Tuesday, August 18, 2015

கண்டசாலா” என்றழைக்கப்படும் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ்



வந்தாரை வாழ வைக்கும் நம் தமிழகம் திறமை பெற்றவர்கள் எங்கிருந்தாலும், எந்தத்துறையில் இருந்தாலும் தேடிப்பிடித்து அவர்களைப் புகழேணியின் உச்சிக்குக் கொண்டு செல்வார்கள் என்பதற்கு சரியான ஓர் எடுத்துக்காட்டு “கண்டசாலா” என்றழைக்கப்படும் கண்டசாலா வெங்கடேஸ்வரராவ் ஆகும்.

நம் தமிழ் மாநிலத்தின் அண்டை மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தின் திரைப்படப் பின்னணி வரலாற்றில் கொடிகட்டிப் பறந்த கண்டசாலா அவர்கள் 1973 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப்படங்களில் பின்னணி பாடி ரசிகப்பெருமக்களை வெகுவாக ஈர்த்திருக்கிறார்.
ஆந்திரா மாநிலத்திலுள்ள குடிவாடா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சௌட்டா பள்ளி என்ற சிற்றூரில் வறுமை மிக்க பிராமணக் குடும்பம் ஒன்றில் 04.12.1922 அன்று பிறந்தார்.

சிறு வயதிலேயே தமது தந்தை சூரய்யா அவர்களை இழந்த கண்டசாலாவுக்கு அவரது தாய்மாமா ரய்யாளி பிச்சி ராமய்யாவின் ஆதரவு கிடைத்தது. தந்தை உயிருடன் இருக்கும் போதே “தரங்கங்கள்“ என்று சொல்லக்கூடிய ஒரு வகை இசையமைப்பில் நடனம் ஆடியும் ஹரிகதா காலட்சேபங்களில் அவருடன் பங்கேற்றும், இருக்கிறார். பிற்காலத்தில் தான் ஒரு இசைக் கலைஞனாக ஆகியே தீர வேண்டும் என்ற வெறி இவரின் ஆழ் மனத்தில் பதிந்து விட்டிருந்தபடியால் யாருக்கும் தெரியாமல் பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றுக் கொண்டது போக, மேலும் தடங்கல்கள் பலவற்றைக் கடந்து விஜயநகரம் சென்று இசைக்கலையில் தேர்ந்து “சங்கீத வித்வான்“ பட்டத்தைப் பெற்றார்.

1942-ல் “வெள்ளையனே வெளியேறு“ (Q U IT IN D IA M O V E M E N T) என்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கண்டசாலா அவர்கள் ஈடுபட்டு 18 மாதகாலம் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். சிறையிலிருந்து வெளியேறிய பின் சீனியர் சமுத்ராலா ராகவாச்சார்யாவின் நட்பு கிடைத்ததால் திரைப்படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பைப் பெற எண்ணினார். புகழ்பெற்ற இசைத்தட்டு நிறுவனமாகிய ஹெச்.எம்.வி. (H.. M .V ) முதலில் இவரை நிராகரித்து விட்டது. ஆனாலும் இவர் மனம் கோணாமல் அகில இந்திய வானொலியில் பாடும் வாய்ப்பைப் பெற்றார். பிறகு அதே ஹெச்.எம்.வி. நிறுவனம், பெக்கட்டி சிவராம் அவர்களைக் கொண்டு கண்டசாலாவுக்குத் தனிப் பாடல்கள் பாடும் வாய்ப்பை பெற்றார்.

