Friday, August 21, 2015

வீர பாண்டிய கட்டபொம்மன்’ திரையில் உருவான வரலாறு! - பாகம் 2



Author: - பா. தீனதயாளன்

First Published: Aug 21, 2015 10:00 AM
Last Updated: Aug 21, 2015 10:36 AM

கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி


கு.மா.பாலசுப்ரமணியம் பாடல்கள் எழுத, ஜி.ராமநாதன் இசையில் அத்தனையும் சூப்பர் ஹிட். சிவாஜியின் ஜோடியாக முதலும் கடைசியுமாக எஸ்.வரலட்சுமி நடித்தார். சொந்தக்குரலில் அவர் பாடிய ‘சிங்காரக் கண்ணே...’ இன்றைக்கும் தேன் வார்க்கும்.

சக்தி கிருஷ்ணசாமியின் புகழ்பெற்ற கட்டபொம்மன் வசனம், கொலம்பியா ரெக்கார்டுகளில் ஆறு செட்களாக வெளியாகி பரபரப்பாக விற்பனை ஆனது.

*

கட்டபொம்மனை நம் கண் முன் நிறுத்திய வி.சி.கணேசனின் மனக்கூட்டிலிருந்து பாய்ந்து வரும் வார்த்தை அருவி உங்களுக்காக -

‘கம்பளத்தார் கூத்தில் கட்டபொம்மனைப் பார்த்துவிட்டு, என்றாவது ஒருநாள் கட்டபொம்மனாக நடிப்போம் என்ற நம்பிக்கையில், நான் அநாதை என்று சொல்லிக்கொண்டு நாடகக் கம்பெனியில் போய்ச் சேர்ந்தேன். ஆகவே, கட்டபொம்மனை நான் இறந்தாலும் மறக்கமாட்டேன்.

கட்டபொம்மன் நாடக, திரைப்பட நினைவுகளெல்லாம் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்துள்ளது. ஒருமுறை மூதறிஞர் ராஜாஜி, கட்டபொம்மன் நாடகத்தைப் பார்த்துவிட்டு, இடைவேளையின்போது மயங்கிக் கீழே விழுந்துவிட்டார்.

நான் உடனே அவர் அருகே ஓடிச்சென்று, என்னவென்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஒன்றுமில்லை, கவலைப்படாதே! ஸ்ட்ராங்கா ஒரு கப் காபி கொண்டு வா’ என்றார். கொடுத்தேன், குடித்தார். ‘நாடகத்தை நடத்துங்கோ’ என்றார். கட்டபொம்மனை முழுவதுமாகப் பார்த்து ரசித்துவிட்டு,

‘சிவாஜி, கட்டபொம்மனாக நன்றாக நடிக்கிறான். நாட்டுக்குத் தேவையான நல்ல கருத்துகளை இந்த நாடகம் மூலம் எடுத்துக் கூறுகின்றான். இதையெல்லாம் ஜீரணிப்பதற்கு உங்களுக்குத் திராணி இருக்கிறதா...?’ என்றார். அதை என்னால் மறக்கவே முடியாது.

வீரபாண்டிய கட்டபொம்மன் கதையில் வெள்ளையத்தேவன் என்றொரு ரோல் உள்ளது. அதில் முதலில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடிப்பதாக இருந்தது.

கட்டபொம்மன் தெலுங்கன்; மருது சகோதரர்கள் தமிழர்கள் என்று பேதம் காட்டி, ‘சிவகெங்கைச் சீமை’ படம் ஆரம்பமானதாக அப்போது பேசிக்கொண்டார்கள். ஆகவே, கட்டபொம்பனில் நடிக்க முடியாது என்று எஸ்.எஸ்.ஆர். கூறிவிட்டார்.

உடனே நான் ஒரு யோசனை செய்தேன். நடிகை சாவித்ரி அப்போது நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தார். அவர்களிடம் சென்று,

‘ஜெமினி கணேசனை இந்தப் படத்தில் நடிக்க என்னுடன் அனுப்பு. ஒரு அண்ணனுக்கு தங்கை ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால், இதுபோன்ற நேரத்தில்தான் செய்ய வேண்டும்’ என்று சொன்னேன்.

சாவித்ரி எனக்குத் தங்கைபோல். தங்கமான மனசு! அப்போது பேறுகால நேரமாக இருந்தாலும்கூட, அதைப் பெரிதாகக் கருதாமல், தன் கணவன் ஜெமினி கணேசனை என்னுடன் அனுப்பிவைத்தார்கள்.

