற்றூரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணய்யா பந்துலு. சுருக்கமாக பி.ஆர்.பந்துலு. சென்னை, தம்பு செட்டித் தெருவில் ஆர்ய பாடசாலாவில் பயின்றவர்.

அங்கு, மகாகவி பாரதியாரை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது பந்துலுவுக்கு. பின்னாளில், தேசபக்தியூட்டும் சினிமாக்களை எடுக்க அவை தூண்டின. பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றியவர். நாடக ஆசை துரத்த, பிரம்பையும் சாக்பீஸையும் தூர வீசிவிட்டு, ஒப்பனை உலகுக்குள் நுழைந்தார்.

சென்னை சவுந்தர்ய மஹால். ‘சம்சார நவுகா’ நாடகம். அதில், தினந்தோறும் பி.ஆர்.பந்துலுவின் நடிப்பைப் பார்த்து பித்துப் பிடித்து நின்றார் ஓர் இளைஞர். அவரது மனசெல்லாம் மேடையிலேயே லயித்தது. சம்சார நவுகாவுக்கு நிரந்தர ரசிகராக மாறினார். அந்த இளைஞர், வி.சி.கணேசன்!

திண்டுக்கல்லில் சக்தி கிருஷ்ணசாமியின் ‘தோழன்’ நாடகம். டி.ஆர்.மகாலிங்கத்துக்கு அப்போது மவுசு அதிகம். அவர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டால், வசூல் குவியும் என்கிற சூழல். அவரை நாடகம் பார்க்க அழைத்தார் சக்தி கிருஷ்ணசாமி. மகாலிங்கம் மறுத்துவிட்டார்.

டி.ஆர்.மகாலிங்கத்தின் நாடகப் பொறுப்பாளர் மற்றும் காரியதரிசியாக இருந்தவர் பி.ஆர்.பந்துலு. பந்துலுவை அன்போடு அண்ணா என்பார் அம்பி என்கிற மகாலிங்கம். பந்துலு கிழித்த கோட்டைத் தாண்டாதவர். பந்துலு அவரை அரும்பாடுபட்டு வற்புறுத்தி, திண்டுக்கல்லுக்கு அழைத்துச் சென்றார்.

தோழனில் நடித்த வி.சி.கணேசனின் நடிப்பு, நடை, வசன உச்சரிப்பின் பேராற்றலைக் கண்டு மெய் மறந்தார்கள் இருவரும். பந்துலு எடுத்துக்கொடுக்க, வி.சி.கணேசனின் திறமையை மகாலிங்கம் மெச்சிப் பேசினார்.

சம்சார நவுகா கன்னடத்தில் படமானபோது, மிகச் சுலபமாக சினிமாவுக்குள் முத்திரை பதித்தார் பந்துலு. நீண்டகால அவஸ்தைகளுக்குப் பின், ‘பராசக்தி’யில் எடுத்த எடுப்பிலேயே கணேசனும் உச்சிக்குச் சென்றார். இருவரும் சினிமாவில் புகழ் பெற்றதும், தமிழில் கணேசனுக்காகவே பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் உருவானது. அங்கு உருவான பல படங்களின் கன்னட மூலங்களில் பந்துலு நாயகன். கணேசன், பந்துலுவை பி.ஆர்.பி. என்பார். பந்துலு, சிவாஜியை பிரதர் என்று அழைப்பார்.

‘தோழன் நாடகத்தில் கணேசனின் நடிப்பைப் பார்த்தது முதல், அவரையே என் சொந்தப் பட ஹீரோவாக தொடர்ந்து நடிக்கவைக்க முடிவு செய்துவிட்டேன். பத்மினி பிக்சர்ஸின் முதல் படைப்பு, ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’. ராகினிக்கும் அதுவே முதல் படம்.

ஏவி.எம்.மின் ‘வாழ்க்கை’யால் டி.ஆர்.ராமச்சந்திரனுக்குப் பெரும் புகழ் இருந்ததால், சிவாஜியைவிட அவருக்கு அதிகச் சம்பளம் கொடுத்தேன்.

நான் எவ்வளவு கொடுத்தாலும் கணேசன் திருப்தியாக ஏற்றுக்கொள்வார். இவ்வளவு தந்தாக வேண்டும் என அவர் என்னிடம் ஒருபோது கண்டித்துக் கேட்டதே கிடையாது.