பிரதீபா பிலிம்ஸ் என்ற திரைப்பட நிறுவனத்தில் சேர்ந்து சீதாராம ஜனனம் படத்தில் "கோரஸ்" குழுவில் பாடியது மட்டுமின்றி அப்படத்தில் ஒரு சிறு பாத்திரம் ஏற்று நடித்தார். (பிரபல கதாநாயகன் ஏ, நாகேஸ்வரராவ் நடித்த படம்) இவர் தனியாகப் பின்னணி பாடிய முதல் பாடல் “சொர்க்க சீமா“ வாகும். இப்படத்திற்கு சித்தூர் வி. நாகய்யா இசையமைத்திருந்தார். நாகய்யா அவர்கள் ஒரு தலைசிறந்த பன்முகம் கொண்ட குணச்சித்திர நடிகரும் கூட.
கண்டசாலா அவர்கள் சுமார் நூறு படங்களுக்கும் மேலாக இசையமைத்திருக்கிறார். தெலுங்கு திரைப்பட கதாநாயகர்கள் எல்லோருக்கும் பின்னணி பாடிய பெருமையை பெற்றவர் இவர் ஒருவரே. தனிப்பாடல்கள் பாடியதில் புகழ்பெற்ற இவர் தெய்வபக்தி மிகுந்த பாடல்களையும் பாடி மேலும் புகழ் அடைந்திருக்கிறார். கண்டசாலாவை போற்றும் வகையில் அவர் அமெரிக்கா சென்ற சமயம் தங்கத்தினாலான இசைத்தட்டு (G o ld e n D isc) ஒன்று அவருக்குப் பரிசாக வழங்கப்பட்டதை அமெரிக்காவில் உள்ள கோயில் ஒன்றிற்கு தானமாக வழங்கிவிட்டார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து அங்கு இன்னிசை நிகழ்ச்சிகள் நடத்தியது மட்டுமின்றி ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் அரிய வாய்ப்பினையும் கண்டசாலா பெற்றிருக்கிறார்.
கண்டசாலா அவர்கள் 25 ஆண்டுகாலம் திரைஇசை உலகத்திற்கு சேவை செய்த்தற்காக ஆந்திர மாநிலம் இவரை கௌரவித்திருக்கிறது. 1974-ல் கண்டசாலா அவர்கள் தான் இறப்பதற்கு முன் பாடிய “பகவத்கீதை” இவரை அழியாப்புகழுக்கு உயர்த்திச் சென்றுள்ளது எனலாம். இதுவே அவர் ரசிகப் பெருமக்களுக்கு அளித்த இசைப் பொக்கிஷம் என்றும் கூறலாம்.

இந்திய அரசு கண்டசாலா அவர்களை கௌரவிக்கும் வகையில் மத்திய அரசின் உயரிய விருதான “பத்மஸ்ரீ“ பட்டத்தை அளித்துள்ளது. திருப்பதி - திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கண்டசாலா அவர்கள் கௌரவிக்கப்பட்டார். தெலுங்குத் திரைப்பட இசை உலகில் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த இவர் இந்திப் பட உலகில் பிரசித்தி பெற்ற பாடகர் முகம்மது ரஃபி யோடு ஒப்பிடப்பட்டவர். கனத்த சாரீரம் உடையவராயிருந்தும், தன் கவர்ச்சிக் குரலால் யாவரையும் கவர்ந்தவராகக் கருதப்பட்டார். தெலுங்கு திரைப்படக் கதாநாயகனாகப் புகழ் பெற்ற ஏ. நாகேஸ்வரராவ் அவர்கள் நடித்த தேவதாஸ் படத்தின் பாடல்கள் (தெலுங்கிலும், தமிழிலும்) இவரால் பாடப்பட்டு இன்று வரை மக்களால் சாகாவரம் பெற்று கேட்கப்பட்டு வருகின்றது. அவர் பாடிய சில சிரஞ்சீவித்துவம் பெற்ற பாடல்களில் சிலவற்றை கீழே காணலாம்.