1959, மே 16-ல் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ வெளியானது. நான் ஏழு வயதில் கண்ட கட்டபொம்மன் கனவு, என்னுடைய முப்பது வயதில் பூர்த்தியானது.



கட்டபொம்மனை ஆசிய-ஆப்பிரிக்க திரைப்பட விருதுக்காக இந்திய அரசு தேர்வு செய்தது. அதிலும், சில முக்கியமான ஆட்கள் நுழைந்து, ‘போட்டியில் கட்டபொம்மன் கலந்துகொள்ளக்கூடாது’ என்று தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். வேறு ஒரு படத்தையும் நகல் எடுத்து அனுப்பினார்கள். ஆனால், கட்டபொம்மன் மட்டுமே தகுதி உடையது என்று அதனையே அனுப்பிவைக்குமாறு சர்க்கார் கூறிவிட்டது.

அந்த விழாவுக்காக நான், பி.ஆர்.பந்துலு, பத்மினி ஆகியோர் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்குச் சென்றோம். கட்டபொம்மன் திரையிடப்பட்டது.

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்துக்கு பெஸ்ட் ஹீரோ, பெஸ்ட் மியூசிக் டைரக்டர், பெஸ்ட் டான்ஸர், பெஸ்ட் ஸ்டோரி அவார்டுகள் கிடைத்தன.

என்னை மேடைக்கு அழைத்தார்கள். எழுந்து சென்றேன். படத்தில் கட்டபொம்மனைப் பார்த்து, நான் ஆறடி அல்லது ஏழடி இருப்பேன் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் நான் ஐந்தடிதான் இருந்தேன்.

நான் மேடைக்குப் போனவுடன் எல்லோரும் எழுந்து நின்று ஐந்து நிமிடம் தொடர்ந்து கை தட்டினார்கள். எனக்கு அப்போது திடீரென்று மயக்கமே வந்துவிட்டது. கீழே விழ இருந்தேன். பக்கத்தில் நின்ற பத்மினி என்னைப் பிடித்துக்கொண்டார்.

அதிகக் குளிராக இருந்ததால், குளொஸ் கோட் அணிந்திருந்தேன். அதையும் மீறி பக்கெட்டிலிருந்து தண்ணீர் ஊற்றுவதுபோல் உடம்பெல்லாம் வியர்த்து வழிந்தது.

அவ்வளவு இன்ப அதிர்ச்சி! அத்தனை பெரிய பெருமை கிடைக்குமென்று நான் ஒரு போதும் நினைத்தது கிடையாது. எவ்வளவு ஆர்ட்டிஸ்டுகள் இருக்கிறார்கள். அவர்களில் எனக்கு பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட் அவார்ட் கிடைத்ததென்பது ஆண்டவன் அருளல்லவா? இப்பெருமை எல்லாம் என் குருவைத்தான் சேரும்.

விருது வழங்கும் விழாவில், எகிப்து அதிபர் நாசர் கலந்துகொள்ளவில்லை. சிரியா போயிருந்தார். விழா முடிந்ததும், நாசர் அவர்களின் வீட்டுக்குப் போனேன். நாசரின் மனைவியைச் சந்தித்தேன்.

‘அவர் கையால் விருது கொடுப்பதற்கு அவகாசம் இல்லை. நாசர் அவசர அவசரமாக சிரியா போய்விட்டார். அதிபரின் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார் அம்மையார்.

‘மன்னிப்பு எதற்கு அம்மா. இந்தியாவுக்கு மிஸ்டர் நாசர் வந்தாரென்றால், என்னுடைய விருந்தாளியாகக் கொஞ்ச நேரமாவது இருக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். அதை மட்டும் அவரிடம் கூறி நிறைவேற்றி வையுங்கள்’ என்றேன்.

இறைவன் செயலால், எகிப்து அதிபர் நாசர் இந்தியாவுக்கு வந்தார். உடனே நான் நேருஜிக்குக் கடிதம் எழுதினேன். ‘மிஸ்டர் நாசர் சென்னை வரும்போது சிறிது நேரம் என்னுடனும், என் குடும்பத்துடனும் விருந்தாளியாகக் கலந்துகொள்ள வேண்டும்’ என்று வேண்டினேன்.