‘தங்கமலை ரகசியம்’ படத்தின் பாதியிலேயே ப.நீலகண்டன் விலக, வேறு வழியின்றி அதில் நான் ஏராளமான பயத்தோடு முக்கால் பங்கு சினிமா டைரக்டர் ஆனேன்’ - பி.ஆர்.பந்துலு.

தோழன் நாடகம் ஏற்படுத்திய வலுவான அன்பு அஸ்திவாரத்தின் நல்விளைவே, செலுலாய்டில் கட்டபொம்மன் பதியக் காரணம்.

அநேக பிரம்மாண்டங்களுடன் வீரபாண்டிய கட்டபொம்மனை, பந்துலு படமாக்க வேண்டும் என்பது சிவாஜி கணேசனின் தீராத ஏக்கம். ராஜா அண்ணாமலை மன்றத்தில் கட்டபொம்மன் நாடகம் பார்க்க, பந்துலுவை சிறப்பு விருந்தினராக சிவாஜி அழைத்தார். தன் துணைவன் சிங்கமுத்துவோடு கட்டபொம்மனைப் பார்த்து மிரண்டார் பந்துலு.



நிஜ கட்டபொம்மனாகவே நடிகர் திலகம் கூடு விட்டு கூடு பாய்ந்திருந்ததைக் கண்டு, பரவசத்தின் உச்சிக்குச் சென்றார் பந்துலு.

மறுநாளே,


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அளிக்கும்

பத்மினி பிக்சர்ஸ்

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’

கேவா கலர்




என்கிற முழுப்பக்க விளம்பரம் தினசரிகளில் வெளியானது. தமிழ்த் திரை உலகம் பரபரப்பில் வாயைப் பிளந்தது.

***

உடனடியாக, 1957 நவம்பர் 10-ம் தேதி, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ துவக்க விழா!

வெள்ளையனை விரட்டி அடித்ததிலும், தமிழக அரசியலிலும், திரைப்படத் தயாரிப்பிலும், பதிப்பகத் துறையிலும் பிரபலமானவர் சின்ன அண்ணாமலை. பி.ஆர்.பந்துலுவையும் ம.பொ.சி.யையும் தோழமை கொள்ளவைத்த பெருமை அவருக்கே உண்டு.

‘இந்தப் படம் உருவாக என்னைத் தூண்டியவர் நீங்கள்! இப்போது உங்கள் கரங்களால் குத்து விளக்கேற்ற வேண்டும். வாருங்கள்’ என்று சின்ன அண்ணாமலைக்கு பூரிப்போடு மாலை அணிவித்து வரவேற்றார் பந்துலு.

ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மிக்க பெருந்தன்மையோடு பந்துலுவை பாராட்டிப் பேசினார். ‘நான் எண்ணிக்கொண்டிருக்கிறேன்; அவர் எடுத்துக்கொண்டிருக்கிறார்’.

கோல்டன் ஸ்டுடியோவில், ‘வெற்றி வடிவேலனே...’ என்ற பாடல் காட்சி முதன்முதலாகப் படமாக்கப்பட்டது.

பந்துலுவின் பத்மினி பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஏ டூ இஸட் - சிங்கமுத்து. இயக்கத்தில், பந்துலுவின் முதல் சகா. சிங்கமுத்துவைக் கலந்து பேசாமல், பந்துலு கணப்பொழுதும் பணியாற்றியது கிடையாது.

எம்.ஜி.ஆரே ஆச்சரியப்படும் அளவுக்கு அவர்களது தொழில் நெருக்கம் இருந்தது. தன்னிடம் வந்துவிடுமாறு எம்.ஜி.ஆர். அழைத்தும், பந்துலுவின் மீது கொண்ட மாறாத பாசத்தின் காரணமாக, பந்துலுவின் நிழலாகக் கடைசி நொடி வரை வாழ்ந்தவர் சிங்கமுத்து. பந்துலுவின் ஒவ்வொரு நகர்விலும் சிங்கமுத்துவின் தீர்மானமும், வியர்வையும், கடின உழைப்பும் உயிராகக் கலந்திருக்கும்.