1. அமைதியில்லாதென் மனமே பாதாளபைரவி
2. சந்தோஷம் தரும் சவாரி போவோம் தேவதாஸ்
3. துணிந்தபின் மனமே துயரங் கொள்ளாதே தேவதாஸ்
4. கனவிதுதான் நிஜமிதுதான் தேவதாஸ்
5. உறவுமில்லை பகையுமில்லை தேவதாஸ்
6. உலகே மாயம் வாழ்வே மாயம் தேவதாஸ்
7. ஆஹா இன்பநிலாவினிலே மாயாபஜார்
8. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா மஞ்சள் மகிமை
9. சுயநலம் பெரிதா பொது நலம் பெரிதா பொது நலம் பெரிதா யார் பையன்?
10. உல்லாச உலகம் உனக்கே சொந்தம் அலிபாபவும்40 திருடர்களும்.
11. ஓ! தேவதாஸ் ஓ! பார்வதி தேவதாஸ் (டூயட் பாட்டு)
12. குண்டு போட்ட ரிவால்வார் படார் மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே (சோலோ)
13. தேசுலாவதே தேன் மலராலே மணாளனே மங்கையின் பாக்கியம் டூயட் பாட்டு
14. முத்துக்கு முத்தாக அன்புச் சகோதரர்கள் (சோலோ)
15. என்ன தான் உன் பிரேமையோ பாதாள பைரவி (டூயட் பாட்டு)
16. காதலே தெய்வீகக் காதலே பாதாள பைரவி (டூயட் பாட்டு)
17. ஓஹோ வெண்ணிலாவே பிரேமபாசம் (டூயட் பாட்டு)
18. வான் மீதிலே இன்பத்தேன் வந்து பாயுதே சண்டி ராணி(டூயட் பாட்டு)
19. மதன மனோகர….. ராஜசேகரா மோடி செய்யலாகுமா அனார்கலி (டூயட் பாட்டு)
20. கனிந்த….காதல்யுவ அனார்கலி அனார்கலி
21. நீதானா என்னை அழைத்தது மாயாபஜார் (டூயட் பாட்டு)
22. ஆஹா இன்பநிலாவினிலே மாயாபஜார் (டூயட் பாட்டு)

பிரபல (பன்மொழி) திரைப்படத் தயாரிப்பாளர்களான பி. நாகிரெட்டி, சக்ரபாணி ஆகியோர் தயாரித்து கே.வி. ரெட்டி இயக்கிய பாதாள பைரவி என்ற திரைப்படம் இவரைப் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. கண்டசாலா அவர்கள் லவகுசா திரைப்படத்திற்கு இசையமைத்ததே ஒரு தனிக்கதை. இதில் சுவையான விஷயம் என்னவென்றால் முதன் முதலில் லவகுசா திரைப்படத்திற்கு இசையமைப்பதற்கு ஒப்புக் கொண்டவர் இசையமைப்பாளர் "பெண்டியாலா" நாகேஸ்வரராவ் ஆவார். அவர் லவகுசா திரைப்படத்திற்காக கேட்ட சம்பளத் தொகை மிக அதிகமாக இருக்கவே அந்த வாய்ப்பை லவகுசா திரைப்பட தயாரிப்பாளர்கள் கண்டசாலாவுக்கு வழங்கினார்கள். லவகுசாவின் பாடல்கள் பிரபலமான பிறகு அவ்வெற்றியைப்பற்றிக் கேள்விப் பட்ட பெண்டியாலா மிகவும் பெருந்தன்மையுடன் கண்டசாவுக்கு தான் நிகரல்ல என்று ஒப்புக் கொண்டு கூறியது மட்டுமின்றி அப்படத்தின் பாடல்களில் "தெய்வீகத்தன்மை" உணரப்பட்டதாக பெருந்தன்மையுடன் கூறினார். திரைப்படங்களுக்கு இசையமைத்தது மட்டுமில்லாமல் பகவத்கீதை, புஷ்ப விலபம், குண்ட்டி குமாரி, கோகோஷா மற்றும் திருவேங்கடமுடையானைப் பற்றிய நிறைய தெய்வபக்திப் பாடல்களுக்கு இசையமைத்தும் தேசபக்திப் பாடல்கள், இந்தியவிடுதலை இயக்கத்திற்கான பாடல்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆந்திர மாநிலம் கண்டசாலாவைப் போற்றும் வகையில் அவர் பிறந்த நாளான்று அவர் தபால் தலையை மத்திய அரசு மூலம் 11-02-2003 அன்று வெளியிட்டது. இசைப்போட்டிகள் அவர் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் அங்கு நடத்தப்பட்டு அதன் மூலம் இசைக்கலைஞர்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி முதல் பிப்ரவரி பதினொன்றாம் தேதி வரை ஆந்திராவில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் தொலைக்காட்சியும் இந்த இரு நாட்களுக்கு அவர் பாடிய பாடல்களை மட்டும் ஒலிபரப்பியும், ஒளிபரப்பியும் வந்தன. சமீபத்தில் ஆந்திரா வானொலி நிலையம் அவர் பாடிய பாடல்கள் ஒலிபரப்புவதை நிறுத்தி வைத்திருக்கிறது, இது ஏனோ தெரியவில்லை! திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கண்டசாலாவின் பெருமையை உலக மக்கள் யாவரும் அறியும் வண்ணம் அவரின் வெண்கலச்சிலை ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள ரவிந்திரபாரதி என்ற இடத்தில் தனது 25 வயது திரைஇசைஉலகப் பிரவேசத்தைச் குறிக்கும் வகையில் நிறுவியுள்ளார் என்பது விசேஷமாக குறிப்பிட வேண்டிய ஒன்று.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் இவரைக் கௌரவித்து “ஆஸ்தான வித்வானாக” ஆக்கியது.

