Thursday, August 6, 2015

இனி பிரீமியம் ரயில்கள் இல்லை, சுவிதா மட்டுமே!

கடந்த இரண்டு ஆண்டுகளாக ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் சிறப்பு ரயில்கள் இனி இயக்கப்படமாட்டாது. அதற்குப் பதிலாக, சுவிதா சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே அமைச்சகத்தால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில் சேவை பயணிகளிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. பல்வேறு முன்பதிவு விதிமுறைகளைக் கொண்டதாகவும், கட்டணம் அதிகமிருந்ததாலும் பிரீமியம் ரயில் திட்டத்தைப் பயணிகள் முழுவதுமாகப் புறக்கணித்தனர். அதிலும், தமிழகத்தில் பிரீமியம் ரயில்களை பயணிகள் கண்டு கொள்ளவேயில்லை என்பதே உண்மை.
தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் ரயில்கள் பெரும் நஷ்டத்தையே பெற்றுத் தந்தன.
இதையடுத்து பிரீமியம் ரயில் திட்டத்தின் குறைகளைக் களைந்து, சுவிதா என்ற பெயரில் புதிய சிறப்பு ரயில்கள் திட்டத்தைப் படிப்படியாக ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
சுவிதாவின் சிறப்பு: ரயில் பயணச்சீட்டு முன்பதிவில் காத்திருப்புப் பட்டியல் இல்லை, அனைவருக்கும் குறைந்தபட்சம் இருக்கை வசதி உள்ளிட்ட பல அம்சங்களுடன் சுவிதா ரயில்கள் இயக்கப்படுகின்றன. பண்டிகை மற்றும் கோடை காலங்களில் பயணிகள் கூட்டத்தைச் சமாளிக்கவும், இந்த சுவிதா ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
புதிதாக அறிமுகம் செய்யப்படும் சுவிதா ரயில்களில் முன்பதிவு செய்யும் அனைத்துப் பயணிகளுக்கும் குறைந்தபட்சம் உறுதிசெய்யப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை வசதி வழங்கப்படும். அதேசமயம், எந்தப் பயணியும் காத்திருப்புப் பட்டியலின் கீழ் கொண்டு வரப்படமாட்டார்கள்.
நாட்டில் முதல்முறையாக சுவிதா ரயில் கோராக்பூரிலிருந்து ஆனந்த்விகார் நகருக்கு இயக்கப்பட்டது,
இணையத்திலும், கவுன்ட்டரிலும்: சுவிதா சிறப்பு ரயிலுக்கான முன்பதிவை இணையதளத்திலும், பயணச் சீட்டு கவுன்ட்டர்களிலும் பெறலாம். ஆனால், பிரீமியம் ரயில் முன்பதிவு இணையதளத்தில் மட்டுமே செய்யும்படியாக இருந்தது.
சுவிதா ரயில்களுக்கான முன்பதிவு நாள்கள் குறைந்தபட்சம் 10 நாள்களாகவும், அதிகபட்சம் 30 நாள்களாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரீமியம் ரயில்களுக்கு 15 நாள்களுக்கு முன்பு மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு இருந்தது. அது சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எப்படி: பிரீமியம் ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் மிக அதிகளவில் இருப்பதாக மக்களிடமிருந்து புகார்கள் வந்தன. மூன்றாம் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி கட்டணத்தைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாகவும் புகார் இருந்தது. இந்தக் குறைகள் அனைத்தும் சுவிதா ரயில்களில் நீக்கப்பட்டுள்ளன.
சுவிதா ரயில்களில் பயணச்சீட்டு கட்டணம் வழக்கமான தட்கல் கட்டணத்தைக் காட்டிலும் 20 சதவீதம் மட்டுமே அதிகமாக இருக்கும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில் புறப்படுவதற்கு சிலமணி நேரம் வரை பயணச்சீட்டு விற்பனையாகாமல் இருந்தால், அந்த பயணச்சீட்டுகள் குறைந்தபட்ச விலையில் விற்பனை செய்யப்படும்.
மேலும், பயணச்சீட்டு கட்டணத்தோடு, சேவைவரி உள்ளிட்டவை சேர்க்கப்படும். அதேசமயம், இந்த வகை ரயில்களில் எந்தப் பிரிவினருக்கும் சலுகையோ, கட்டணத்தில் தள்ளுபடியோ அளிக்கப்படாது. குழந்தைகளுக்குக்கூட முழுக்கட்டணம் வசூல்செய்யப்படும்.
மூன்று பிரிவுகள்: சுவிதா ரயில்கள் மூன்று பிரிவுகளாக இயக்கப்படவுள்ளன. ராஜதானி விரைவு ரயில்கள் போன்று முழுûமாக ஏ.சி. வசதி செய்யப்பட்டு இடையில் நிறுத்தம் இல்லாத ரயிலாகவும், இரண்டாவதாக துரந்தோ விரைவு ரயில் போன்று சில இடங்களில் மட்டும் நிறுத்தம் உள்ளது போன்றதாகவும் இயக்கப்படவுள்ளன. மூன்றாவதாக, அனைத்து இடங்களிலும் நின்று செல்லும் ரயிலாக இயக்கப்படும்.
இந்த ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் பயணச் சீட்டுடன், அரசு அங்கீகரித்துள்ள ஏதாவது ஓர் அடையாளச் சான்றை டிக்கெட் பரிசோதனையின் போது காட்டிக்கொள்ளலாம். இந்த சுவிதா ரயில்கள் தவிர்க்கமுடியாத நேரங்களில் மட்டுமே ரத்து செய்யப்படும். ஒருவேளை ரத்து செய்யப்படும் பட்சத்தில் பயணிகளின் கட்டணம் அவர்களின் வங்கிக்கணக்கில் அடுத்த சில நாள்களில் முறையாக திருப்பிச் செலுத்தப்படும்.

No comments:

Post a Comment

DRI seizes 20kg gold worth ₹15 crore from 25 flyers Passengers Had Arrived From Singapore

DRI seizes 20kg gold worth ₹15 crore from 25 flyers Passengers Had Arrived From Singapore  Venkadesan.S@timesofindia.com 12.11.2024  Chennai...