கட்டபொம்மன் குறித்த சிங்கமுத்துவின் பரவசமூட்டும் அனுபவங்கள் -

‘கட்டபொம்மனில் முதல் வசனக் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஏ.கருணாநிதி, ‘வெள்ளைக்காரர்களிடம் எட்டப்பன் நம்மைக் காட்டிக்கொடுக்கிறான்’ என்பது மாதிரியாக டயலாக் சொல்வார்.

அதற்கு சிவாஜி, ‘அமுதமும் விஷமும் ஒரே இடத்தில்தான் விளைகிறது. கட்டபொம்மனும் எட்டப்பனும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள்’ என்று வசனம் பேசிவிட்டு, போர்... போர்... என முழக்கமிடுவார்.

நடிகர் திலகத்தை ‘கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’, ‘முதல் தேதி’, ‘சபாஷ் மீனா’, ’தங்கமலை ரகசியம்’ போன்று பல படங்களில் பார்த்துக் கூடவே இருந்து பழகியவன் நான். அதுவரையில் நான் பார்த்த சிவாஜி வேறு.

கணேசன் உணர்ச்சிகரமாக வசனம் பேசி போர் முழக்கமிட்டபோது நான் ஆடிப்போய்விட்டேன். ஏ.கருணாநிதி, பிரளயம் வந்ததுபோல் உணர்ந்தார். செட்டில் பரிபூரண அமைதி. நிஜமாகவே போர் முரசு கொட்டி, கோல்டன் ஸ்டுடியோவுக்குள்ளேயே சண்டை துவங்கிவிட்டது போன்ற பிரமை.

அப்படிக்கூட ஒரு மனிதரால் நடிக்கமுடியுமா...!’

*

பரணி ஸ்டுடியோவில் கட்டபொம்மனின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவாஜி தூக்கிலிடப்படும் காட்சி. அப்போதும் கம்பீரமாக கணேசன் நடந்துவந்ததைக் கண்டு, துணை நடிகர்கள் வாய் விட்டு அழுதார்கள்.

தமிழின் முதல் கலர் படமான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் பணியாற்றிய கேமராமேன் சுப்பாராவ். பந்துலுவின் பால்ய நண்பர். தோழமையோடு, அவரையே கட்டபொம்மனுக்கும் அழைத்துவந்தார் பந்துலு.

பந்துலு எப்போதும் தன்னுடைய படத்தின் ரிலீஸ் தேதியை முன்னமே அறிவித்துவிடுவார். கட்டபொம்மனுக்கும் அப்படியே நடந்தது. ஆனால், இந்தியாவில் கலர் ஃபிலிம் ஸ்டாக் இல்லை என்றார்கள். பந்துலு உடனே தனது பங்குதாரரான சித்ரா கிருஷ்ணசாமியை லண்டனுக்கு அனுப்பி, கட்டபொம்மனுக்கு பிரிண்ட் போட்டு, சொன்ன தேதியில் படத்தை வெளியிட்டார்.

‘முழு நீள கேவா கலரில் தயாரித்து, டெக்னிக் கலராக ஆக்கப்பட்டிருக்கிறது’ என்ற வாசகத்தை, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பட ரிலீஸ் விளம்பரங்களில் காணலாம்.

மேக் அப் ரூமிலேயே முழு கேரக்டராக வெளிப்பட்டு, செட்டுக்கு போகும் உன்னதமான கலைஞன், சிவாஜி. சிவாஜியோடு இதிகாச, வரலாற்றுப் படங்களின் சகாப்தம் முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம்.

பி.ஆர்.பந்துலு, நேருக்கு நேர் நின்று பார்த்து மெய் சிலிர்த்த அனுபவம் இதோ -

கட்டபொம்மு குதிரை மீது ஏறி, வெள்ளையர்களை எதிர்த்து சமர் புரியும் தன் வீரர்களுக்கு உற்சாகமளித்து, உடன் போரிடும் காட்சியைப் படமாக்கிக்கொண்டிருந்தோம்.

ஒரு வெள்ளைக் குதிரை மீது நடிகர் திலகம் உட்கார்ந்திருந்தார். காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக, உண்மையிலேயே சில வெடிகளை வெடிக்கச் செய்ய இருந்தோம். எனவே, ‘சண்டை நடக்கும் மையமான இடத்துக்குப் போய்விடாதீர்கள். ரொம்ப ஆபத்து அது’ என்று அவரிடம் கூறினோம்.