சென்னையில் சில்ரன் தியேட்டர் (கலைவாணர் அரங்கம்) முழுவதும் அழகாக அலங்காரம் செய்தோம். மகாத்மா காந்தியின் ஃபோட்டோக்களை ஒட்டினோம். ஒரு ஃபர்லாங் தூரம் ரெட் கார்பெட் போட்டோம். மூன்றரை லட்ச ரூபாய் செலவில் வெள்ளியில் ஒரு ஷீல்டை உருவாக்கினோம்.

சிதம்பரம் நடராஜர் சிலைக்கு இருபுறமும் எகிப்து நாட்டு பிரமிட் வடிவமும், தஞ்சாவூர் கோபுரத்தின் எழில் உருவமும், அவற்றின் இரு பக்கத்திலும் ஒரு யானை மற்றும் ஒட்டகச் சிற்பமும் வைத்தோம். ஆங்கிலத்தில் திருக்குறள் மற்றும் டெல்லியில் இருந்து ஒரு மவுல்வியை வரவழைத்து, அவர் எழுதித் தந்த அரபு மொழி வாசகங்களும் பொறிக்கப்பட்ட தங்கத் தகட்டையும் ஷீல்டில் பதித்து, நாசருக்குப் பரிசாக வழங்கினேன்.

அரசு அதிகாரிகள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, நாசரை என்னுடன் விருந்தினராக அனுப்பிவைத்தனர். ஆனால் நாசர், என்னுடன் மூன்றரை மணி நேரம் இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மனை கவுரவித்ததற்காக என் சார்பிலும், நம் நாட்டின் சார்பிலும் அவருக்கு நன்றியைத் தெரிவித்தோம்.’

*

ஆசிய-ஆப்பிரிக்கப் படவிழாவுக்கு, பந்துலு தலைமையேற்று தன் சொந்த செலவில் நடிகர் திலகம் - பத்மினி ஆகியோரை அழைத்துச் சென்றார். பரிசு பெற்றுத் திரும்பிய சிவாஜி கணேசனுக்கு, 1960, மார்ச் 12-ல் சென்னை விமான நிலையத்தில் மாபெரும் கோலாகல வரவேற்பை வழங்கியது கலை உலகம்.

வெளிநாட்டில் விருது பெற்றுத் திரும்பிய முதல் தமிழ்ப்படமான கட்டபொம்மனுக்கு, நமது டெல்லி சர்க்கார் வழங்கியது வெறும் நற்சான்றிதழ் பத்திரம்! அந்த ஆண்டுக்கான வெள்ளிப் பதக்கம், சிவாஜி கணேசனின் ‘பாகப்பிரிவினை’ படத்துக்குக் கிடைத்தது.

கயத்தாறில் கணேசன்!

கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பகுதி கயத்தாறு. அங்கு, 1971 ஜூலையில், எங்கிருந்து பார்த்தாலும் தெரியுமாறு, மிக உயர்ந்த ஒரு பீடத்தில், கட்டபொம்மனுக்கு மிகப் பிரம்மாண்ட சிலை ஒன்றை அமைத்தார் நடிகர் திலகம். அதற்காக, தன் சொந்தப் பணத்தில் அங்கு 47 சென்ட் நிலம் வாங்கினார்.

சிலைத் திறப்பு விழா, நீலம் சஞ்சீவ ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கட்டபொம்மனின் சிலையை காமராஜர் திறந்துவைத்தார். எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர். போன்று ஓரிருவர் தவிர, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகும் கயத்தாறில் கூடி, கட்டபொம்மனின் பெருமை பேசியது.

1999, அக்டோபர் 16-ல், கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டதன் 200-வது ஆண்டு நினைவு புகழாஞ்சலி விழா, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது. அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் கட்டபொம்மன் நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. கட்டபொம்மன் தபால் தலை வெளிவரக் காரணமாக இருந்த வை.கோ. அதனைப் பெற்றுக்கொண்டார்.

அவ்விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் சிவாஜி கணேசன். அவர் பேசியதிலிருந்து -

‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற மாபெரும் வீரன் தூக்கிலிடப்பட்ட இடம், தற்போது எனது சொத்தாகும். அந்த நிலத்தை என் நண்பராகிய கலைஞரிடம் கொடுக்கிறேன். அவர், தமிழக அரசு மூலம் அதைச் செம்மைப்படுத்தி, அதில் வருடந்தோறும் விழா நடத்த வேண்டும் என்று பணிவாகக் கேட்கிறேன்’.



