Thursday, August 6, 2015

ஆபாசத்தை வேரறுப்போம்

Dinamani

வகுப்பறைக்குள் செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்த சில மாணவிகள் மீது தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அந்த மாணவிகளின் பெற்றோரை அழைத்து ஆசிரியர்கள் எச்சரித்து அனுப்பினர். அந்தப் பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
கல்லூரி மாணவ, மாணவிகளின் நிலைமை இன்னும் மோசம். இணைய வசதியுடன் கூடிய செல்லிடப்பேசி இல்லாத கல்லூரி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் சொற்பம். எந்த அதிநவீன வசதியும் நன்மையும், தீமையும் கலந்ததுதான்.
இணைய வசதியை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்துவோரைவிட, கேளிக்கைக்கும், பாலுணர்ச்சித் தூண்டுதலுக்கும் பயன்படுத்துவோரே அதிகம் பேர்.
இங்குதான் கட்டுப்பாடுகளும், சட்டங்களும் தேவையாகின்றன. குறிப்பாக, பாலியல் வன்முறைக் குற்றங்களில் கைது செய்யப்பட்ட பலர், செல்லிடப்பேசியில் ஆபாசப் படம் பார்த்ததே குற்றமிழைக்கத் தூண்டியதாக வாக்குமூலம் அளித்துவரும் நிலையில், அதன் இணையப் பயன்பாட்டைக் கட்டுக்குள் வைப்பது அவசியமாகியுள்ளது.
பாலுணர்ச்சி உயிர்களுக்குப் பொதுவானது. ஆனால், மனிதன் மட்டுமே பாலுறவை விஷமத்தனமான கேளிக்கையாக்கி இருக்கிறான். அந்தரங்கமாக நடைபெற வேண்டிய பாலுறவைப் பதிவு செய்து அதை வர்த்தகமும் செய்கிறான். இதற்கு உதவுகின்றன ஆபாச இணையதளங்கள்.
பாலுறவைத் தூண்டும் இலக்கியங்களும், திரைப்படங்களும் இதற்கு முன்னரும் இருந்துள்ளன. ஆனால், அவற்றை வயது வந்தோர் மட்டுமே, அதுவும் குற்ற உணர்ச்சியுடன் தனியே படிக்கவும் பார்க்கவும் செய்தனர்.
இதன் அடுத்தகட்ட வளர்ச்சியான ஆபாச விடியோ பேழைகளும்கூட ரகசியமாகவே ரசிக்கப்பட்டன.
ஆனால், நவீன செல்லிடப்பேசிகளின் வருகை நமது வெட்கமின்மையை வெளிப்படுத்தும் கருவியாகிவிட்டது. பயணிகள் சூழ்ந்த பேருந்திலும், ரயிலிலும்கூட செல்லிடப்பேசியில் சிலர் ஆபாசப் படம் பார்க்கிறார்கள்.
இந்த ஆபாசப் படத்தைப் பார்க்கும் செயலே அடுத்த நிலையில் பலாத்காரத்துக்கும் இட்டுச் செல்கிறது. 2012-ஆம் ஆண்டு தில்லியில் ஓடும் பேருந்தில் பலவந்தப்படுத்தப்பட்ட நிர்பயாவின் அவலத்துக்குக் காரணமான குற்றவாளி ஒருவன், தான் பார்த்த ஆபாசத் தளமே தன்னை மிருகமாக்கியது என்று சொன்னதை மறக்க முடியுமா?
இன்று உலக அளவில் கோடிக்கணக்கான ஆபாச இணையதளங்கள் இருப்பதாக புள்ளிவிரங்கள் கூறுகின்றன. செல்லிடப்பேசியில் இவை திறந்தவெளியில் இலவசமாகவே கிடைக்கின்றன.
எனவேதான், கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்குரைஞர் உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்குத் தொடுத்தார். மிக மோசமான 850 ஆபாச இணையதளங்களைப் பட்டியலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அவர், இந்தத் தளங்களால் இளைய சமுதாயம் சீரழிக்கப்படுவதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து, "இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமானது. இந்த விஷயத்தில் அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டும். மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?' என்று கடந்த ஜூலை 8-ஆம் தேதி கேள்வி எழுப்பினார். தவிர, இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையுடன் ஆகஸ்ட் 10-இல் பதிலளிக்குமாறும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மத்திய அரசு 857 ஆபாச இணையதளங்களைத் தடை செய்தது. தொலைதொடர்புத் துறையின் கட்டளைக்கு இணங்கி, மேற்படி இணையதளங்களை இணைய சேவை அளிக்கும் நிறுவனங்கள் (ஐ.எஸ்.பி.) முடக்கியுள்ளன. இதற்கு சமூக வலைதளங்களில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆபாசத் தளங்கள் கருத்துரிமையின் சின்னம் என்று சிலர் முழங்குகிறார்கள். பெண்களை போகப் பொருளாகச் சித்திரிப்பதுடன் பாலியல் குற்றங்களுக்கும் வழிவகுக்கிற ஆபாசத் தளங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது?
உண்மையில், அரசு மிகவும் மென்மையான நடவடிக்கையையே எடுத்துள்ளது. இப்போதும்கூட சமூகக் கட்டுப்பாடுகளை மீறாத யூ-டியூப் போன்ற தளங்கள் தடுக்கப்படவில்லை. சிலரது ஆட்சேபங்களை ஏற்று பல இணையதளங்களின் முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
தவிர, மெய்நிகர் கணினி இணையத் தொழில்நுட்பம் (வி.பி.என்.) மூலமாக விருப்பமுள்ளவர்கள் தங்கள் வயதை உறுதி செய்து, இத்தளங்களைக் காண்பதை அரசு தடுக்கவில்லை.
இப்போதைய பிரச்னை என்னவென்றால், பருவ வயதை எட்டாதவர்களும் கூட மிக எளிதாக செல்லிடப்பேசியில் ஆபாசத் தளங்களை எந்தக் கட்டுப்பாடும் இன்றிக் காண முடிவதுதான். எனவே, அரசின் இந்த நடவடிக்கையை பெண்ணியவாதிகளும், பண்பாட்டை நேசிப்பவர்களும் ஆதரிக்க வேண்டும்.
பொதுத் தளத்தில் எழும் கூக்குரல்களின் எண்ணிக்கை ஆபாசத் தளங்களுக்கு சாதகமாகிவிட்டால், அரசு தனது நிலையிலிருந்து பின்வாங்கிவிடும்.
இப்போதும்கூட நீதிமன்ற உத்தரவால்தான் இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஆபாசத் தள விவகாரத்தில் அரசு விலகியிருக்க வேண்டும் என்ற கருத்துப் பிரசாரம் செய்யப்படும் நிலையில், எதிர்காலத் தலைமுறையினரின் நலனை விரும்பும் அனைவரும் அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும்.
பிஞ்சிலேயே வெம்பிவிடும் வாலிப வயோதிக அன்பர்களாக நமது இளைஞர்கள் மாறாமல் தடுக்க வேண்டுமானால், பெண்களின் மாண்பு காக்கப்பட வேண்டுமானால், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவதையும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களையும் ஓரளவு தடுக்க வேண்டுமானால், இத்தகைய இணையதளங்களை கட்டாயம் முடக்கத்தான் வேண்டும்.

No comments:

Post a Comment

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Court

Employee Appointed Through Valid Process Can't Be Denied Regularization If Performing Permanent Role For Considerable Time: Supreme Cour...