Tuesday, August 4, 2015

வாழ்க்கை எனப்படுவது யாதுஎனின்...By மணவை எஸ். கார்த்திக்

இன்றைய காலக்கட்டத்தில் கடன் தொல்லை, குடும்ப வறுமை, தொழிலில் நஷ்டம், காதலில் தோல்வி, தேர்வில் தோல்வி போன்றவற்றால் தற்கொலை செய்துகொள்வது ஊடகங்களில் நாள்தோறும் தவறாமல் இடம் பெறும் செய்தியாகி விட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும், பெருநகரங்களின் அடிப்படையில் சென்னை முதலிடத்தில் உள்ளதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஓர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் தற்கொலைச் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன என்பது குறித்த ஆய்வை நடத்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம், ஆய்வு முடிவுகளை அண்மையில் வெளியிட்டது.
அந்த ஆய்வில் 2014-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 15 பேர் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அங்கு கடந்த ஆண்டில் 16,307 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள தமிழகத்தில் 16,122 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்களில் தற்கொலை எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
இங்கு கடந்த ஆண்டு மட்டும் 2,214 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பட்டியலில் பெங்களூரு (1,906) இரண்டாவது இடத்திலும், தில்லி (1,847) மூன்றாவது இடத்திலும் உள்ளன.
ஏன், எதற்காக இந்தத் தற்கொலைகள் நிகழ்கின்றன? தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதிலுமே பெரும்பாலான தற்கொலைகளுக்குக் கடன் தொல்லைதான் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. விவசாயிகளுக்கு விவசாயத்தில் நஷ்டம் என்றால், தொழிலதிபர்களுக்கு வர்த்தகத்தில் நஷ்டம், அவ்வளவுதான் வித்தியாசம்.
இரண்டாவதாக பொருளாதார ஏற்றத் தாழ்வுகள். மூன்றாவதாக குடும்பப் பிரச்னை, காதல் தோல்வி, வாழ்க்கையில் விரக்தி இப்படி பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இப்படி, தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் அதுதான் காரணமா?
அதுவும் ஒரு காரணமாக இருக்குமே தவிர, அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது. வேறு என்னதான் காரணம், சற்றே சிந்தித்துப் பார்த்தோமானால்...
வாழ்க்கை என்பது என்ன? எவ்வாறு வாழ வேண்டும் எனத் திட்டமிட்டு வாழத் தெரியாத கோழைகளே தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.
குறிப்பாக, வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்களையும், தோல்விகளையும் தாங்கிக் கொள்ளக் கூடிய மன வலிமையும், மன உறுதியும் இல்லாதவர்களும், எதையும் எதிர் கொள்ளும் மனத் துணிவும், மனப் பக்குவமும் இல்லாதவர்களும்தான் தற்கொலையைத் தேர்வு செய்கின்றனர்.
மேலும், எதிர்மறையான சிந்தனைகளும் தற்கொலைகளுக்கு முக்கியக் காரணியாகத் திகழ்கின்றன. தற்கொலை செய்து கொண்டவர்களின் பட்டியலைப் புரட்டிப் பார்த்தால் இது நன்கு புரியும்.
உதாரணமாக, பொருளாதார ஏற்றத் தாழ்வை எடுத்துக் கொள்வோம். பணம் இருப்பவன்தான் இந்த உலகத்தில் வாழ முடியும் என்றால், பரம ஏழைகளும், பிச்சைக்காரர்களும் எப்படி வாழ்கின்றனர். அடுத்ததாக கடன் தொல்லையை எடுத்துக் கொண்டால், யாருக்குத்தான் கடன் இல்லை அல்லது யார்தான் கடன் வாங்காமல் இருக்கிறார்கள்?
குடிசைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் முதல் கோடிக்கணக்கில் கொட்டி தொழில் செய்பவர்கள் வரை தனி நபரிடமோ, வங்கிகளிலோ கடன் வாங்கித்தானே தொழிலை நடத்துகின்றனர்? இவர்கள் அனைவரும் தற்கொலையா செய்து கொள்கிறார்கள்?
காதல் தோல்வி, குடும்பத் தகராறு என அனைவரும் தற்கொலைதான் முடிவு என்று இறங்கி விட்டால் இந்த நாட்டில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்?
வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும், பிரச்னை இல்லாத வாழ்க்கை அலுத்துப் போய்விடும். கணவன், மனைவிக்குள் ஊடல் இருந்தால்தான் கூடலும் இருக்கும். அப்போதுதான் வாழ்க்கை இனிக்கும்.
சந்தோஷம் மட்டுமே வாழ்க்கையாக இருந்து விட்டால், அது நமக்கு சந்தோஷத்தைத் தராது. இடையிடையே சிறிது துக்கமும் இருந்தால்தான் சந்தோஷத்தின் மகிமை நமக்குப் புரியும். அதனால்தான், நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்று அன்றே கூறியிருக்கிறார்கள்.
வாழ்க்கை என்பது என்ன... 'LIFE IS A BED OF ROSE, BUT IT HAS FULL OF THORNS'. அதாவது, "வாழ்க்கை என்பது அழகான ரோஜாப் பூ படுக்கை போன்றது, ஆனால், ரோஜாப் பூவில் இருப்பதுபோல் அந்தப் படுக்கையிலும் முள்கள் நிறைந்திருக்கும்' என்று வாழ்க்கையைப் பற்றி ஓர் ஆங்கிலக் கவிஞர் அழகாகச் சொல்லி இருக்கிறார்.
இதுதான் வாழ்க்கை. வாழ்க்கையில் இன்பமும், துன்பமும், நல்லதும், கெட்டதும் இருக்கத்தான் செய்யும். அதை எதிர்கொள்ளும் மனப் பக்குவம்தான் வேண்டும். வாழ்க்கையில் சந்தோஷம் வரும்போது துள்ளிக் குதிப்பதும், துன்பம் வரும்போது துவண்டு விடுவதும் கூடாது.
வாழ்க்கையை "ஸ்போர்ட்டிவ்'ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று மாற்றுத் திறனாளிகளையும், திருநங்கைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனையோ தடைகளைத் தாண்டி இந்த சமுதாயத்தில் அவர்கள் வாழவில்லையா? அல்லது அவர்களது குடும்பத்துக்காக உழைக்கவில்லையா? அவர்கள் எல்லோரும் தற்கொலையா செய்து கொண்டார்கள்?
வாழ்க்கையே ஒரு போர்க்களம், அதை வாழ்ந்துதான் பார்க்கணும். அதற்கு நிச்சயம் மனதில் உறுதி வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024