என்ன காரணமோ தெரியவில்லை. சிவாஜி ஏறிவந்த குதிரை, நிஜமாகவே நாலு கால் பாய்ச்சலில் ஓட ஆரம்பித்தது. அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தார் கணேசன். அந்தச் சமயத்தில், துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதும்தான் தாமதம், குதிரை தலை கால் புரியாமல், நாங்கள் எங்கு போக வேண்டாம் என்று எச்சரித்திருந்தோமோ அங்கேயே சிவாஜியைக் கொண்டு நிறுத்திவிட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவாஜி சிக்கிக்கொண்டாரே என்று என் மனம் பட்ட வேதனையைச் சொல்லி முடியாது. எங்களால் அவரைப் பார்க்க முடியவில்லை. குதிரையிலிருந்து அவர் உருண்டு விழுந்துவிட்டார் என்றே நினைத்தோம். நானும் மற்றவர்களும் கணேசன் இருந்த இடத்தை நோக்கி ஓடினோம்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கை கால்கள் எல்லாம் ரத்தம் வழிய வழிய, ‘ஷாட் நன்றாக வந்ததா’ என்று கேட்டார் நடிகர் திலகம்.

‘இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் காட்சி; என் ஒருவனால் ஷாட் வீணாகக்கூடாது; மறுபடியும் எடுப்பதென்றால் எவ்வளவு சிரமம்?’ என்றார்.’

கோட்டைகளும் மிகப்பெரிய மாளிகைகளும் நிறைந்த ஜெய்ப்பூரில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ ஷூட்டிங் நடந்தது. ஹோட்டலாக மாறிவிட்ட ஜெய்ப்பூர் சமஸ்தான ‘ராம்வாக்’ மாளிகையில், பொதுமக்களுக்குக் கட்டபொம்மன் பேட்டி அளிப்பதையும், ஜாக்ஸன் துரையைப் பார்க்கக் கிளம்புவதையும் படமாக்கினார்கள்.

கட்டபொம்மன் படத்துக்கு லண்டன் - பிரெஞ்சு இன்ஸ்டிடியூட்டில் விசேஷக் காட்சி நடைபெற்றது. அதில் அப்போதைய இந்தியத் தூதர் விஜயலட்சுமி பண்டிட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

*

ஆனந்த விகடன் (மே 24, 1959) தனது விமரிசனத்தில், கட்டபொம்மனுக்கு வரலாறு காணாத பாராட்டை வாரி வழங்கியது. கத்திரி வெப்பத்தைத் தணிக்கும் பன்னீர்த் தெளிப்பு அதன் ஒவ்வொரு பத்தியிலும்.

‘மாணிக்கம் - என்னிக்கி கட்டபொம்மன் படமாக வரும் என்று காத்திருந்தேன் அண்ணே. முதல் முழக்கம் செய்த தமிழ் மகனுடைய படம். தமிழிலே முதல் சரித்திரப் படம். முதல் காட்சியிலேயே அதை நான் பார்க்காம இருப்பேனா? அதிலும் சிவாஜி நடிப்பு இருக்கே...

முனுசாமி - ஒண்ணும் சொல்லாதே தம்பி!

மாணிக்கம் - ஏன் அண்ணே?

முனுசாமி - அவர் நடிப்பைப் பற்றி இனி யாரும் புகழ வேண்டிய அவசியம் கிடையாது. அவரே ஒரு தனிப்பிறவி தம்பி.

மாணிக்கம் - அண்ணே, இந்தப் படத்தில் இரண்டு மூணு இடங்களைப் பத்தி சொல்லாம இருக்க முடியாது! உள்ளத்தை உருக்குது. கண்ணீரைப் பெருக்குது. வீர உணர்ச்சி பொங்கி ஆவேசம் வருது. கட்டபொம்மன் பிறந்த நாட்டிலே நாமும் பிறந்திருக்கிறோம்னு பெருமை உண்டாகுது.

கட்டபொம்மன் பார்த்தவர்கள் நெஞ்சை விட்டு நீங்காத படம். சிவாஜி கணேசன் அப்படி நடிச்சிருக்காரு. இது தமிழனுக்கே பெருமை தரும் படம்.’

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024