தான் ஒரு சிறந்த பாடகராக இருந்தாலும் தனக்குப் பிடித்த பாடகர்களாக பிரபைல கர்நாடக இசைக் கலைஞர்கள் எம். பாலமுரளிகிருஷ்ணா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கிறார். இளைய தலைமுறைப் பின்னணிப் பாடகர்களை ஆதரித்தது மட்டுமில்லாமல் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மேலும் ஊக்குவித்திருக்கிறார்..
கண்டசாலா அவர்கள் தமது 52-ம் வயதில் 11-02-1974 அன்று காலமானார். அன்னாரது பூதவுடல் ஒரு பெரிய லாரியில் ஏற்றப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அவர் குரல் வளத்திற்கு மயங்கிய ரசிகப் பெரு மக்களின் கூட்டம் அலை மோதியதால் இந்த ஏற்பாடு. அவர் வாழ்ந்த தியாகராயநகர் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு உஸ்மான் சாலையிலிருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் எண்ணிக்கை மயானம் வரைக்கும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்று அஞ்சலி செலுத்தியதைக் கருத்தில் கொண்டால் “தோன்றிற் புகழோடு தோன்றுக“ என்று வள்ளுவப் பெருமானின் குறளுக்கேற்ப வாழ்ந்து மறைந்து ஒரு தனி சரித்திரம் படைத்தார் என்று கண்டசாலாவக் கூறலாம்.

குறிப்பு இசைத்தட்டு வடிவில் “தங்கத்தட்டு“ (Golden Disc) பரிசாகப் பெறுபவர்களுக்கு “ராயல்டி“ தொகை உரிய முறையில் தரப்படுவது வழக்கம். கண்டசாலா அவர்கள் அத்தகைய பெருமையைப் பெற்றவராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

SRI RAVI GHANTA SALA
S/O GHANTA SALA VENKATESWARA RAO
PARVATHI “CEEBROS” 1st FLOOR,
NO. 18 1st POES ROAD,
TEYNAMPET 1ST STREET,
CHENNAI – 600 018.
MOBILE – 9840 157 090
PH-044 24310708
044 24310709
http://profiles.lakshmansruthi.com/interview.php?uid=227

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...