தமிழக முதல்வர், தன் உரையில் -

‘இங்கே நம்முடைய செவாலியர் சிவாஜி விடுத்த வேண்டுகோளை, அருமைச் சகோதரரின் அன்புக் கட்டளையாக ஏற்றுக்கொண்டு, இன்றைக்கு இந்த விழாவை அரசின் சார்பில் நடத்திக்கொண்டிருக்கிறோம். கயத்தாறிலே சிவாஜியால் வைக்கப்பட்ட கட்டபொம்மன் சிலை இருக்கின்ற அந்த இடத்தைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறேன் என்று தந்தார். பெற்றுக்கொண்டேன்.

வறண்டு காட்சி தருகின்ற அந்த இடத்தில் சிவாஜி எழுப்பியிருக்கின்ற, அந்த நீண்டு உயர்ந்த கம்பத்தின் உச்சியில் அமைந்திருக்கின்ற கட்டபொம்மன் சிலைக்கு மேலும் அழகு ஊட்டுகின்ற வகையில், அவர் தந்துள்ள அந்த இடத்தில், ஒரு அழகான பூஞ்சோலை அமைக்கப்படும் என்பதை நான் இங்கே தெரிவித்துக்கொள்கிறேன்’.

*

பத்மினி பிக்சர்ஸின் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட அநேக படைப்புகளின் நெகடிவ் உரிமையைக்கூட பந்துலு தன் வசம் வைத்திருக்கவில்லை. பிரம்மாண்டத் தயாரிப்புகளுக்கு ஆகும் செலவினங்களுக்காக, அவற்றையும் சேர்த்தே விற்றுவிட்டார். கட்டபொம்மனின் ஒரிஜினல் நெகடிவ் சேதமாகிப் போனது.

பின்னர், பூனா திரைப்படக் கல்லூரியின் ஆவணக் காப்பகத்தில் இருந்த கட்டபொம்மனின் ஹிந்தி டப்பிங் பிரின்ட்டில் இருந்து (ஒலி நீக்கிய) டூப் நெகடிவ் போட்டு, இங்கிருந்த தமிழ்ப் படத்தின் நெகடிவ்வில் இருந்து ஒலி சேர்த்தார்கள்.

நாடகமாகவும் சினிமாவாகவும் கட்டபொம்மனை மக்கள் முன் சிவாஜி கணேசன் கொண்டுசெல்லாமல் இருந்திருந்தால், கட்டபொம்முவுக்கு இத்தகைய உலக வெளிச்சம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம். மக்களால் நிறைய விடுதலை வீரர்கள் மறக்கப்பட்டதுபோல், கட்டபொம்முவும் காலாவதி ஆகியிருக்கக்கூடும்.

இரு வேறு நூற்றாண்டுகளில் வாழ்ந்து மறைந்த கட்டபொம்மனையும் கணேசனையும் பிரிக்க இயலாதபடி, காலம் அவர்களை ஒரு சேரக் கட்டிப் போட்டுவிட்டது. இருவரின் புகழும் ஒரு கொடியில் இரு மலர்களாக என்றும் இணைந்தே வாசம் வீசும்!

ஒன்று நிஜம்! மற்றது நிழல். நிழலால் நிஜம், கலைக் கரூவூலம் ஆனது.

*

1984, ஆகஸ்டு 15-ல், மறு வெளியீட்டில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ பல ஊர்களில் வெற்றிகரமாக 50 நாள்களைக் கடந்து ஓடியது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அரசு, கட்டபொம்மனுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளித்தது. பல கோடி மக்கள், மிக மலிவான கட்டணத்தில் கண்டுகளிக்க வழி அமைத்தது.

ஒரு வேண்டுகோள்: மாவீரன் அழகு முத்துக்கோன், மகாகவி பாரதியார், வ.உ.சிதம்பரனார், ம.பொ.சி. என, எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் தலைநகர் சென்னையில் சிலை அமைந்துள்ளது. ஆனால், முதல் சுதந்தர முழக்கம் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்குச் சிலை இல்லாதது வியப்பைத் தருகிறது; ஏமாற்றம் அளிக்கிறது.

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அருகில், பட்டொளி வீசிப் பறக்கும் நமது தேசியக் கொடியின் நிழலில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை அமைத்தல் பொருத்தம். ஒவ்வோர் ஆண்டும் சுதந்தர தின விழாவில், கட்டபொம்மனுக்கு முதல் மாலை அணிவித்து விழாவைத் தொடங்குதல் சிறப்பாகும்.

மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள், இந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024